துளசியாபட்டினத்தில் தமிழ் மூதாட்டி ஒளவைக்கு விழா!

அறநிலையத் துறை சார்பில் ஏற்பாடு
துளசியாபட்டினத்தில் தமிழ் மூதாட்டி  ஒளவைக்கு விழா!
ஒளவை சன்னிதி

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த துளசியாபட்டினத்தில் தமிழ் மூதாட்டி ஒளவைக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பான விழா நடைபெற்றது.

துளசியாப்பட்டினம் கிராமத்தில் விஸ்வநாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு, இறைபணியுடன் சமூகப்பணியும் செய்து வந்த தமிழ் மூதாட்டி ஒளவைக்கு தனியாக சன்னிதி அமைந்துள்ளது. 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தக் கோயிலுக்கு இவ்வூர் மக்கள் தங்களுக்குள் வரி வசூல் செய்து ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் ஆறு நாட்கள் திருவிழா நடத்துவார்கள். அது 2004-ம் ஆண்டு வரை தொடர்ந்தது.

அதன்பின்னர் 2005-ம் ஆண்டிலிருந்து இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் இந்த விழா நடத்தப்படுகிறது. ஆறு நாட்களுக்குப் பதில் இரண்டு நாள் விழாவாக அரசு சார்பில் சிறப்பாக நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஒளவை விழா இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாக இன்று தொடங்கியது. 48-வது ஆண்டு விழாவான இதில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ப.ராணி, நாகை மாலி எம்எல்ஏ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் ஒளவை பற்றிய வரலாற்று விளக்கக் கையேட்டினை ஆட்சியர் வெளியிட்டார். ஆத்திச்சூடி போன்ற ஒளவையாரின் பாடல்களை பாடி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு ஆட்சியர் பரிசுகளை வழங்கிப் பேசினார்.

ஒளவை விழாவில் உரையாற்றும் ஆட்சியர்
ஒளவை விழாவில் உரையாற்றும் ஆட்சியர்

அப்போது அவர் பேசியதாவது: “பெண்பாற் புலவர்களில் சிறப்பு மிக்கவர் ஒளவையார். அரிய கருத்துகளை எளிய நடையில் தந்தவர். ஆத்திச்சூடி, மூதுரை, நல்வழி, கொன்றைவேந்தன் போன்ற நீதி நூல்களை தமிழுக்கு வழங்கியவர். இங்குள்ள கொல்லன் திடல் என்ற ஊரில் ஔவையார் தங்கியிருந்தபோது அப்பகுதியை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. அவரை வேறு இடம் நோக்கி செல்லுமாறு வேண்டினான் கொல்லன். அதற்கு ஒளவையார் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று கூறி, 'வல்லனும் வெள்ளையாகி வளவனும் பேருராகி கொல்லன் திடல் தவிர கொள்ளாப் பெருங்கடலை’ பாடினார். அவர் இப்படி பாடியதும் அந்த ஊரை சூழ்ந்த வெள்ளம் வளவனாற்றில் வடிந்ததாக வரலாறு கூறுகிறது.

அப்படிப்பட்ட சிறப்புகளுக்கு உரிய ஔவைக்கு தனி சன்னிதி இடம் பெற்றிருக்கும் இந்த ஆலயத்திற்கு வந்து தரிசித்து, ஆலய விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. கூடிய விரைவில் இந்தக் கோயிலை புதுப்பித்து குடமுழுக்கு விழா நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு ஆட்சியர் அருண் தம்புராஜ் பேசினார்.

Related Stories

No stories found.