`இனி அச்சமின்றி செயல்படுவோம்'

ஆசிரியர் சங்கங்கள் மகிழ்ச்சி அறிவிப்பு
`இனி அச்சமின்றி செயல்படுவோம்'
ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஆசிரியர்கள்

கரூர் மாவட்டம், தோகமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்களை முறையாக முடிவெட்டிக் கொண்டு வருமாறு கண்டித்த அப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் செந்தில் குமாரை, தங்கள் ஊரில் இருந்து சிலரை அழைத்துக் கொண்டு வந்து மாணவர்கள் மிரட்டினர். இதனால் அச்சமடைந்த அப் பள்ளியின் ஆசிரியர்கள் பள்ளி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு அவர்களின் மேல் ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தை ஆசிரியர் சங்கங்கள் கையிலெடுத்தன. இதனை இப்படியே விடக்கூடாது என்று முடிவெடுத்த அவர்கள் கரூர் மாவட்ட ஆட்சியரை நேற்று மாலை சந்தித்து இது குறித்து முறையிட்டனர். அப்போது அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்திருக்கிறார்.

அதனையடுத்து அனைத்து ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக. `இனி அச்சமின்றி செயல்படுவோம்' என்ற தலைப்பில் ஆட்சியரை சந்தித்தபோது என்ன நடந்தது என்பது குறித்து விரிவான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

"ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய மாணவர்களின் செயலுக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர்களை சந்தித்தோம். அரசு பள்ளி ஆசிரியர்கள் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் பணிபுரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்.

முதன்மைக் கல்வி அலுவலரை சந்தித்தபோது நடந்த பிரச்சினை குறித்து விளக்கிக் கூறினோம். இனிமேல் இதுபோன்ற பிரச்சினைகள் வராத அளவிற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்தும் அவரிடம் விளக்கி கூறினோம். சில விஷயங்களில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், சில விஷயங்களில் அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தரப்பு முடிவினை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளிடம் எடுத்துரைத்தார்.

ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு
ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு

அதனையடுத்து அனைத்து நிர்வாகிகளும் மாவட்ட ஆட்சியரை சந்தித்தோம். அனைத்து நிர்வாகிகளும் அவரை நேரடியாக சந்திக்க முடியாத சூழலில் 8 நிர்வாகிகள் மட்டும் அவருடன் பேச முடிந்தது. மாவட்ட ஆட்சியர் முதலில் நேற்று நடந்த பிரச்சினை குறித்து நமது கருத்தை முழுமையாக கேட்டு உள் வாங்கிக் கொண்டார். நமது தரப்பு நியாயங்களை கேட்டறிந்த பின்பு இதற்கு நிரந்தரமாக முடிவு காண சில கருத்துக்களை கூறி அதில் ஏதாவது மாற்றங்களை செய்வதாக இருந்தால் கூறுங்கள் என்று அரைமணிநேரம் அந்த கருத்து பற்றி விரிவாக விளக்கி பேசினார்.

தற்போது நிலவும் மாணவர்களின் மனநிலை, குடும்பச்சூழல், பொருளாதார நிலை போன்றவை குறித்து மிகத் தெளிவாக நடைமுறை உதாரணங்களுடன் விளக்கிக் கூறினார். அரசுப்பள்ளி மாணவர்களின் நடவடிக்கைகளை மாற்றும் விதமாக ஏற்கனவே கவுன்சிலிங் கொடுப்பது பற்றி ஆலோசனையில் இருந்ததாகவும், தற்போது இந்த பிரச்சினை மூலமாக அதனை உடனடியாக செயல்படுத்த வேண்டிய நிலை உருவாகி இருப்பதாகவும் ஆட்சியர் கூறினார்.

தற்போதைய சூழலில் மிகவும் இக்கட்டான பணிச்சூழல் ஆசிரியர்களுக்கு இருக்கிறது என்பதனை முழுமையாக புரிந்து கொண்டார். வகுப்பறையில் பிரச்சினை செய்யும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்தவும், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வெளியில் இருந்து அச்சுறுத்தல் கொடுக்கும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கும் உறுதியளித்தார். அரசுப்பள்ளி மாணவர்களின் நிலையை, எவ்வளவு சிரமமான பணிச்சூழல் இருந்தாலும் ஆசிரியர்களால் மட்டுமே முன்னேற்ற முடியும் என்பதனை வலியுறுத்திக் கூறினார்.

மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்களாகிய உங்களை விட்டால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வேறு ஆட்கள் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறினார். கல்வித்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உட்பட அனைவருமே பள்ளி மாணவர்கள் முன்னேற்றம் குறித்து சட்டங்கள் போட மட்டுமே முடியுமே தவிர மாணவர்களை முன்னேற்றமான நிலைக்கு அழைத்துச் செல்ல முடியாது. அந்த சட்டங்களை செயல்படுத்துவது அரசுப்பள்ளி ஆசிரியர்களாகிய நீங்கள் தான் என்பதனை நான் முழுமையாக அறிவேன் என்று ஆட்சியர் கூறினார்.

அரசுப் பள்ளிகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல அனைவரும் இணைந்து செயல்படுவோம் அதற்கு மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் முழு ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் கூறி நம்பிக்கையூட்டினார்.

விரைவில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட பல நபர்களை ஒன்றிணைத்து அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கவுன்சிலிங் கொடுக்கும் செயலை உடனே செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நியாயமான கோரிக்கைகளை எப்போதும் நிறைவேற்றித் தருவதாகவும் அவர் உறுதியளித்தார். ஆசிரிய சங்கங்களின் நிர்வாகிகள் மற்ற ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாக பள்ளியில் செயல்பட வேண்டும் என்பதனையும் கேட்டுக்கொண்டார்.

நேற்று தோகைமலை அரசுப் பள்ளியில் நடந்த அசம்பாவித சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள், வெளி நபர்கள் மீது எடுக்கும் நடவடிக்கை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

அரசுப்பள்ளிகளை உயர்வான நிலைக்கு கொண்டு செல்ல ஆசிரியர்களாகிய நமக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்தி மன நிம்மதியுடன் கற்பித்தல் பணியை மேற்கொள்வோம் என்ற நம்பிக்கையினை நேற்றைய மாவட்ட ஆட்சியரின் சந்திப்பு வழங்கியுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் இனி அச்சமின்றி நமது பணியை சிறப்பாக மேற்கொள்வோம்."

இவ்வாறு கூறப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in