பக்தனுக்காக பரமாத்மா என்ன செய்வார்?

பக்தனுக்காக பரமாத்மா என்ன செய்வார்?

தன் பக்தனுக்கு சேவை செய்வதில் இறைவனுக்கு அதிக விருப்பம் இருப்பதாகக் கூறப்படுவதுண்டு. இறைவனை உணர்ந்துகொள்ள பக்தன் முயற்சி செய்தால், உதவி செய்ய, சேவை புரிய இறைவன் ஓடோடி வருவான்.

இப்போது ஒரு மகாபாரத சம்பவத்தைப் பார்ப்போம்.

பாரதப் போர் 18 நாட்கள் நடைபெற்றது என்பதை நாம் அறிவோம். பகல் முழுவதும் காண்டீபனுக்கு (அர்ஜுனன் / பார்த்தன்/ தனஞ்செயன்) தேர் ஓட்டியவர் கிருஷ்ண பரமாத்மா. இரவில் போர் செய்யாததால் அனைவரும் ஓய்வெடுத்துக் கொள்வது வழக்கம்.

இரவு நேரத்தில் பார்த்தனும் கிருஷ்ணரும் உரையாடிக் கொண்டிருப்பார்கள். அதன்பிறகு பார்த்தன் உறங்கி விடுவான். பகல் முழுவதும் போர்புரிந்த களைப்பு இருக்கத்தானே செய்யும்.

பகல் முழுவதும் தேர் ஓட்டினாலும் கிருஷ்ணர் மட்டும் இரவில் உறங்குவதில்லை. தேரை இழுத்த குதிரைகளுக்கு தேவையானதை செய்வார்.

வெந்நீர் போட்டு, குதிரைகளை குளிப்பாட்டுவது, உடல் முழுவதும் பிடித்து விடுவது, பசுமையான புல்லைக் கொண்டு வந்து குதிரைகளுக்கு ஊட்டுவது, வேகவைத்த கொள்ளை ஊட்டுவது, அவை உறங்கும்வரை அவற்றுக்கு சேவை செய்வது என்று கிருஷ்ணருக்கு பணிகள் நிறைய இருக்கும்.

அதன்பின்னர் கொட்டிலைத் தூய்மை செய்தால், அதற்குள் விடிந்துவிடும். உடனே போர்க்களத்துக்குச் செல்ல ஆயத்தமாக வேண்டும். ஒவ்வொரு நாளும் இப்படியே நடந்தது.

ஒருநாள் பார்த்தனுக்கு இரவில் விழிப்பு வந்தது. அருகில் இருந்த கிருஷ்ணரைக் காணவில்லை என்று அவரைத் தேடியபடி வெளியே வந்தான் காண்டீபன்.

அங்கு பார்த்தால், குதிரைகளுக்கு சேவை புரிந்து கொண்டிருந்தார் கண்ணன். ஓடிச் சென்று பரந்தாமனைக் கட்டிக் கொண்டான் பார்த்தன். “ஏன் கண்ணா.. இந்தப் பணிகளை நீதான் செய்ய வேண்டுமா? வேறு யாராவது செய்ய மாட்டார்களா? உன் அடிமை நான் உறங்கும்போது நீ இப்பணிகளை செய்யலாமா?” என்று கண்ணனைக் கேட்டான் அர்ஜுனன்.

கிருஷ்ணர் சொல்கிறார்:

“ஒன்றைப் புரிந்துகொள் அர்ஜுனா. குதிரைகளை நாம் பராமரிக்காவிட்டால், அவை தேரை வேகமாக இழுத்துச் செல்லாது. பகைவரை நாம் வென்றாக வேண்டும். நமக்கு இருக்கும் அக்கறை, வேறு ஒருவருக்கு இருக்கும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? நம் வேலையை நாம்தான் செய்ய வேண்டும்.

இந்தப் போர் முடியும்வரை நீ தலைவன், நான் உன் ஏவல் கேட்கும் சாரதி. போர் புரிவது உன் கடமை. தேர் ஓட்டுவது என் கடமை. குதிரைகளைப் பராமரிப்பது என் பணி. மறுநாள் போர் புரிவதற்காக ஓய்வெடுத்துக் கொள்வது தலைவனின் தொழில்.

நம் தொழில் வேறுவேறாக இருந்தாலும் நம்தொழில் போர் புரிவது. அவரவர் கடமையை அவரவர் செவ்வனே செய்தால் மட்டுமே போரில் வெற்றி கிட்டும். நீ உன் கடமையை செய் (ஓய்வெடுப்பது). என்னை என் கடமையை செய்ய விடு (குதிரையைப் பராமரிப்பது). நாம் செய்யும் தொழிலில் ஏற்றத்தாழ்வு கிடையாது” என்று கூறி முடித்தார் கிருஷ்ணர்.

கண்ணனின் செயல், சொல்லால் நெகிழ்ந்தான் பார்த்தன். வெற்றிகளைக் குவித்தான் தனஞ்செயன்.

இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால், ‘கடமையைச் செய்வோம். நேரம் வரும்போது அதற்கான பலனை அடைவோம்’ என்பதே. பக்தனுக்காக எதையும் செய்வார் பரந்தாமன்.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..

(பார்த்தன், தனஞ்சயன், விஜயன், சுவேத வாகனன், கிரீடி, பல்குனன், பீபத்சு, ஜிஷ்ணு, கிருஷ்ணன், சவ்யச்சின் ஆகிய பெயர்களால் அர்ஜுனன் அழைக்கப்படுவதாக விராட பருவத்தில் கூறப்படும்.)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in