திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா - தருமபுர ஆதினத்தின் வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் சனீஸ்வரர்
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் சனீஸ்வரர்

திருநள்ளாறு கோயில் சனிப்பெயர்ச்சி திருவிழா பணிகளில் தன்னை கலந்து ஆலோசிக்க கோரி தருமபுரம் ஆதினகர்த்தர் அளித்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயிலில் சனீஸ்வரன் சன்னதி அமைந்திருப்பதால் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

கோயிலின் அனைத்து விழாக்களும் தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் தான் நடத்தப்படும் நிலையில், அறங்காவலர் குழுவோ, சிறப்பு அதிகாரியோ இல்லாவிட்டால் விழாக்கள் தொடர்பாக ஆதினத்தை கலந்தாலோசிக்க வேண்டுமென உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது. அதன்படி, கோயிலின் செயல் அலுவலரையும், சிறப்பு அதிகாரியாக மாவட்ட ஆட்சியரையும் நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தருமபுரம் ஆதீனம்
தருமபுரம் ஆதீனம்

டிசம்பர் 20ம் தேதி சனிப் பெயர்ச்சி நடைபெற உள்ள நிலையில், சனிப்பெயர்ச்சி திருவிழாவை நடத்துவதற்கு சிறப்புக் குழுவை அமைத்து அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோயிலில் விழாக்கள் நடத்துவது தொடர்பாக எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தருமபுரம் ஆதினத்தின் கட்டளை தம்பிரானுடன் கலந்து பேசிய பின்னர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 25ம் தேதி புதுச்சேரி அரசிடம் தருமபுரம் ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார்.

அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில், விழா பணிகள் தொடர்பாக தன்னை கலந்தாலோசிக்கவில்லை என்றும், விழா தொடர்பான டெண்டர் அறிவிப்பதிலும் கலந்தாலோசிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

எனவே தனது மனுவை பரிசீலிக்கவும், சனி பெயர்ச்சி விழா தொடர்பாக தன்னிடம் கலந்து பேச உத்தரவிடவும் வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தருமபுரம் ஆதினகர்த்தர் அளித்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நவம்பர் 23ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in