காகிதமெல்லாம் கலைநயம்... சுவர்களில் எல்லாம் ஓவியம்!

அசத்தும் அரசங்குடி அரசுப்பள்ளி மாணவர்கள்
காகிதமெல்லாம் கலைநயம்... சுவர்களில் எல்லாம் ஓவியம்!

திரும்பிய பக்கமெல்லாம் சுவர்களில் கண்ணைக்கவரும் ஓவியங்கள்... அத்தனை வகுப்பறையிலும் காகிதங்களால் உருவாக்கப்பட்ட அழகான ஓவிய பாப்-அப் சித்திரங்கள்... மாணவர்களின் கைகளில் எல்லாம் களிமண்ணால் செய்யப்பட்ட கலைப்பொருட்கள் என ஆச்சரியத்தை அள்ளித் தெளிக்கிறது அரசங்குடி அரசுப்பள்ளி.

அண்மைக்காலமாக அரசுப்பள்ளி மாணவர்கள் குறித்த சில எதிர்மறை தகவல்கள் வைரலாக பரவினாலும், பெரும்பாலான அரசுப்பள்ளிகள் இன்னமும் சத்தமே இல்லாமல் எண்ணற்ற சாதனைகளை செய்துகொண்டேதான் இருக்கிறது. அப்படித்தான் அரசுப்பள்ளிகள் குறித்த பொதுவெளியின் எதிர்மறை எண்ணங்களை எல்லாம் தூள் தூளாக்கும் விதமாக அழகிய வண்ண ஓவியங்களை தீட்டுகிறார்கள் திருச்சி மாவட்டம் கல்லணை அருகே உள்ள அரசங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்.

இங்கு மொத்தம் 220 மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் சுவர் ஓவியங்கள், காகித ஓவியங்கள், ஓரிகாமி, கிரிகாமி, காகிதத்தில் நுணுக்கமாகச் செய்யப்படும் பாப்-அப் ஓவியங்கள், களிமண் சிற்பங்கள் என பல்வேறு கலைகளில் சிறந்து விளங்குகிறார்கள். தங்களின் இந்தத் திறமைக்காக பரிசுகளையும், பாராட்டுகளையும் குவித்து வருகிறார்கள் இவர்கள்.

கரிகால் சோழன் கட்டியமைத்த கல்லணைக்கு மிக அருகில் இயற்கையான சூழலில் இயங்கிக்கொண்டிருக்கிறது அரசங்குடி பள்ளி. வகுப்பறைக்கு வெளியேயும் உள்ளேயும் அத்தனை உயிர்ப்பு மிக்க ஓவியங்களை பார்க்கும் போதே நமக்குள்ளும் புத்துணர்ச்சி தழும்பத் தொடங்குகிறது. அதை அனுபவித்தபடி பள்ளியின் ஓவிய அறைக்குள் நுழைந்தால் கண்ணில் தெரியும் அத்தனையுமே அற்புதங்கள்தான். மாணவர்களின் கற்பனையும், ஓவிய ஆசிரியர் அருணபாலனின் பயிற்சியும் அங்குள்ள ஒவ்வொரு படைப்பிலும் ஒளிர்கிறது.

தாங்கள் உருவாக்கிய ஓவியம், சிற்பங்கள் மற்றும் பாப்-அப் புத்தகங்களை நம்மிடம் போட்டிபோட்டுக்கொண்டு ஆர்வத்துடன் காட்டுகிறார்கள் மாணவர்கள்.

எப்படி இந்த பள்ளி ஓவியங்களின் சிறப்பிடமானது என நம்மிடம் பேசத்தொடங்கினார் ஓவிய ஆசிரியர் அருணபாலன். “ நான் 2000-ம் ஆண்டில் இங்கு ஓவிய ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். வந்த புதிதில் மாணவர்களுக்கு ஓவியம் மட்டும் தான் சொல்லிக் கொடுத்தேன். அதன் பின்னர் பசை, கோலமாவு கலந்து 3டி ஓவியங்கள் உருவாக்குவதைக் கற்றுக்கொடுத்தேன். பிறகு, ஓரிகாமி, கிரிகாமி உள்ளிட்ட கலைகளை நானும் கற்றுக்கொண்டு மாணவர்களிடமும் அதனைக் கொண்டுசென்றேன்.

இதன் அடுத்தகட்டமாக, பாப்-அப் ஓவியங்கள் எனப்படும் எழுந்து நிற்கும் ஓவியப் புத்தகங்களை உருவாக்க ஆரம்பித்தேன். அதற்கு மாணவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. வாரத்தில் சில வகுப்புகள் மட்டுமே ஓவியத்துக்கு உள்ளதால், கோடைகாலத்தில் சிறப்பு பயிற்சி வகுப்புகளை தொடங்கினேன். சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே நடத்தப்படும் கோடைகால ஓவிய வகுப்பில் பிற பள்ளி மாணவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

ஓவியம் மற்றும் பாப்-அப்பில் பெஸ்ட்டாக வந்தவர்கள் உயர்வகுப்பில் ஆர்க்கிடெக்ட், பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை எளிதாக புரிந்துகொள்ள இந்த கலை உதவுவதாகச் சொன்னார்கள். அதுபோல வகுப்பறைகளில் ஓவியங்கள், கலைப்படைப்புகள் நிறைந்திருக்கும்போது அது நல்ல சூழலை உருவாக்கி மாணவர்களின் கற்றல் திறனையும் அதிகரிக்கிறது. இத்தனை வருடங்களில் இதை நாங்கள் கண்கூடாகவே பார்க்கிறோம்” என்றார் அருணபாலன்.

