மாணவர் டி.சி-யில் கல்வி கட்டண பாக்கி: நீக்க ஓபிஎஸ் கோரிக்கை

நீதிமன்றத்தில் மேல்முறையீடு மேற்கொள்ளுமாறு அரசுக்கு வலியுறுத்தல்
ஓபிஎஸ்
ஓபிஎஸ்

தனியார் பள்ளிகளில் இருந்து விடுபடும் மாணவர்களின் மாற்றுச் சான்றிதழில், கட்டண பாக்கி விபரத்தை குறிப்பிடும் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்யுமாறு, தமிழக அரசிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று(டிச.9) அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

கரோனா பெருந்தொற்றுப் பரவல் உள்ளிட்டவற்றால் அதிகரித்த பணியிழப்பு காரணமாக, தனியார் பள்ளிகளில் இருந்து தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளுக்கு மாற்றும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களுக்கு கல்வி உரிமை சட்டத்தின்படி மாற்றுச் சான்றிதழ்களை சமர்பிக்கத் தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்தது.

இதற்கு எதிராக தனியர் பள்ளி கூட்டமைப்பு ஒன்று நீதிமன்றம் சென்றது. இதையொட்டி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், மாற்றுச் சான்றிதழ் வழங்குவதுடன் அதில் கட்டண பாக்கியை குறிப்பிடவும் அனுமதி பெற்றதாக, அவற்றை தனியார் பள்ளிகள் நடைமுறைப்படுத்த தொடங்கின.

இதுகுறித்து விளக்கமாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஓபிஎஸ், ‘கல்விக் கட்டணம் குறித்து தனியார் பள்ளிகளிடம் ஏற்கெனவே பதிவேடுகள் இருக்கின்ற சூழலில், மாற்றுச் சான்றிதழிலும் அதுகுறித்துக் குறிப்பிட வேண்டும் என்பது, படிக்கின்ற மாணவ மாணவியர் மத்தியில் ஓர் இழுக்கை, தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும். மேலும் அவர்களை அவமானப்படுத்துவதாகவும் அமையும். இது, பெற்றோர் செய்த தவறுக்கு பிள்ளைகளைத் தண்டிப்பது போன்றது. இதற்கு தீர்வு காணவேண்டிய கடமை தமிழக அரசுக்கு நிச்சயம் உண்டு. ஏழை மாணவ மாணவியர் நலன் கருதி இதுகுறித்து மேல் முறையீடு செய்து குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள இழுக்கை நீக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in