இப்படியும் இயங்கும் ஓர் அரசுப் பள்ளி!

ஆசிரியர் மணிவாசகத்தின் மதிப்புறு சேவை
பள்ளி வளாகத்தில் படிக்கும் மாணவ - மாணவியர்
பள்ளி வளாகத்தில் படிக்கும் மாணவ - மாணவியர்

வழக்கமாக பள்ளிக்கூடம் விட்டால் பிள்ளைகள் பறந்தோடி வீட்டுக்குச் செல்வதைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், கடலூர் மாவட்டம் சி.முட்லூரில் இருக்கும் அந்த அரசு மேனிலைப்பள்ளியின் பிள்ளைகள் இந்த இலக்கணத்தை மாற்றி இருக்கிறார்கள்.

இந்தப் பள்ளியில் மாலை 4.30 மணிக்கு பள்ளிநேரம் முடிந்தாலும் பிள்ளைகள் யாரும் வீட்டுக்குப் போவதில்லை. அப்போதுதான் பள்ளித் தொடங்குவதைப்போல மைதானத்தில் வகுப்பு வாரியாக வரிசையாக அமர்ந்து மீண்டும் படிக்க ஆரம்பிக்கின்றனர். முக்கால் மணி நேரம் இந்த சிறப்பு வகுப்பை முடித்துவிட்டுத் தான் வீட்டுக்குக் கிளம்புகிறார்கள்.

பன்னிரண்டாம் வகுப்புப் பிள்ளைகளுக்கு வகுப்புகள் அதற்கு மேலும் தொடர்கின்றன. லேசாக இருட்டத் தொடங்கியதுமே பள்ளி வளாகம் முழுவதும் தேவையான இடங்களில் குழல் விளக்குகள் ஒளிர்கின்றன. அந்த விளக்கு வெளிச்சத்தில் அமர்ந்து பிள்ளைகள் படிப்பைத் தொடர்கிறார்கள். அருகிலேயே ஆசிரியர்கள் அமர்ந்து அவர்களை அக்கறையுடன் கண்காணிக்கின்றனர்.

படிக்கும் பிள்ளைகளின் சந்தேகங்களுக்கு அங்கேயே பதில் அளித்து கசடற கற்க உதவுவதே அவர்களின் பிரதான வேலை. மாலை 6 மணி ஆனதும் சற்று இடைவேளை. இயற்கை உபாதைகளை முடித்துக் கொண்டு கால் கழுவிவிட்டு வரும் பிள்ளைகளுக்கு சுடச் சுட சுண்டல் தயாராக இருக்கிறது. அதை ருசித்துவிட்டு உற்சாகத்துடன் மீண்டும் படிக்க உட்காருகிறார்கள்.

பிள்ளைகளுக்கு மத்தியில் கொசுக்கள் ரீங்காரம் கேட்க ஆரம்பித்ததும் ஒரு குழுவுக்கு ஒன்று வீதம் கொசுவர்த்தி தரப்படுகிறது. அதன் பிறகு கொசுத்தொல்லை மறந்து அந்தப் பிள்ளைகள் படிப்பைத் தொடர்கிறார்கள். 8 மணிக்கு, மணி ஒலிக்கிறது. அத்தனை பேரும் புத்தகங்களை மூடிவைத்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பத் தயாராகிறார்கள். அதற்கு முன்னதாகவே அவர்களுக்கான இரவு உணவு அங்கே பார்சலில் தயாராக இருக்கிறது. இட்லி, வடை, பொங்கல், பூரி, உப்புமா என்று எதாவது ஒரு உணவு அந்தப் பார்சலில் காத்திருக்கிறது. படிக்கும் பிள்ளைகள் அதை பிரித்து அங்கேயும் சாப்பிடலாம். வீட்டுக்கும் எடுத்துச் செல்லலாம்.

