சாக்சஃபோனில் சாகசம் செய்யும் பார்வையற்ற 10 வயது பள்ளி மாணவி!

சாக்சஃபோனில் சாகசம் செய்யும் பார்வையற்ற 10 வயது பள்ளி மாணவி!
நிரஞ்சனா

கோவை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளி சிறுமியான 10 வயது நிரஞ்சனா, சாக்சஃபோன் வாசிப்பில் தனது தனித்திறனை வெளிப்படுத்தி பாரட்டுகளை அள்ளி வருகிறார்.

ஆர்.எஸ்.புரத்தின் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அய்யாசாமி-நந்தினி தம்பதியினர். இவர்களது மகள்கள் அர்ச்சனா (12), நிரஞ்சனா (10). இதில், அர்ச்சனா பார்வைத்திறன் குறைபாட்டுடன் ஆட்டிஸம் பாதிப்பும் உள்ள குழந்தை. அடுத்த மகள் நிரஞ்சனாவுக்கும் பார்வைக் குறைபாடு என்று தெரிந்த போது, ‘மக்களை எப்படி கரை சேர்ப்பது’ என்று பெற்றோர் சற்றே கலங்கித்தான் போனார்கள். இருந்த போதும் அவர்களை வீட்டுக்குள்ளேயே முடக்கிப் போட்டுவிடாமல், அவர்களுக்குள் இருந்த தனித் திறனைத் தேடிக் கண்டுபிடித்து அதில் அவர்களை பட்டைதீட்டும் முயற்சியில் இருவரும் இறங்கினார்கள்.

ஏற்றுக்கொள்ளாத பயிற்சியாளர்கள்

சிறுவயதில் இருந்தே இசை மீது நிரஞ்சனாவுக்கு ஆர்வம் இருக்கவே, முதலில் கீபோர்டு வாசிக்க கற்றுக்கொடுக்க பயிற்சியாளர்களை அணுகியுள்ளனர். மாற்றுத்திறனாளி குழந்தை என்பதால், பல பயிற்சியாளர்கள் நிரஞ்சனாவை நிராகரித்துவிட்டனர்.

விடா முயற்சியுடன் போராடியதால், கடைசியாக ஒரு பயிற்சியாளர் நிரஞ்சனாவுக்கு பயிற்சி அளிக்க சம்மதித்தார். அவரிடம் குறுகிய காலத்திலேயே கீபோர்டு, சாக்சஃபோன் வாசிக்க கற்றுக் கொண்டார் நிரஞ்சனா. தற்போது, மற்றவர்கள் வியக்கும் அளவுக்கு தேசிய கீதம், தனி மெட்டுகள், சினிமா பாடல்கள் என சரளமாய் சாக்சஃபோனில் வாசித்து அசத்துகிறார் நிரஞ்சனா. தற்போது கோவையில் பள்ளி, கல்லூரி விழாக் களிலும் அரசு நிகழ்ச்சிகளிலும் நிரஞ்சனாவை சாக்சஃபோன் வாசிக்க வைக்கப் பலரும் போட்டிபோட்டு அழைக்கிறார்கள்.

பேட்டிக்காக நிரஞ்சனாவின் வீட்டுக்குச் சென்றிருந்த நானும்கூட அந்தச் சிறுமியின் சாக்ஸ் இசையில் லயித்துத்தான் போனேன். “எதிர்கால லட்சியம் என்ன பாப்பா?” என்று நிரஞ்சனாவைக் கேட்டேன்.

“எனக்கு மியூசிக்னா ரொம்ப பிடிக்கும் அங்கிள். சின்ன வயசுல இருந்தே அம்மா, பாட்டெல்லாம் போட்டுக் கொடுப்பாங்க. அத கேட்பேன். சாக்சஃபோன் வாசிக்கறது கொஞ்சம் கஷ்டம்தான். அதுல ஆர்வம் இருக்கறத அம்மாகிட்ட சொன்னேன். அதுக்கு பயிற்சி கொடுக்க அம்மா ஏற்பாடு பண்ணாங்க. சீக்கிரமே நல்லா வாசிக்கக் கத்துக்கிட்டேன். இப்ப எல்லாருமே நான் சாக்சஃபோன் வாசிக்கிறத ரசிச்சுக் கேக்குறாங்க. எதிர்காலத்துல இசை ஆசிரியராகி, ஒரு இசைப் பள்ளியை நடத்தணும்னு ஆசை இருக்கு. அதுக்கு முன்னாடி, நம்ம முதல்வர் ஐயா முன்னிலையில சாக்சஃபோன் வாசிச்சுக் காட்டணும்” என்று மகள் சொன்னதை, பக்கத்தில் நின்ற அவளது அப்பாவும் அம்மாவும் பெருமிதம் பொங்கப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வாங்கிக் குவித்த பரிசுகள்...
வாங்கிக் குவித்த பரிசுகள்...

பன்முக திறமை... பள்ளிக்குப் பெருமை!

அர்ச்சனாவும் நிரஞ்சனாவும் கோவை, சாய்பாபாகாலனி அருகே ராமலிங்கம் காலனியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கின்றனர். அந்தப்பள்ளியின் தலைமை ஆசியர் மாலா, நிரஞ்சனா பற்றி கூறும்போது, “எங்கள் பள்ளியில் 15 மாற்றுத்திறனாளி குழந்தைகள் படிக்கிறாங்க. அவங்க ஒவ்வொருவரிடமும் ஒரு தனித் திறமை இருக்கு. இதில் கீபோர்டு வாசிப்பு, அபாகஸ், சாக்சஃபோன் வாசிப்பு, பாட்டு பாடுவது என பன்முக திறமையோடு இருக்கிறாள் நிரஞ்சனா. படிப்பிலும் அவ சுட்டிதான். பல்வேறு போட்டிகளில் பங்கெடுத்துக்கிட்டு அவ பரிசுகளை வாங்கிக் குவிப்பது எங்க பள்ளிக்கே பெருமை தான்” என்றார்.

Related Stories

No stories found.