மாணவர்களின் வாழ்வில் மாற்றத்தை விதைக்கும் மாஸ்டர்!

முத்துராமலிங்கம்
முத்துராமலிங்கம்

உச்சம் தொட்ட மனிதர்களுக்குப் பின்னால் உயர்த்திவிட்ட ஒரு ஆசிரியரின் கைகள் நிச்சயம் இருக்கும். கல்வி, விளையாட்டு என அனைத்திலும் ஒரு மாணவன் பிரகாசிக்க ஆசிரியர்தானே அச்சாணி. நல்லாசிரியர்களே நல்ல மாணவர்களையும், நல்ல சமுதாயத்தையும் உருவாக்குகிறார்கள். அப்படித்தான் மாணவர்கள் பலருக்கு நம்பிக்கை வெளிச்சமாய் இருக்கிறார் விளையாட்டுப் பயிற்சியாளர் முத்துராமலிங்கம்.

முத்துராமலிங்கத்திடம் பயிற்சிபெற்ற மாணவ - மாணவியரில் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் சர்வதேச, தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளனர். 150-க்கும் மேற்பட்டோருக்கு விளையாட்டுக் கோட்டாவில் அரசுப் பணி சாத்தியமாகி இருக்கிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காவல் துறை பணியில் இருக்கிறார்கள் என்பதும் இவர்களில் பெரும்பகுதியினர் பெண்கள் என்பதும் கூடுதல் தகவல்.

புதுக்கோட்டை அருகிலுள்ள செம்பாட்டூர்தான் முத்துராமலிங்கத்தின் சொந்த ஊர். இங்கே வீட்டுக்கொரு மாடுபிடி வீரர்கள் இருப்பார்கள். சிறுவயதிலேயே விளையாட்டின் மீது முத்துராமலிங்கத்துக்கு ஆர்வம் வந்ததற்கு இதுவும் ஒரு காரணம். இருந்தாலும் உயரம் குறைவு என்பதால் பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் அவ்வளவாய் இவருக்கு இடமிருக்காது. அதற்காக ஓரமாய் உட்கார்ந்துவிடாமல் தானாகவே விளையாடத் தொடங்கினார்.

கல்லூரியில் இளங்கலை படிக்கும்போது் கெஞ்சிக் கூத்தாடி என்சிசி-யில் இடம்பிடித்த முத்துராமலிங்கம், அந்த ஆண்டின் சிறந்த என்சிசி மாணவனாக தேர்வானார். பிறகுதான் நம்பிக்கையுடன் பளுதூக்குதல், கபடி, ஜிம்னாஸ்டிக் போன்றவற்றில் பங்குபெற்று பரிசுகளை வென்றார்.

முத்துராமலிங்கம்
முத்துராமலிங்கம்

படித்துவிட்டு ராணுவம் அல்லது காவல் துறையில் சேரவேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த இவருக்கு அங்கேயும் கேட்போட்டது ஹைட் பிரச்சினை. அதனால், நம்மால் சாதிக்க முடியாவிட்டாலும் விளையாட்டுத் துறையில் சாதிக்கும் பிள்ளைகளை உருவாக்குவோம் என்ற திட்டத்துடன் பட்டியாலாவில் உள்ள உடற் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படித்து உடற் கல்வி ஆசிரியரானார் முத்துராமலிங்கம்.

புதுக்கோட்டை சமஸ்கிருத வித்யாலயா பள்ளியில் பணியில் சேர்ந்த முத்துராமலிங்கம், பள்ளிமாணவர்கள் மத்தியில் விளையாட்டு ஆர்வத்தை வளர்த்து பயிற்சியளிக்க் ஆரம்பித்தார். அப்போது நான்கு ஆண்டுகள் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் விளையாட்டு பயிற்சியாளராகவும் இருந்தார். காமன்வெல்த் மற்றும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பளுதூக்கும் போட்டிகளில் தங்கம் வென்ற அனுராதாவுக்கு தொடக்க கால பயிற்சியளித்தவர் இவர் தான்.

அனுராதா சர்வதேச போட்டியாளராக வளர்ந்ததைப் பார்த்துவிட்டு மேலும் பல மாணவ - மாணவியர் முத்துராமலிங்கத்திடம் பயிற்சி பெற வந்தனர். அடுத்ததாக இவரது மாணவி சிநேகா பளுதூக்கும் போட்டிகளில் தேசிய அளவில் பதக்கங்களைக் குவித்தார். இன்னொரு மாணவி தீபா கேல் இந்தியா போட்டியில் தங்கமும் தேசிய அளவில் 3 பதக்கங்களையும் வென்றார். மாணவி பிரியாவும் தேசிய அளவில் பளுதூக்குதலில் பதங்களை வென்று வருகிறார்.

இதையெல்லாம் பெருமைபொங்க பட்டியல் போடும் முத்துராமலிங்கம், “ராணுவம் மற்றும் காவல்துறையின் பயிற்சிகளை நேரில் பார்த்திருப்பதால் அதுமாதிரியான பயிற்சிகளை பள்ளியிலிருந்தே மாணவர்களுக்கு கொடுக்கிறேன். ராணுவப் பயிற்சிகளைப் போல கடுமையான பயிற்சிகளுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் எனது மாணவர்கள், காவல் துறைக்கான உடல் தகுதித் தேர்வில் எளிதாக தேர்வாகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில்தான் அனைவருக்கும் எனது இலவச விளையாட்டுப் பயிற்சிகளை வழங்கி வருகிறேன். சம்யுக்தா என்ற திருநங்கை காவல் துறையில் சேர விரும்பினார். அதனால் 2019-ல் சம்யுக்தா உள்ளிட்ட 4 திருநங்கைகளுக்கும் பயிற்சி கொடுத்தேன். அதில் சம்யுக்தா மெரிட்டில் தேர்வாகி தற்போது திருவாரூரில் காவல் துறை பணியில் இருக்கிறார்” என்று சொன்னார்.

