நக்கீரருக்கும், தருமிக்கும் அருள்புரிந்த திருவிளையாடல்

ஆவணி மூலத் திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்
ஆவணி மூலத் திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்
Updated on
3 min read

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் முதல்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கங்கள் தோன்றின. இதில் கடைசியாக தோன்றியது கடைச்சங்கம். இதில் 49 தமிழ்ப் புலவர்கள் இடம் பெற்றிருந்தனர். இவர்களுக்கு தலைவராக விளங்கியவர் நக்கீரர். கீரம் என்றால் சொல் என்று பொருள். நக்கீரர் என்றால் ‘நல்ல சொல்லுக்கு உரியவர்’ என்று பொருள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

முருகப்பெருமான் மீது இவர் இயற்றிய திருமுருகாற்றுப்படை என்ற சங்க இலக்கிய நூல் மிகவும் புகழ்பெற்றது. இதனை இயற்றியதாலேயே ஒரு பூதத்திடம் இருந்து 1,000 சிவனடியார்களை முருகப்பெருமான் காத்தருளினார். இந்நிகழ்ச்சியை, ‘மலைமுகஞ்சு மந்த புலவர் செஞ்சொல் கொண்டு வழிதிறந்த செங்கை வடிவேலா’ என்று அருணகிரிநாதர் புகழ்ந்துரைக்கிறார். முருகப்பெருமான் மீது மட்டுமல்ல தமிழின் மீதும் இவருக்கு தீராத காதல் உண்டு. இதனை உலகுக்கு உணர்த்த சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடலே ‘தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்’ ஆகும்.

தருமி என்பவர் ஆதி சைவ பிரம்மச்சாரி. சிவபெருமான் மீது கடும் பக்தி கொண்டவர். சிவாகமத்தை நன்கு கற்றுத் தேர்ந்தவர். மதுரை சொக்கநாதர் சன்னதியில் சிவத்தொண்டு செய்ய எண்ணினார். ஆனால், அவரோ பிரம்மச்சாரி. திருமணமான பிறகுதான் சன்னதிக்குள் ஒருவர் பட்டராக நுழைய முடியும். அக்கால வழக்கப்படி பெண் வீட்டாருக்கு கன்யாசுல்கமாக (இது மணமகன் கொடுக்க வேண்டிய வரதட்சணை) மாப்பிள்ளை தரப்பில் ஆயிரம் பொற்காசுகள் கொடுக்க வேண்டும். வறுமையில் வாடிய தருமி ஆயிரம் பொற்காசுக்கு எங்கே செல்வார்?

சொக்கநாதர் சன்னதியில் நின்றபடி, ‘உமக்கு தொண்டு செய்யும் பாக்கியம் கிடைக்கவில்லையே’ என்று தினமும் மனம் வருந்தினார். சிவபெருமான் மனமிறங்கினார். தருமிக்கும் ஆயிரம் பொற்காசு கிடைக்க வேண்டும். அதேவேளை நக்கீரரின் பெருமையையும் உலகமறியச் செய்ய வேண்டும் என்பதற்காக தனது திருவிளையாடலை அரங்கேற்றினார்.

அந்த சமயத்தில், வங்கிய சூடாமணி பாண்டியன் என்ற மன்னன் மதுரையை ஆட்சி செய்துவந்தார். மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேசுவரர் கோயில் நந்தவனத்தில் ஏராளமான செண்பக மரங்களை வளர்த்து, செண்பக மலர்களால் இறைவனை அர்ச்சிப்பது மன்னனின் வழக்கம். இதனால் இவருக்கு செண்பகப்பாண்டியன் என்றும் பெயர் ஏற்பட்டது. இவரது அவையிலேயே அரசவைப் புலவராக நக்கீரர் வீற்றிருந்தார்.

