திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி

ஸ்ரீநிவாசனின் முதல் தரிசனம்

ஏழுமலை வேங்கடவன் - 2

திருமலை திருப்பதியில் ஸ்ரீமகாவிஷ்ணு தங்கி இருந்தது ஒரு புளியமரத்தின் அடியில்தான். இதனால் இன்றைக்கும் இத்தல விருட்சமாக புளியமரம் விளங்குகிறது. யோகத்தில் இருந்த பெருமாளைச் சுற்றிலும் புற்று வளர்ந்தது.

பசுவும், கன்றும்

எவ்வித அன்ன, ஆகாரமுமின்றி வாடும் பெருமாளைக் கண்டு, பிரம்மதேவர் ஒரு பசுவாகவும், சிவபெருமான் ஒரு கன்றாகவும் மாறினர். இவர்களை மாடு மேய்க்கும் இடையன் ஒருவர் மேய்த்து வந்தார். தினமும் இந்த பசுவும், கன்றும் மந்தையில் இருந்து விலகி, ஆழ்ந்த காட்டுக்குள் பெருமாள் யோகத்தில் இருக்கும் புற்றுக்கு அருகே செல்லும். புற்றின் துவாரம் வழியே பசுவானது பாலைச் சொரிந்து, பெருமாளுக்கு அமுது கொடுக்கும். பின்னர், மந்தைக்கு இவை திரும்பி விடும்.

பசுவின் மடியில் தினமும் பால் வற்றியிருப்பதைக் கண்ட இடையன் இதை பரிசோதிக்க எண்ணினார். மறுநாள் குறிப்பிட்ட நேரத்தில் மந்தையில் இருந்து விலகிச் சென்ற பசுவையும், கன்றையும் பின்தொடர்ந்து சென்றார். குறிப்பிட்ட புற்றின் மீது பால் சொரியும் பசுவைக் கண்டதும் ஆத்திரமுற்ற இடையன், பசுவை கம்பால் அடித்து விரட்டி, தன் கையில் இருந்த கோடரியால் புற்றை வெட்டினார். கோடரியானது புற்றின் உள்ளே இருந்த ஸ்ரீநிவாசப் பெருமாளின் மீது பட்டு ரத்தம் வழிந்தது.

பதறிப் போன இடையன் புற்றை விலக்கிப் பார்க்க, ஸ்ரீநிவாசப் பெருமாள் காட்சி தந்தார். மண்ணுக்கு வந்ததில் இருந்து யாருக்கும் காட்சி தராமல் இருந்த ஸ்ரீநிவாசப் பெருமாள், முதன்முதலில் திருக்காட்சி கொடுத்தது மாடு மேய்க்கும் இடையனுக்குதான். அதனால்தான் இன்றுவரைக்கும் திருப்பதி கோயிலில் மூலஸ்தான நடைதிறக்கும் போது அர்ச்சகர்கர்கள் அனைவரும் விலகிக் கொள்வார்கள். மூலவர் திருவேங்கடமுடையான் தினமும் அதிகாலையில் முதன்முதலில் யாதவர் ஒருவருக்குதான் காட்சி தருகிறார்.

ஸ்ரீநிவாசனின் முதல் தரிசனம்

கிருஷ்ணாவதாரத்தின் போது, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் வளர்ப்புத் தாயாக விளங்கியவள் யசோதை பிராட்டி. அவளே மறுபிறப்பில் வகுளாதேவியாக திருமலை திருப்பதியில் ஓர் ஆஸ்ரமம் அமைத்து வசித்து வந்தாள். இடையனால் காயமடைந்த ஸ்ரீநிவாசப் பெருமாள் வகுளாதேவியின் ஆஸ்ரமத்துக்கு வந்தார். அவரைக் கண்டதுமே புத்திர பாசம் பொங்க, அரவணைத்துக் கொண்டாள் வகுளாதேவி. அதன்பின், தாயும், புத்திரனும் சேர்ந்தே வசித்தனர். திருமலையில் திருவேங்கடமுடையானை தரிசித்து விட்டு வெளியே வந்ததும் இருக்கும் உள்பிரகாரத்தில் வகுளாதேவியின் சன்னதியை தரிசிக்கலாம்.

