ஐஐடி, என்ஐடி-யில் 18,700 சீட்டுகளில் மாணவர்கள் சேர்க்கப்படவில்லை!

ஐஐடி, என்ஐடி-யில் 18,700 சீட்டுகளில் மாணவர்கள் சேர்க்கப்படவில்லை!

இந்தியாவில் உள்ள ஐஐடி-களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான சீட்டுகள், என்ஐடி-களில் 8,700-க்கும் அதிகமான சீட்டுகள் மாணவர்கள் சேர்க்கை நடைபெறாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக காலியாக இருப்பதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

தரவுகளின்படி, 2020-21 கல்வியாண்டில் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமான ஐஐடி-களில் 5, 484 இடங்கள் நிரப்பப்படவில்லை. இவற்றில் 467 சீட்டுகள் பி.டெக். எனும் இளநிலை பட்டப்படிப்புக்கான இடங்கள். முதுநிலைப் பட்டப்படிப்புகளில் 3, 229 இடங்களில் மாணவர்கள் சேரவில்லை. பட்டப் படிப்புகளுக்கே இந்த நிலை என்றால் பிஎச்.டி., எனப்படும் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்புக்கான 1, 779 இடங்கள் காலியாக இருந்தன. 2021-22 கல்வியாண்டில் முந்தைய ஆண்டைக் காட்டிலும் சற்றுக் குறைவாக 5,296 சீட்டுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. அப்படி நிரப்பப்படாமல் இருந்த சீட்டுகளில் 361 பிடெக் படிப்புக்கானவை. 3,083 முதுநிலைபட்டப்படிப்புகானவை, 1,852 பிஎச்.டி. ஆராய்ச்சி படிப்புக்கானவை.

தேசிய தொழில்நுட்ப நிறுவனமான என்ஐடி-களில் கடந்த 2020-21 கல்வியாண்டில் மட்டும் 3, 741 சீட்டுகள் மாணவர் சேர்க்கை நடைபெறாமல் காலியாக இருந்தன. அதிலும் 2021-22 கல்வியாண்டில் 5, 012 இடங்கள் நிரப்பப்படவில்லை. அவற்றில் அதிகப்பட்சமாக முதுநிலை பட்டப்படிப்புகளில்தான் மாணவர்கள் சேர்கை மிகக் குறைவாக நடந்துள்ளது. இதனால் 2020-21 கல்வியாண்டில் 2, 487 இடங்கள் காலியாக இருந்தன, 2021-22 கல்வியாண்டில் 3, 413 இடங்கள் நிரப்பப்படவில்லை.

மத்திய அரசின் கட்டுப்பாட்டு உட்பட்ட ஐஐடி-கள், என்ஐடி-கள், ஐஐஐடி-கள் ஆகியவை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான இந்தியாவின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களாகக் கருதப்படுகின்றன. சென்னை, மும்பை, டெல்லி, கான்பூர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 23 ஐஐடி-கள் உள்ளன. இவற்றில் 2021-ம் ஆண்டில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மட்டும் 16, 234 சீட்டுகள் ஒதுக்கப்பட்டன. 2022-23 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டின்கீழ் 8, 195 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

திருச்சி, வாரங்கல், கோழிக்கோடு என நாட்டில் மொத்தம் 31 என்ஐடி-கள் உள்ளன. இவற்றில் 2021-ம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கென 23, 997 இடங்களும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு 13, 664 இடங்களும் ஒதுக்கப்பட்டன. 2022-23-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் 4, 364 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐஐடி, என்ஐடி கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜெஇஇ நுழைவுத் தேர்வுகள் ஆண்டுதோன்றும் நான்கு முறை நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வை கடந்த கல்வியாண்டில் மட்டும் 1 லட்சத்து 41 ஆயிரத்து 699 மாணவர்கள் எழுதினர். அவர்களில் 41 ஆயிரத்து 862 மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். அதேபோன்று முந்தைய கல்வியாண்டிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். இருந்தபோதும், 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கான் இடங்கள் இந்நிறுவனங்களில் கடந்த இரண்டாண்டுகளில் நிரப்பப்படாதது பேசு பொருளாகி உள்ளது.

Related Stories

No stories found.