பெண்களின் கூந்தல் மணமுடன் இருப்பதற்கு, அவர்கள் சூடும் மலர்கள் காரணமா? அல்லது இயற்கையாகவே கூந்தலுக்கு மணம் உண்டா? என்று மன்னனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை தெளிவிப்போருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசளிக்கப்படும் என மன்னர் அறிவிக்கச் செய்தார். பொற்காசுகள் கொண்ட பொற்கிழி (பொட்டலம்) அரசவையில் தொங்கவிடப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் - ஆவணி மூலத் திருவிழா
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் - ஆவணி மூலத் திருவிழா

சிவபெருமான் ஒரு புலவரைப்போல் வேடமிட்டு தருமியின் முன்பு தோன்றினார். மன்னரின் சந்தேகத்தைப் போக்கும் ஒரு செய்யுள் எழுதப்பட்ட ஓலையை தருமியிடம் கொடுத்து,

‘மன்னரிடம் செய்யுளைக் கொடுத்து ஆயிரம் பொற்காசுகளை பரிசாக பெற்றுக்கொள்’ என்று கூறி அனுப்பினார்.

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது கண்டதும் மொழிமோ

பயிலியது கெழிஇய நட்பின் மயிலியல்

செறியெயிற் றரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீயறியும் பூவே”

“மலர்களின் மகரந்தங்களை எடுத்து வாழும் அழகிய சிறகுகளை உடைய தும்பியே! மயில் போன்ற அழகும், அழகிய பற்களையும் கொண்ட, என்னுடன் பல பிறவிகளாக நட்புடன் பழகும் எனது ராணியின் கூந்தலை விட மணமுள்ள மலர்கள் ஏதும் உள்ளனவா? என்னுடைய விருப்பத்துக்கேற்ற பதிலைக் கூறாமல், நீ அறிந்ததைக் கூறு” என்பது இதன் விளக்கம்.

மன்னன் செண்பகப் பாண்டியன் இதையேற்று தருமிக்கு பரிசளிக்க முயற்சிக்கையில், இச்செய்யுளில் பிழை இருப்பதாக நக்கீரர் தடுத்தார். மனம் வருந்திய தருமி மீண்டும் சன்னதிக்கு வந்து சொக்கநாதரிடம் அவையில் நடந்ததைக் கூறி வருந்தினார். சிவபெருமான் மீண்டும் புலவராக வந்து தருமியை அழைத்துக்கொண்டு பாண்டியனின் அவைக்குச் சென்றார். நக்கீரருக்கும், புலவருக்கும் கடும் விவாதம் நடந்தது. வந்திருப்பது இறைவனே என்பதை அறிந்தும், அந்தச் செய்யுளில் பொருட்குற்றம் இருக்கிறது என நக்கீரர் வாதிட்டார். கோபம் கொண்ட இறைவன் தனது நெற்றிக்கண்ணைத் திறக்க, அதன் வெப்பம் தாளாமல் நக்கீரர் பொற்றாமரைக் குளத்தில் விழுந்தார்.

இவ்வாறு நக்கீரரின் பெருமையை வெளிப்படுத்திய சிவபெருமான் அனைவருக்கும் காட்சி தந்தார். மன்னரும், மற்ற புலவர்களும் இறைவனை அடிபணிந்து வேண்டிக்கொள்ள, நக்கீரரை மீண்டும் உயிர்ப்பித்து வரச் செய்தார் ஈசன். தருமிக்கும் ஆயிரம் பொற்காசுகளை வழங்கச் செய்தார்.

திருவிளையாடல் புராணத்தில் 52-வது படலமாக இது அமைந்துள்ளது. ஆவணி மூலத் திருவிழாவில் 4-ம் நாள் நிகழ்ச்சியில் இப்படலக் காட்சியை தரிசிக்கலாம்.

அப்போது சுவாமியின் கையில் ‘கொங்குதேர் வாழ்க்கை..’ என்ற செய்யுள் பொறிக்கப்பட்ட வெள்ளி ஓலை இடம்பெற்றிருக்கும். பக்கத்தில் ஒரு பொற்கிழி குடம் தொங்க விடப்பட்டிருக்கும். மற்றவர்கள் சிற்பங்களாக காட்சியளிப்பார்கள். அலங்காரம் மிகச் சிறப்பாக இருக்கும். அனைவரும் காண வேண்டிய திருவிழா இது.

22.8.2023 - தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்.

மீனாட்சி அம்மன் கோயில்
மீனாட்சி அம்மன் கோயில்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in