திருவண்ணாமலை தீபத் திருவிழா தொடங்கியது

திருவண்ணாமலை தீபத் திருவிழா தொடங்கியது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நினைத்தாலே முக்தி தரும் தலமான  திருவண்ணாமலை சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது.  இங்குள்ள  அண்ணாமலையார் கோயிலில்  பல்வேறு திருவிழாக்கள்  நடைபெற்றாலும்  கார்த்திகை தீபத்திருவிழாவே உலகப்  புகழ்பெற்றது.

கார்த்திகை மாதம் பௌர்ணமி,  கார்த்திகை நட்சத்திரம் கூடிய நாளில் இங்குள்ள 2,668 அடி உயர மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். சிவ பெருமானே ஜோதி வடிவாகக் காட்சி தருவதாக நம்பப்படுகிறது. அந்த வகையில் டிசம்பர் 6-ம் தேதி அண்ணாமலையார் கருவறையின் முன்பாக அதிகாலையில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு  மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. 

தெய்வத் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை கோயிலில்  கொடியேற்றம் விமரிசையாக நடைபெற்றது.  கோயிலில் உள்ள தங்கக்கொடி மரத்தில், சதுர்த்தி திதி, பூராடம் நட்சத்திரம், சித்த யோகம் கூடிய சுபதினம், விருச்சிக லக்னத்தில் காலை ஆறு மணி அளவில் மங்கல இசை ஒலிக்க, வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷத்தை முழங்கி அண்ணாமலையாரை வழிபட்டனர்.

தீபத் திருவிழாவில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் திருவண்ணாமலையில் அடிப்படை வசதிகள்  மேம்படுத்தப்பட்டுள்ளன.  சிறப்புப் பேருந்து  போக்குவரத்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வெளி மாவட்ட போலீஸார்  வரவழைக்கப்பட்டு  பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in