சுற்றுவட்டாரத்தில் உள்ள 17 கிராமங்களைச் சேர்ந்த பிள்ளைகள் இந்தப் பள்ளியில் படிக்கிறார்கள். சுமார் ஐந்தாறு கிலோ மீட்டர் தூரத்திலிருந்தும் இங்குவந்து படிக்கிறார்கள். இரவில் அவர்கள் எப்படி வீட்டுக்கு பாதுகாப்பாக செல்வார்கள்? அதற்கும் வழி செய்யப்பட்டிருக்கிறது. உள்ளூர் மற்றும் நெடுஞ்சாலையில் அருகில் இருக்கும் ஊர்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் மிதிவண்டிகளில் போய்விடுகிறார்கள். மற்ற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களை அங்கு காத்திருக்கும் தனியார் பள்ளிகளின் பேருந்துகள் ஏற்றிக்கொண்டுபோய் அவர்களின் வீடுகளில் இறக்கி விடுகின்றன. இப்படி, முழுமையான பாதுகாப்புடன் பள்ளி இறுதியாண்டு படிக்கும் பிள்ளைகளின் கல்விக்கு அங்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

தலைமையாசிரியருடன் மாணவ - மாணவியர்
தலைமையாசிரியருடன் மாணவ - மாணவியர்

”வீட்டுக்குப்போனா இப்படி படிக்க முடியாது. அங்க, இங்க போகவேண்டியிருக்கும். படிப்பிலும் கவனம் செலுத்த முடியாது. அதுமட்டுமில்லாம, பாடத்தில் ஏதாச்சும் சந்தேகம் வந்தாலும் யாரையும் கேட்டுக்க முடியாது. இப்ப அப்படியில்ல... எந்தக் கவலையும் இல்லாம படிக்க முடியுது” என்கிறான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ஆதித்யா. இப்படி இங்கு இரவு வகுப்பில் படிக்கும் சுமார் 200 மாணவ - மாணவிகளுமே தங்களின் குடும்பச் சூழலை உணர்ந்து இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இதற்கெல்லாம் காரணமாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிவாசகனை சுட்டிக்காட்டுகிறார்கள். ’’இந்தப் பகுதியில் இருக்கும் பிள்ளைகள் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அதனால் வீட்டுச்சூழல் அவர்களின் படிப்புக்கு உகந்ததாக இருக்காது. அதனால் பள்ளியிலேயே அத்தகையை பாதுகாப்பான படிப்புச் சூழலை உருவாக்கித்தரவேண்டும் என்று நினைத்தேன். அதற்காக 2019-ம் ஆண்டில் பெற்றோர்களை வரவழைத்துப் பேசினேன். பெரும்பாலான பெற்றோர்கள் ஒப்புக்கொண்டனர். அதனால் அந்த ஆண்டே வகுப்புக்களைத் தொடங்கிவிட்டோம். அந்த வருடம் இரவுப் பணியையும் நானே பார்க்க வேண்டியிருந்தது. அதற்கு நல்ல பலன் கிடைத்தது. பள்ளிக்கும், சிறப்பு வகுப்புக்கும் வராதவர்களைத் தவிர எஞ்சிய அனைவருமே தேர்ச்சி பெற்றனர். அதனால் தான் 99 விழுக்காடு தேர்ச்சியும் சாத்தியமானது.

சுண்டல் வழங்கப்படுகிறது...
சுண்டல் வழங்கப்படுகிறது...

முதல் வருடத்து ரிசல்ட்டை பார்த்துவிட்டு அதற்கு அடுத்த ஆண்டு அனைத்துப் பிள்ளைகளும் இரவு நேர வகுப்பில் கலந்து கொண்டனர். எங்கள் ஆசிரியர்களும் இந்தப்பணியில் தங்களை இணைத்துக் கொண்டுவிட்டனர். அவர்களில் நான்கு பேர் சுழற்சி முறையில் இரவு வகுப்பை கவனித்துக் கொள்கின்றனர். சக ஆசிரியர்களின் முழுமையான அர்பணிப்பு இருப்பதால் தான் என்னால் இதைச் செம்மையாகச் செய்யமுடிகிறது. கடந்த ஆண்டு கரோனா கட்டுப்பாடுகளால் வகுப்புகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு வழக்கம்போல் நடைபெற்று வருகிறது” என்றார் தலைமை ஆசிரியர் மணிவாசகன்.

