பத்மாவதியை ஸ்ரீவேங்கடவன் மணம் முடித்த நாராயணவனம்

ஏழுமலை வேங்கடவன் - 3
பத்மாவதி  தாயாருடன் திருப்பதியில் ஸ்ரீநிவாச பெருமாள்
பத்மாவதி தாயாருடன் திருப்பதியில் ஸ்ரீநிவாச பெருமாள்

திருப்பதியில் ஸ்ரீநிவாச பெருமாளுக்கும், ஆகாச ராஜனின் மகளாக அவதரித்த பத்மாவதி தாயாருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்ற இடம் நாராயணவனம் எனப்படுகிறது. இந்த வனத்தில்தான் ஸ்ரீநிவாச பெருமான் வேட்டைக்குச் செல்லும் போது, தன் தோழியருடன் பூப்பந்து விளையாடிக் கொண்டிருந்த பத்மாவதி தேவியைக் கண்டார். இருவரும் மையல் கொண்டது இங்குதான் என்று ஸ்ரீவேங்கடேச மகாத்மியம் கூறுகிறது.

நாராயணவனம் ஸ்ரீ கல்யாண வேங்கடேஸ்வரர் திருக்கோயில்
நாராயணவனம் ஸ்ரீ கல்யாண வேங்கடேஸ்வரர் திருக்கோயில்

நாராயணவனத்தில் திருக்கல்யாணக் கோலத்தில் ஸ்ரீ கல்யாண வேங்கடேச பெருமாள் தரிசனம் தருகிறார். இக்கோயிலை மன்னர் ஆகாச ராஜன்தான் முதன்முதலில் கட்டியிருக்கிறார். அதன்பிறகு சோழ மன்னர்களாலும், விஜயநகரப் பேரரசு மன்னர்களாலும் இக்கோயில் விரிவுபடுத்தப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்குப் போகும் சாலையில் நகரியில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்திலும், புத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து 7 கி.மீ. தூரத்திலும் இத்திருத்தலம் அமைந்திருக்கிறது. நகரியில் இருந்து பயணிக்கையில் நாராயணவனம் கோயிலின் 7 அடுக்கு ராஜகோபுரத்தை வெகு தூரத்திலிருந்தே நாம் தரிசிக்க முடியும். வெள்ளை நிறத்தில் மிக உயரமான இக்கோபுரத்தை விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் கட்டினார்.

மூலவர் ஸ்ரீ கல்யாண வேங்கடேசர் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி அளிக்கிறார். திருமார்பில் மகாலட்சுமித் தாயார் எழுந்தருளியுள்ளார். திருக்கல்யாண கோலத்தில் இருப்பதால், தமது திருக்கையில் கங்கணம் அணிந்து சுவாமி கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார். வேட்டைக்குச் சென்றவர் என்பதால் சுவாமியின் இன்னொரு கையில் கத்தி இருக்கிறது.

ஸ்ரீ கல்யாண வேங்கடேஸ்வரர்
ஸ்ரீ கல்யாண வேங்கடேஸ்வரர்

மூலவரின் அருகில் சென்று தரிசிக்க முடியும் என்பதால், சுவாமியின் திருவடிகளை கண்குளிர தரிசனம் செய்யலாம். உற்சவருக்கு கல்யாண ஸ்ரீநிவாசர் என்பது திருநாமம். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உள்ளார்.

திருப்பதியில் திருமலையில் வேங்கடேச பெருமாளும், கீழே திருச்சானூரில் ஸ்ரீ பத்மாவதி தாயாரும் தனிதனிக் கோயில்களில் உள்ளனர். ஆனால், நாராயணவனத்தில் ஒரே கோயிலில் தனி சன்னதியில் பத்மாவதித் தாயார் வீற்றிருக்கிறார். இது அவருடைய பிறந்தகம் என்பதால், மஞ்சள் சரடுகள் அணிந்து சேவை தருகிறார். விளம்பி வருஷம், வைகாசி மாதம், உத்திர நட்சத்திரம் நாளன்று,

ஸ்ரீநிவாசருக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனால், இதே வைகாசி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று திருக்கல்யாணத் திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இக்கோயில் தீர்த்தம் பரம தீர்த்தம் எனப்படுகிறது. திருச்சானூரில் எழுந்தருளி இருப்பவர் மகாலட்சுமியாகிய அலர்மேல் மங்கை என்றும், இங்கு வீற்றிருக்கும் தாயார்தான் பத்மாவதி என்றும், இப்பகுதி உள்ளூர் மக்கள் தங்கள் ஊர் கோயிலை உயர்த்திக் கூறுகின்றனர்.

பத்மாவதி தாயார் திருக்கல்யாண வைபவத்துக்கு மஞ்சள் அரைத்த ஆட்டுக்கல்
பத்மாவதி தாயார் திருக்கல்யாண வைபவத்துக்கு மஞ்சள் அரைத்த ஆட்டுக்கல்

தாயார் சன்னதிக்கு வெளியில் பத்மாவதி திருக்கல்யாண வைபவத்துக்கு மஞ்சள் அரைத்த ஆட்டுக்கல் உள்ளது. சுவாமியின் வடபுறம் மற்றொரு சன்னதியில் ஆண்டாள் நாச்சியாரும்எழுந்தருளியுள்ளார்.

திருவேங்கட மலையில், ஏகாந்தமாக சேவை சாதிக்கும் ஸ்ரீநிவாச பெருமான், இங்கு கல்யாண வேங்கடேசப் பெருமாளாகக் காட்சி அளிப்பதால், இவ்வூருக்கும், இந்த ஊரின் பெருமாளுக்கும் ஏற்றம் அதிகம். பிராட்டியோடு சேர்த்து சேவை சாதிக்கும் கல்யாண வேங்கடேசரைக் காண பக்தர்கள் குவிகிறார்கள். திருமணம் வேண்டி காத்திருப்பவர்கள் இப்பெருமானைக் காண குவிகிறார்கள்.

அதுபோல், இப்பெருமானின் அருளால் மாங்கல்ய பாக்கியம் பெற்ற பெண்கள் தங்கள் கணவருடன் வந்து நேர்த்திக் கடன்களைச் நிறைவேற்றுகிறார்கள். திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இக்கோயில் உள்ளது.

பத்மாவதி தாயார்
பத்மாவதி தாயார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in