துப்பாக்கியுடன் வினாத்தாள் மையங்களை பாதுகாக்கும் காவலர்கள்: பொதுத்தேர்வு நடத்த அனைத்தும் ரெடி

துப்பாக்கியுடன் வினாத்தாள் மையங்களை பாதுகாக்கும் காவலர்கள்: பொதுத்தேர்வு நடத்த அனைத்தும் ரெடி

கரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், தேர்வு மையங்கள் தயார்படுத்தும் பணி நிறைவு பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டது. தொடர்ந்து தொற்று பரவல் காரணமாக 2020-21 கல்வியாண்டில் வகுப்புகள் தாமதமாக திறக்கப்பட்டதாலும், கரோனா 2-ம் அலையின் காரணமாகவும், கடந்த ஆண்டும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டு, 10, 11-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் வழங்கலாம் என்ற குழுவின் அறிக்கையின்படி கடந்தாண்டு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகள் தேர்வு நடத்தப்படாததால், இந்த ஆண்டு பொதுத் தேர்வை மாணவர்கள் எளிதாக எதிர்கொள்வதற்காக, 2 திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டன. நாளை மறுநாள் 12-ம் வகுப்புக்கும், 6-ம் தேதி 10-ம் வகுப்புக்கும், 10-ம் தேதி 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. அதன்படி, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வில் 7,506 பள்ளிகளை சேர்ந்த 3,98,321 மாணவர்கள், 4,38,996 மாணவியர் என மொத்தம், 8,37,317 பேர் இந்தாண்டு தேர்வு எழுத உள்ளனர்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரை, மே 6-ல் தொடங்கி, 30-ம் தேதி வரை நடக்கிறது. இதில் 4,86, 87 மாணவர்கள், 4, 8, 86 மாணவியர், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 9,55,474 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

11ம் வகுப்பு பொதுத்தேர்வு, மே 10-ல் தொடங்கி மே 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வில் 7,534 பள்ளிகளில் இருந்து 4,33,684 மாணவர்கள், 4,50,198 மாணவியர், 2 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 8,83, 884 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மாநிலம் முழுவதிலும், 3 ஆயிரத்து 936 தேர்வு மையங்களிலும், 12 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு 3 ஆயிரத்து 119 தேர்வு மையங்களிலும் நடைபெற உள்ளது.

இதைத் தவிர, 10ம் வகுப்பில் 30,890 தனித்தேர்வர்களும், 11-ம் வகுப்பில் 5 ஆயிரத்து 717 தனித்தேர்வர்களும், 12-ம் வகுப்பில் 28 ஆயிரத்து 380 தனித்தேர்வர்களும் இந்தாண்டு பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.

பொதுத்தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில், தேர்வறைகள் தயார் நிலையில் உள்ளது. கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தி, தேர்வெண் ஒட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளது.

மேலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்விற்காக 308 வினாத்தாள் கட்டுக்காப்பு மையமும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்விற்காக 279 வினாத்தாள் கட்டுக்காப்பு மையமும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்விற்காக 279 வினாத்தாள் கட்டுக்காப்பு மையமும் அமைக்கப்பட்டு, கட்டுக்காப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் இருந்து, 10-ம் வகுப்பிற்கு 921 வழித்தடங்களிலும், 11-ம் வகுப்பிற்கு 816 வழித்தடங்களிலும், 12-ம் வகுப்பிற்கு 815 வழித்தடங்களிலும் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் எடுத்துச் செல்ல வழித்தட அலுவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

10, 11, 12 வகுப்பு பொதுத்தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதை தடுப்பதற்காக 3,050 பறக்கும் படைகளும், 1,241 ஸ்டாண்டிங் ஸ்குவார்டு படைகளிலும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 10-ம் வகுப்பு விடைத்தாள்கள் 118 விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் பெறப்பட்டு, 86 விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கும், 11, 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் முறையே 117 விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் பெறப்பட்டு, 80 விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பப்படவுள்ளன.

வினாத்தாள் கசிவதை தடுக்க கட்டுக்காப்பு மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, தேர்வு மையங்களுக்கு ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும் என அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in