சிதம்பரத்தில் வசிக்கும் மணிவாசகன் காலை எட்டு மணிக்கே பள்ளியில் ஆஜராகிவிடுகிறார். அடுத்த அரை மணி நேரத்துக்குள்ளாக பள்ளிப் பிள்ளைகளும் அங்கே வந்துவிடுகிறார்கள். அதன் பிறகு, மணிவாசகன் மேற்பார்வையில் அத்தனை பிள்ளைகளும் முக்கால் மணி நேரம் சிறப்பு வகுப்பில் குழுக்களாக அமர்ந்து பாடம் படிக்கிறார்கள். அதன் பிறகு, பள்ளியின் மற்ற பணிகளை கவனிக்கத் தொடங்கும் மணிவாசகன், இரவு எட்டரை மணிக்கு பள்ளியின் கடைசி மாணவனையும் பாதுகாப்பாய் வீட்டுக்கு அனுப்பிவைத்த பிறகே வீட்டுக்குக் கிளம்புகிறார்.

மணிவாசகன்
மணிவாசகன்

பள்ளியை மேம்படுத்துவதற்காக தினமும் 12 மணி நேரத்துக்கும் குறையாமல் உழைக்கும் மணிவாசகனிடம், “இரவு நேர வகுப்புக்காக தினமும் ஆயிரக்கணக்கில் செலவாகுமே... அதை எப்படி சமாளிக்கிறீர்கள்?” என்று கேட்டோம்.

’’உண்மைதான், ஒரு நாளைக்கு ஆறாயிரம் ரூபாயாவது தேவைப்படும். என்னைப் பற்றி அறிந்தவர்களும், இந்த பணியை பற்றி கேள்விப்பட்டவர்களும் உதவுகிறார்கள். காடாம்புலியூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் இருந்து அமெரிக்காவில் வாழும் நண்பர் ஒருவர் ஒரு பெருந்தொகையை அனுப்பினார். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த சக ஆசிரியை ஒருவர் அதே அளவு தொகையைக் கொடுத்து உதவினார். நம்முடைய நோக்கம் நல்லதாக இருந்து தொடங்கிவிட்டால் போதும், அதன்பிறகு அது தானாக நடக்கும். அந்த நம்பிக்கையில் தான் நாங்கள் ஊக்கத்துடன் இந்த வேலையைச் செய்து கொண்டு இருக்கிறோம்” என்று உவகை பொங்கச் சொன்னார் மணிவாசகன்..

“அது எப்படி தனியார் பள்ளிகளின் வாகனங்களை உங்களுக்கு கொடுக்கிறார்கள்?” என்று கேட்டதற்கு, ‘’எனக்குத் தெரிந்தவர்களும், நண்பர்கள் சிலரும் தனியார் பள்ளிகளை நடத்துகிறார்கள். நோக்கத்தைச் சொல்லி அவர்களிடம் வாகனங்களைக் கேட்டேன்; தந்துவிட்டார்கள். டீசல் செலவும், டிரைவர்களுக்கான சம்பளமும் மட்டும் எங்களைச் சார்ந்தது” என்று சொன்ன மணிவாசகன், “மனமிருந்தால் மார்க்கம் உண்டு. அரசுப் பள்ளிகள் ஒவ்வொன்றிலும் இதேபோல சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அரசுப்பள்ளிகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும்” என்று நமக்கு விடைகொடுத்தார்.

மணிவாசகன் போன்ற மதிக்கத்தக்க ஆசிரியர்களும் இருப்பதால் தான் இன்னமும் அரசுப் பள்ளிகள் மீதான மக்களின் நம்பிக்கை பொய்த்துவிடாமல் இருக்கிறது.

வாழ்த்துகள் சார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in