இறைவன் எப்போது ஒருவருக்கு நற்கதி அருள்வார்?

இறைவன் எப்போது ஒருவருக்கு நற்கதி அருள்வார்?

இறைவனின் பாதமே துணை, அவன் பாதமே கதி என்று நினைத்து, எப்போதும் அவன் சரணங்களை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தால் அவன் நற்கதியை அருள்வது உறுதி. அதற்கு அவன் பாதங்களைப் பற்றிக் கொள்வதே ஒருவரது கடமையாகும். இதுதான் சரணாகதி.

சரணாகதிக்கு 5 அங்கங்கள் உண்டு. அனுகூல்ய சங்கல்பம் (இறைவனுக்கு பிடித்தவற்றை செய்தல் – தர்மவழியில் செல்லுதல்), ப்ராதிகூல்ய வர்ஜநம் (இறைவனுக்கு பிடிக்காதவற்றை செய்யாதிருத்தல் – அதர்ம வழியில் செல்லாமல் இருத்தல்), மகாவிசுவாசம் (அவன் காப்பான் என்று உறுதியாக நம்புதல்), கோப்த்ருத்வ வரணம் (சரணம் அடைந்தேன்), கார்ப்பணம் (என்னைக் காத்துக் கொள்ளும் சக்தி என்னிடம் இல்லை – ஆணவம் அழித்தல்) என்பவை ஆகும்.

ராமாயணத்தில் சரணாகதி தத்துவம் அழகாக சொல்லப்பட்டிருக்கும். பால காண்டத்தில் தேவர்கள், அயோத்யா காண்டத்தில் பரதன், ஆரண்ய காண்டத்தில் ரிஷிகள், கிஷ்கிந்தா காண்டத்தில் சுக்ரீவன், யுத்த காண்டத்தில் விபீஷணன் ஆகியோர் ராமபிரானை சரணாகதி செய்கிறார்கள்.

விபீஷண சரணாகதியில் மேலே சொல்லப்பட்ட 5 அங்கங்களும் இருக்கும். மேலும், ஆறாவதாக அங்கீ – அகிஞ்சன – விருப்பு வெறுப்பு இன்றி இருத்தல் குறித்தும் கூறப்படும். அனைத்தையும் விட்டுவிட்டு, ஸ்ரீராமபிரானின் பாதமே கதி என்று வந்த விபீஷணனை, முதலில் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

“சுக்ரீவனும் ராமபிரானை சரணடைந்துள்ளார். அவரும் அண்ணனை விட்டுவிட்டு வந்துள்ளார். அவரைப் போலத்தான் விபீஷணன் என்றாலும் இவர் பகைவர் அணியில் இருந்து வந்துள்ளார். அதனால் விபீஷணனை ஏற்க வேண்டாம்” என்று ஜாம்பவான் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் ஆஞ்சநேயர் மட்டும், ‘இலங்கையிலேயே இவர்தான் தர்மத்தை கடைபிடிப்பவர்’ என்று கூறினார்.

ராமபிரானும் விபீஷணனுக்கு ஆதரவு நல்குகிறார். இலங்காதிபதியாக முடிசூட்டுகிறோம் என்று ராம்பிரான் சொன்னபோது, பரதனுக்கு அளித்ததுபோல், திருவடி அளித்தால் போதும் என்று கூறுகிறார் விபீஷணன். அதன்படி ராமபிரானின் திருவடியை தன் தலையில் சூடிக் கொண்டார். அதனால், தாம் ஆராதனை செய்யும் ஸ்ரீரங்கநாதரையும் விபீஷணனுக்கு அளித்தார் ராமபிரான். இதன்மூலம் பரிபூர்ண பக்திக்கு, சரணாகதிக்கு, பகவான் தன்னையே தருகிறார் என்று அறியப்படுகிறது. இறைவன் சரணமே கதி என்பதே சரணாகதி. ஆழ்வார்களைப் போல் திருமாலின் குணங்களில் ஆழ்ந்திருந்ததால் விபீஷணனும் விபீஷணாழ்வார் என்று பெயர் பெற்றார். ராம ராம ராம ராம ராம ராம..

Related Stories

No stories found.