தமிழ்நாட்டில் இன்று தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை மாநிலம் முழுவதும் 9.10 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று முதல் வரும் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. 12,616 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படித்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள் , மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 9 லட்சத்து10 ஆயிரத்து 24 பேர் எழுத உள்ளனர்.
மேலும், தனித்தேர்வர்களாக 28 ஆயிரத்து 827 மாணவர்கள், சிறைவாசிகள் 235 பேர் எழுத உள்ளனர். தேர்வர்களின் வசதிக்காக 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வினை நடத்துவதற்கு உரிய முன்னேற்பாடுகளை அரசுத் தேர்வுத்துறை இயக்குநரகம் செய்துள்ளது. 304 இடங்களில் கேள்வித்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பறக்கும் படை உறுப்பினர்கள் 3,350 பேரும், நிலையான பறக்கும் படை 1,214 பேரும், தேர்வினை கண்காணிக்கும் பணியில் 48 ஆயிரத்து 700 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள 810 பள்ளிகளில் படிக்கும் 66 ஆயிரத்து 771 மாணவர்கள் 288 மையங்களில் தேர்வினை எழுதுகின்றனர். தேர்வு மையங்களைக் கண்காணிக்கும் பணியில் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக 323 பேரும், துறை அலுவலர்கள் 330 பேரும், அறை கண்காணிப்பாளர்கள் 3400 பேரும், பறக்கும் படையில் 668 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர், கடலூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, பாளையங்கோட்டை, திருச்சிராப்பள்ளி, புழல் சிறையில் உள்ளவர்களும் தேர்வு எழுதுவதற்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு விதிகளின் படி சலுகைகளை வழங்கப்பட்டுள்ளன. தேர்வுப் பணியில் அனைத்து நிலைகளிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் 24 மணி நேர ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் தங்களுடன் செல்போன் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவுரைகளை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ செல்போன், இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் 9498383076, 9498383075 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்வதற்காக தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.