அசைந்து வரும் ஆழித்தேர்

திருவாரூர் தேரோட்டம்
திருவாரூர் தேரோட்டம்

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி ஆசியாவின் மிகப்பெரிய தேரான ஆழித்தேரோட்டம் இன்று காலை 8.10 க்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஆடித் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திரத் திருவிழா கடந்த பிப்ரவரி 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தேரோட்டத்திற்காக தேரை கட்டும் பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கி நடைபெற்று வந்தது. 96 அடி உயரத்தில் 350 டன் எடையுடன், 4 குதிரைகள், 425 அடி நீளமுள்ள வடம், ஹைட்ராலிக் பிரேக் ஆகியவை இணைக்கப்பட்டு ரிஷபக் கொடி உச்சியில் பறக்கும் படியாக ஆழித்தேர் கம்பீரமாக கட்டி முடிக்கப்பட்டது.

அதனையடுத்து நேற்று இரவு கோயிலில் இருந்து தியாகராஜர், அஜபா நடனத்துடன் விட்டவாசல் வழியாக கீழ வீதியில் இருந்த தேருக்கு எழுந்தருளினார். இன்று அதிகாலை 5 மணியளவில் முதலில் விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர் ஆகியவை புறப்பட்டன. அதன்பின்னர் ஆயில்ய நட்சத்திரம், துவாதசி திதியுடன் கூடிய சுபயோக நேரத்தில் காலை 8.10 மணிக்கு ஆழித் தேரோட்டம் தொடங்கியது. தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.

தேரோட்டத்திற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேரை பின்னாலிருந்து தள்ளுவதற்காக 4 புல்டோசர் வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் தேரை நிறுத்தவும், திருப்பவும், இயக்கவும் தேவைப்படும் 600க்கும் மேற்பட்ட முட்டுக்கட்டைகள் 3 டிராக்டர்களில் எடுத்துச் செல்லப்படுகிறது. 2 தீயணைப்பு வண்டிகளும் தயார் நிலையில் உள்ளன. சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ குழுவினரும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஆயில்ய நட்சத்திர நாளன்று நடத்தப்படும் இந்த தேரோட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருவாரூரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். அங்கிருந்து 'ஆரூரா தியாகேசா' என்ற குரல்கள் விண்ணை முட்ட ஒலிக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in