திருச்சானூர் பத்மாவதி தாயார்
திருச்சானூர் பத்மாவதி தாயார்

பத்மாவதி அவதாரம்

திருமலை திருப்பதியின் அடிவாரத்தில் உள்ள பகுதிகளை சந்திரிகிரி என்ற தலைநகரை மையமாகக் கொண்டு ஆகாசராஜன் என்ற மன்னன் ஆண்டு வந்தார். தனக்கு குழந்தை இல்லாததால், தனது குரு சுகமாமுனிவரின் ஆலோசனைப்படி புத்திர காமேஷ்டி யாகம் செய்ய முடிவெடுத்தார்.

யாகம் செய்யும் இடத்தை செம்மைப்படுத்தும் போது, பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்த தாமரையில், படுத்த நிலையில் ஒரு பெண் குழந்தை கிடைத்தது. தாமரைக்கு பத்மம் என்று பெயர் உண்டு. எனவே குழந்தைக்கு பத்மாவதி என்று பெயரிட்டார். இதுவே தூய தமிழில் அலர்மேல்மங்கை என்று அழைக்கப்படுகிறது.

ஸ்ரீ மகாலட்சுமி தாயாரே பத்மாவதியாக கார்த்திகை மாதம் வளர்பிறை பஞ்சமி நாளில்அவதரித்தாள். இதனைக் கொண்டாடும் வகையில்தான், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வளர்பிறை பஞ்சமி நாளை மையமாகக் கொண்டு, திருச்சானூர் பத்மாவதி தாயார் சன்னதியில் 10 நாள் தாயார் உற்சவம் கொண்டாடப்படுகிறது. தாயார் கண்டெடுக்கப்பட்ட இடம்தான் இப்போது திருச்சானூரில் பத்மசரோவரம் என்ற தெப்பக்குளமாக இருக்கிறது. கார்த்திகை பஞ்சமி அன்று இங்கு லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்று வருகிறது.

ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாண வைபவம்
ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாண வைபவம்

பத்மாவதி திருக்கல்யாணம்

ஆகாசராஜனின் புத்திரியான இளவரசி பத்மாவதி இளமைப் பருவம் அடைந்தாள். ஒருநாள் அரண்மனை நந்தவனத்தில் தன் தோழிகளுடன் பூப்பந்து விளையாடும் போது, வெள்ளைக் குதிரையின் மீது வேட்டைக்கு வந்த ஸ்ரீநிவாசப் பெருமாளைக் கண்டு மையலுற்றாள். ஸ்ரீநிவாசரும், தன் தாய் வகுளாதேவியிடம் சென்று, ஆகாச ராஜனிடம் அவள் மகளை தனக்கு பெண் கேட்குமாறு வேண்டினார். ஆனால், தன் ஏழ்மையை எண்ணி தாய் வருந்தினாள். அவளைத் தேற்றி, மன்னனிடம் பெருமாள் அனுப்பினார்.

இதனிடையே தன் மகளின் வாட்டத்தைக் கண்டு கலங்கிய ஆகாசராஜன், அவள் மனதை அறிந்து கொண்டார். அதே வேளை வகுளாதேவியும் அரண்மனைக்கு வந்து பெண் கேட்க, மன்னரும் சம்மதித்தார்.

சீனிவாசப் பெருமாளுக்கும், பத்மாவதிக்கும் திருமணம் இனிதே நடந்தது. இத்திருமணத்துக்காக குபேரனிடம் ஆயிரம் வராகன் பொன்னை ஸ்ரீநிவாசப் பெருமாள் கடனாக வாங்கியதாகவும், அதனை இப்போதும் குபேரனுக்கு திரும்பச் செலுத்தி வருவதாகவும் நம்பப்படுகிறது.

திருப்பதி பிரம்மோற்சவம்
திருப்பதி பிரம்மோற்சவம்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in