திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ‘உதய அஸ்தமன சேவை’

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ‘உதய அஸ்தமன சேவை’

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் வழக்கமான தினசரி சேவைகளோடு, புதிதாக ‘உதய அஸ்தமன சேவை’ என்ற பெயரில் புதிய திட்டத்தை தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் வழக்கமான பக்தர்கள் தரிசனம் மட்டுமன்றி, பல்வேறு சிறப்பு நிகழ்வுகளும், பூஜைகளும் தினசரி நடைபெற்று வருகின்றன. இவற்றுக்கு தனித்தனியாக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதும் வழக்கம்.

அந்த வகையில் ‘உதய அஸ்தமன சேவை’ என்ற பெயரில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதாவது, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காலையில் சுப்ரபாதம் தொடங்கி, அர்ச்சனை, தோமாலை, கல்யாண உற்சவம் முதல் இரவு ஏகாந்த சேவை வரை பல்வேறு உற்சவங்கள் நடைபெறுகின்றன. இவை அனைத்தையும் ஒருநாள் முழுவதும் கோயிலில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ‘உதய அஸ்தமன சேவை’க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான சிறப்பு திட்டத்தின்படி சாதாரண நாட்களில் பங்கேற்க ஒரு கோடி ரூபாயும், வெள்ளிக்கிழமைகளில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுவதால் அன்று மட்டும் ஒன்றரை கோடி ரூபாயும் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்தைச் செலுத்திவிட்டால், அடுத்த 25 ஆண்டுகளுக்கு உதய அஸ்தமன சேவையில் பங்கேற்கலாம்.

முதல்கட்டமாக 531 டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்கான தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம் திரட்டப்படும் நிதியானது, திருப்பதியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.