திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் அணிவகுக்கும் ஆச்சரியங்கள்!

ஆதிகேசவப் பெருமாள்
ஆதிகேசவப் பெருமாள்

418 ஆண்டுகளுக்குப் பின்பு திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் குமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் அணிவகுக்கும் ஆச்சரியங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் முகப்பு
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் முகப்பு

* கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் முழுவதுமாக ஆறுகளால் சூழப்பட்ட திருவட்டாறு என்னும் ஊரின் நடுப்பகுதியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்ட பழமையான வைணவத் திருத்தலம் இது!

*108 வைணவத் திருத்தலங்களுள் 76-வதாக போற்றப்படும் இந்த ஆலயத்தைக் குறித்து, நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடியுள்ளார். இதே குமரி மாவட்டத்தில் திருப்பதிசாரம் என்னும் ஊரில் உள்ள திருவாழ்மார்பன் ஆலயமும் திவ்யதேசங்களில் ஒன்றுதான். நம்மாழ்வார் அது குறித்தும் ஒரு பாசுரம் பாடியுள்ளார்.

*மேற்கு நோக்கிய வாசலில் மூலவர் 22 அடி நீளமும், 16008 சாளக்கிராமங்கள் உள்ளடங்கிய கடுசர்க்கரை திருப்படிமமாக ஆதிஷேசன் அரியணையில் அறுதுயில் கொண்டுள்ளார்.

*இந்த ஆலயத்தின் கர்ப்பக்கிரகத்தில் மூன்று நிலை வாயில்கள் மூலமாக பெருமாளின் திருப்பாதம், திருக்கரம், மற்றும் திருமுகத்தினை தரிசிக்கலாம்.

*நம்மாழ்வாரைத் தொடர்ந்து, அழகிய மணவாளதாசர், ஆதித்தவர்ம சர்வாங்கநாதன், வீரகேரள வர்மா போன்றோர் இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாள் குறித்து பாடியுள்ளனர்.

*வங்காள வைணவ பக்தி மறுமலர்ச்சியின் மூலவர் ஸ்ரீசைதன்ய மகா பிரபு, கிபி 1510-ல் இங்கு வருகைதந்து, பிரம்ம சம்ஹிதையின் ஜந்தாம் அத்தியாயத்திற்கு உரை எழுதியுள்ளார்.

*புரட்டாசி, பங்குனி மாதங்களில் 3 முதல் 9 வரையுள்ள நாள்களில் அஸ்தமன சூரியனின் நீள்கதிர்கள் கர்ப்ப கிரஹத்தினுள் பரவி மூலவரை வணங்குவது தெய்வீக அதிசய காட்சியாகும்.

*மிக அழகிய மர மற்றும் கல் சிற்ப வேலைபாடுகள் கொண்டு கேரள கட்டிடக்கலைப் பாணியில் அமையப்பட்ட திருக்கோயில் இது.

*திருவட்டாறு ஆதிகேசப் பெருமாள் கோயில் கருவறை முன்பு 18 அடி நீளம், 18 அடி அகலம், மூன்று அடி உயரத்தில் ஒரே கல்லால் ஆன ஒற்றைக்கல் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. 12 தூண்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மண்டபம் இந்தியாவிலேயே பெரிய ஒற்றைக்கல் மண்டபமாகும்.

*அவல், சர்க்கரைப் பாகு கலவையில் கதலி வாழைப் பழத்தை வட்டமாக வெட்டிப்போட்டு படைப்பது ஆதிகேசவப் பெருமாளுக்கு மிகவும் பிடித்தமான நைவைத்யம்.

எப்படிச் செல்வது?

நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்பு திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் நடக்கும் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கேரளத்தில் இருந்தும் பக்தர்கள் ஆலயம் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

நாகர்கோவிலில் இருந்து 28 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது திருவட்டாறு. இங்குள்ள பேருந்து நிலையத்தில் இருந்து பொடிநடை போடும் தூரத்திலேயே கோயில் வந்துவிடும். நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம் என கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் இருந்து நேரடிப் பேருந்து வசதியும் உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கூடுதல் பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் காரில் செல்பவர்கள் நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அழகிய மண்டபம் சந்திப்பில் இருந்து வேர்கிளம்பி வழியாகச் செல்லலாம்.

எப்போது தரிசிக்கலாம்?

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தில் தினமும் அதிகாலை 5 மணிக்கு திருநடை திறக்கப்படும். நண்பகல் 12 மணிவரை நடை திறந்திருக்கும். மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கபட்டு, இரவு 8 மணிக்கு அடைக்கப்படும். தினமும் ஐந்துகால பூஜை நடக்கிறது. அதன்படி அதிகாலை நிர்மால்ய பூஜை. அதன்பிறகு சுவாமியை மண்டபத்தில் எழுந்தருளச் செய்து அபிஷேகம் செய்யப்படும். அடுத்து உஷ பூஜை, தொடர்ந்து உற்சவருக்கு அபிஷேகம், மூலவருக்கு பஞ்ச கவ்யம் சாத்தப்படும். தினமும் காலை 7.45 மணிக்கும், மாலையில் 6.30 மணிக்கும் இருவேளை ஆரத்தி நடக்கிறது.

திருவிழாக்கள்

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பங்குனி, ஐப்பசி மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறுகிறது. பங்குனி மாதத் திருவிழாவின்போது மூவாற்றுமுகம் ஆற்றிலும், ஐப்பசி மாதத் திருவிழாவின்போது களியல் ஆற்றிலும் சுவாமி ஆறாட்டுக்கு எழுந்தருளுவது மிகவும் சிறப்பாகும். இதேபோல் புரட்டாசி மாத சனிக்கிழமைகளும் இங்கு மிகவும் விசேஷம். அன்றைய நாள்களிலும், வைகுண்ட ஏகாதசி தினத்தில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்விலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். சித்திரை விஷு கனி காணல் நிகழ்வு, ஓணம் பண்டிகை ஆகியவையும் இங்கு வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in