`சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்'

முதல்வருக்கு பக்தை கோரிக்கை
`சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்'
சிதம்பரம் நடராஜர் கோயில்

தன்னை சாதியை சொல்லி திட்டிய சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் மற்றும் அறநிலையத் துறை அமைச்சருக்கு வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் சிதம்பரத்தை சேர்ந்த சிவ பக்தை ஒருவர்.

சிதம்பரம் பழைய புவனகிரி சாலையைச் சேர்ந்தவர் லட்சுமி என்ற ஜெயசீலா. சிவ பக்தையான இவர், தினந்தோறும் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி நடராஜர் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றிருந்தார். அப்போது கனகசபை எனப்படும் சிற்றம்பலம் மேடை மீது ஏறி நடராஜரை தரிசிக்க முயன்றார். ஆனால் அங்கிருந்த தீட்சிதர்கள் அவரை சிற்றம்பல மேடையில் ஏற அனுமதிக்கவில்லை. தடுத்து நிறுத்தி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவரை கேவலமாக பேசியதாகவும், சாதியை சொல்லி திட்டியதாகவும் கூறப்படுகிறது.

அதனையடுத்து கோயிலில் இருந்து வெளியேறிய ஜெயசீலா இதுகுறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் புகாரை பதிவு செய்த சிதம்பரம் நகர காவல் நிலையத்தினர் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனாலும் இதுநாள் வரை அவர்கள் யாரும் கைது செய்யப் படவில்லை.

ஜெயசீலா
ஜெயசீலா

அதனால் தமிழக முதல்வருக்கும் அறநிலைத் துறை அமைச்சருக்கும் இது குறித்த வீடியோ பதிவு ஒன்றை நேற்று இரவு ஜெயசீலா அனுப்பியுள்ளார்.

அதில், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தான் சென்றபோது நடந்ததைப் பற்றி விரிவாக விவரித்துள்ள ஜெயசீலா இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள போதிலும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், தன்னை மட்டும் அடிக்கடி போலீஸார் விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிற்றம்பல மேடையில் ஏறி வழிபடுவது அனைத்து பக்தர்களுக்குமான வழிபாட்டு உரிமை, அது சமீப காலங்களாக கரோனாவை காரணம் காட்டி தீட்சிதர்களால் மறுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ள ஜெயசீலா, அந்த உரிமை அனைத்து பக்தர்களுக்கும் மீண்டும் கிடைக்க முதல்வரும் அறநிலையத் துறை அமைச்சரும் ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தீட்சிதர்களின் மீது நடவடிக்கை எடுக்கவும், சிற்றம்பல மேடையில் ஏறி வழிபட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி ஜெயசீலா அனுப்பியுள்ள வீடியோவின் மீது முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவார் என நடராஜர் கோயில் பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in