இவரிடம் பயிற்சி எடுத்த மாணவ - மாணவியர் இதுவரை 3 சர்வதேச பதக்கங்களையும், 35 தேசிய பதக்கங்களையும், 120-க்கும் மேற்பட்ட மாநில அளவிலான பதக்கங்களையும் வென்றுள்ளனர். முத்துராமலிங்கத்தின் சிறப்பான பணியை பாராட்டி தமிழக அரசு 2017-ல், இவருக்கு ‘சிறந்த பயிற்சியாளர்’ என்ற விருதை வழங்கி அங்கீகரித்தது. தனியார் அமைப்புகளும் இவருக்கு எண்ணற்ற விருதுகளை வழங்கியுள்ளன.

இவரிடம் பயிற்சிபெற்ற சர்வதேச பளுதூக்கும் போட்டி வீராங்கனையும் காவல் சார் - ஆய்வாளருமான அனுராதா தனது ஆசான் குறித்து பேசினார். “நான் கல்லூரி படிக்கும் போதுதான் விளையாட்டு துறைக்குள்ளேயே வந்தேன். எனக்கு பளுதூக்குதல் போட்டியை அறிமுகப்படுத்தி மூன்று வருடங்கள் பயிற்சியளித்தது முத்துராமலிங்கம் சார்தான். அதனால் பல்கலைக்கழக அளவில் முதல் பரிசு பெற்றேன். மாநில அளவிலும் பல பரிசுகளைப் பெற்றேன்.

முதலில் நான் ஒருத்தி மட்டுமே சாரிடம் பளுதூக்கும் பயிற்சி எடுத்தேன். என் ஒருத்திக்காக தினமும் காலையும் மாலையும் வந்து பயிற்சியளிப்பார். சில சமயம் நானே சோர்ந்து போனாலும், அவர் சரியான நேரத்திற்கு வந்துவிடுவார். நமக்காக சாரே இத்தனை மெனக்கிடுகிறாரே என்று நினைத்துப்பார்த்து நானும் முனைப்புடன் பயிற்சி எடுத்துக்கொண்டேன். சார் நம்மிடம் எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்கமாட்டார். அவரிடம் துளியும் சுயநலம் இருக்காது. சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவருக்குள் ஓடிக்கொண்டிருக்கும்” என்று மகிழ்ந்தார் அனுராதா.

முத்துராமலிங்கம், அனுராதா, சம்யுக்தா
முத்துராமலிங்கம், அனுராதா, சம்யுக்தா

காவல் துறையில் பணியாற்றும் திருநங்கை சம்யுக்தா பேசும்போது, “சாரிடம் நான் பயிற்சிக்கு வந்த புதிதில் மற்றவர்கள் நம்மை எப்படிப் பார்ப்பார்களோ என்ற பயம் இருந்தது. சார் தான் தொடக்கத்திலேயே அந்த பயத்தைப் போக்கி அனைவரிடமும் சகஜமாக, நட்பாக பழக வைத்தார். ஏழைப் பிள்ளைகளுக்கு உயற்பயிற்சிக்குத் தேவையான பொருட்களை சாரே தன்னோட கைக்காசைப்போட்டு வாங்கித் தருவார். மழை பெய்தால் பயிற்சிக்கு கட் அடிக்கலாம் என நாங்கள் நினைப்போம். ஆனால், அதற்கும் மாற்று ஏற்பாடுகளைச் செய்து விடாமல் பயிற்சி கொடுப்பார். உடற் தகுதியை மட்டுமின்றி சமூகத்தில் எப்படிப் பழகவேண்டும் என்ற ஒழுக்கத்தையும் சொல்லித்தரும் சூப்பர் மாஸ்டர் அவர்” என்றார்.

நிறைவாக நம்மிடம் பேசிய முத்துராமலிங்கம், “மிகவும் வறுமைப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவன் என்பதால் எனக்கு வறுமையின் வலி என்னவென்று தெரியும். அத்தகைய வறுமையை ஒழிக்கவேண்டும் என்றால் அதற்கு கல்விதான் ஆயுதம். விளையாட்டும், கல்வியும் இருந்தால் நிச்சயம் மாணவர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும்; வறுமையும் ஒழியும். அதற்கு என்னிடம் பயிற்சிபெற்று சாதித்து வரும் மாணவர்களே சாட்சி. நம்மால் முடிந்தவரை இவர்களைப் போன்ற மாணவர்களை உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் எனக்குள் இருக்கும் ஒரே லட்சியம்” என்று சிலிர்ப்பூட்டினார்.

இளம் வயதிலேயே வறுமைக்குள் சிக்கிக்கொள்ளும் பிள்ளைகளுக்கு எதிர்காலத்தைக் கட்டமைக்கும் கலங்கரை விளக்கமே கல்விதான். அந்தக் கல்வியுடன் விளையாட்டும் கைகோத்தால் ஏழைகளின் வாழ்விலும் ஒளி ஏற்றமுடியும். அத்தகைய ஒளியை ஏற்றிவைத்துக் கொண்டிருக்கும் முத்துராமலிங்கம் போன்ற அர்பணிப்பான ஆசான்கள் இன்றைய சூழலில் ஒவ்வொரு பள்ளிக்கும் தேவை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in