அருணபாலன்
அருணபாலன்

தொடர்ந்து பேசிய அவர், “இங்கு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஓவிய வகுப்புகள் உண்டு. ஆர்வமுள்ளவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க ஓவிய கிளப் உருவாக்கியுள்ளோம். இந்த கிளப்பில் தற்போது 50 மாணவர்கள் இருக்கிறார்கள். மற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்கூட ஓவியப் பயிற்சிக்காக எங்கள் பள்ளியில் வந்து சேர்வதாக சொல்கிறார்கள்.

ஜப்பான் போன்ற நாடுகளில் இந்த கிரிகாமி, பாப்-அப் ஓவியங்கள் செய்வோர் பெரும் பணக்காரர்களாக உள்ளனர். நம் நாட்டில் இப்போதுதான் இது குறித்து விழிப்புணர்வு வந்திருக்கிறது. எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கல்லூரிகளுக்குச் செல்லும்போது அவர்களாகவே தங்களின் புராஜக்ட்களை செய்துகொள்கிறார்கள். அந்தளவுக்கு இந்த ஓவியங்கள் அவர்களுக்கான தன்னம்பிக்கையை வளர்க்கிறது” என்றார் மகிழ்ச்சியுடன்

கிஷோர்
கிஷோர்

மாணவர்கள் உருவாக்கும் ஓவிய பாப்-அப் புத்தகங்களைப் பற்றி பேசிய ஏழாம் வகுப்பு மாணவரான கிஷோர், “பட்டாம்பூச்சியின் வாழ்க்கை சுழற்சி, நீர் ஆவியாதல் என எங்களின் பாடப் புத்தகங்களில் உள்ளவற்றை ஒவ்வொரு கட்டமாக ஆரம்பம் முதல் கடைசி வரை எழுந்து நிற்கும் பாப்-அப் சித்திர புத்தகமாக உருவாக்கியுள்ளோம். ஒவ்வொரு பாப்-அப் புத்தகமும் 5 பக்கங்கள் இருக்கும். இதுபோல 20 புத்தகங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இதுபோன்ற புத்தகங்களை உருவாக்குவதால் எங்களுக்கு பாடங்கள் எளிதாகப் புரிகிறது. விமானம் உருவான முறை, புவி ஈர்ப்பு விசை உள்ளிட்ட அறிவியல் பாடங்களை எல்லாம் பாப்-அப் புத்தகமாக உருவாக்கும் போது நாங்களே அதையெல்லாம் கண்டுபிடித்த உணர்வைத் தருகிறது” என்றார் பெருமிதத்துடன்

லிபி மாலினி
லிபி மாலினி

ஒரிகாமி படைப்பினை உருவாக்கிக்கொண்டே நம்மிடம் பேசிய லிபி மாலினி, “ஓவியங்கள், பாப் -அப் புத்தகங்களில் கவனம் செலுத்துவதால் கவனச்சிதறல் ஏற்படுவது குறைகிறது. வீட்டுக்குப் போனாலும் டிவி பார்க்காமல் தினமும் ஏதேனும் ஒரு ஓவிய பாப்-அப் புத்தகத்தை உருவாக்க சக மாணவர்களுடன் சேர்ந்து ஆர்வத்துடன் முயற்சிப்போம். இதற்கெல்லாம் பாராட்டுக் கிடைக்கும் போது அது எங்களை இன்னும் உற்சாகப்படுத்துகிறது” என்றார் நெகிழ்ச்சியுடன்

மாணவர்கள் இந்தப் படைப்புகளை எல்லாம் உருவாக்க அதிகளவில் பொருட்கள் வேண்டும். தனியார் அல்லது ஆசிரியர்கள் பங்களிப்புடன் தான் இதற்கான நிதித் தேவையைச் சமாளிக்கிறார்கள். விளையாட்டுத் துறைக்கு உபகரணங்கள் வாங்கித் தருவதைப்போல ஓவியம் மற்றும் கலைப்படைப்புகள் செய்யும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கும் அதற்குத் தேவையான பொருட்களை அரசே வாங்கித்தந்தால் அந்த மாணவர்கள் இன்னும் உற்சாகத்துடன் இதில் ஈடுபடுவார்கள் என்பது உண்மை

கலையும் கல்வியின் ஒரு அங்கம்தான். கலையுணர்வு மேம்படும்போது கல்வியின் தரமும் மேம்படும். அதுபோல ஓவியங்கள் மூலமாக எத்தனை கடினமான பாடத்தையும் எளிதாக மாணவர்களுக்குப் புரியவைக்க முடியும். மாணவர்கள் ஓவியத்தில் கவனம் செலுத்தும்போது அவர்களின் கற்பனைத் திறன் மேம்படுவதுடன் ஒருமுகப்படுத்தும் ஆற்றலும் அதிகரிக்கும். இதனால் மாணவர்கள் இயல்பாகவே கல்வியிலும் சிறந்து விளங்குவார்கள் என்பதற்கு அரசங்குடி அரசுப் பள்ளியே உதாரணம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in