இடைநின்ற 2 லட்சம் குழந்தைகளுக்கு மீண்டும் கல்வி; ஆனால் நீட் விலக்கு மசோதாவுக்கு கப்சிப்

சட்ட சபை ஆளுநர் உரை
இடைநின்ற 2 லட்சம் குழந்தைகளுக்கு மீண்டும் கல்வி; ஆனால் நீட் விலக்கு மசோதாவுக்கு கப்சிப்

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஜன.5) காலை 10 மணிக்கு தொடங்கிய தமிழக சட்டசபை கூட்டத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றி தொடங்கிவைத்தார். ஆங்கிலத்தில் ஆளுநர் உரையாற்றிய பிறகு அதன் தமிழாக்கத்தைச் சபைத் தலைவர் மு.அப்பாவு வாசித்தார்.

அவற்றில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சார்ந்து அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களின் தொகுப்பு பின்வருமாறு:

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவது உறுதி செய்யடுகிறது. இதன் பொருட்டு தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்புத்தொகையாக அரசு வைத்து வருகிறது. பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் உடனடியாக நிவாரணமாக வழங்கப்பட்டுவருகிறது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ’தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021’ முன்னதாக வெளியிடப்பட்டது. பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, ‘தமிழ்நாடு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக இழப்பீட்டு நிதி’ உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 103 குழந்தைகளுக்கு ரூ.2 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களின் அருகில் போதைப் பொருட்களின் விற்பனையைத் தடுக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்புகளை ஈடு செய்வதற்காக இல்லம் தேடி கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1-8-ம் வகுப்பு மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்டிருக்கும் இத்திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 12 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வந்த இத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 80, 138 இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவர பல்வேறு துறைகளைச் சேர்ந்த 80 ஆயிரம் ஊழியர்கள் ஜிபிஎஸ் செயலியை கொண்டு கணக்கெடுத்தனர். இதன் மூலம் 1 லட்சத்து 73 ஆயிரத்து 792 குழந்தைகள் அவர்களது வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் மீண்டும் வெற்றிகரமாகச் சேர்க்கப்பட்டனர்.

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தைப் பன்முகத்தன்மையோடு வளர்த்தெடுக்க அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தின் அரசுப் பள்ளிகளை நவீனமாக்குவதற்காகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

தமிழ்நாட்டிலுள்ள 24, 345 அரசுத் தொடக்கப் பள்ளிகள் அனைத்தும் smart classroom எனப்படும் திறன்மிகு வகுப்பறைகள் கொண்டதாக மாற்றப்படும். உயர்ந்துவரும் மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப புதிய கட்டிடங்கள், 6, 992 நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர் தொழில்நுட்பக் கணினி ஆயவகங்கள், broadband இணைய வசதி உள்ளிட்ட புத்தாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முன்னுரிமை அடிப்படையில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் பொறியியல் போன்ற தொழிற்படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்கும் விதமாக ரூ. 181 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பெண்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக அறிவிக்கப்பட்ட இலவச பேருந்துப் பயணத்திட்டத்தினால் கடந்த நான்கு மாதங்களில் மகளிர் பயணிகளின் எண்ணிக்கை 40 சதவீதத்திலிருந்து 61 ஆக உயர்ந்துள்ளது. மகளிர் மேம்பாட்டுக்காக 1989-ல் தொடங்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தின்கீழ் இந்த ஆண்டு ரூ.20,000 கோடி வங்கிக்கடன் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்யும்.

இவ்வாறு குழந்தைகள் மற்றும் பெண்கள் நலன் தொடர்பான அறிவிப்புகள் இன்று தமிழக சட்ட சபையில் ஆளுநரால் அறிவிக்கப்பட்டன.

ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. ”நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் தேவையற்றன என்பதை அரசு தொடர்ந்து வலியுறுத்தும்” என்று மட்டுமே கூறியது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து, விசிகவின் சிந்தனைச் செல்வன், திருப்போரூர் பாலாஜி உள்ளிட்ட 4 நான்கு எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in