பக்தனைச் தேடிச்சென்று பாடல் பெற்ற திருநின்றவூர் பத்தராவிப் பெருமாள்

திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் கருடசேவை
திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் கருடசேவை

சென்னை அருகே திருநின்றவூரில் என்னைப் பெற்ற தாயார் சமேத பத்தராவிப் பெருமாள் திருக்கோயில் கொண்டுள்ளார்.

திருமங்கையாழ்வார் ஒருமுறை திருவள்ளூரில் இருந்து திருநின்றவூருக்கு வருகைபுரிந்தார். அப்போது கோயில் நடைசார்த்தப்பட்டிருந்தது. பெருமாளை தரிசிக்க முடியாத வருத்தத்தில், திருமங்கையாழ்வாரும் அங்கிருந்து இதற்கடுத்த தலமான மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலுக்கு வந்துவிட்டார்.

திருமங்கையாழ்வார்
திருமங்கையாழ்வார்

தமது நாயகனையும், தமது தலத்தையும் பற்றி ஆழ்வார் பாடாது செல்கிறாரே என்ற வருத்தத்தில், திருநின்றவூர் என்னைப் பெற்ற தாயார், பெருமாளிடம் இத்தகவலைக் கூறினார். தமது தேவியின் சொற்படி பெருமாளும் அங்கிருந்து, மகாபலிபுரம் வந்து திருமங்கையாழ்வாரின் மனதில் தோன்றி, தன்னைப் பற்றியும் பாடவேண்டும் என்று நியமனம் செய்தார். ஆழ்வாரும் மகிழ்ந்து, மாமல்லபுரத்தில் இருந்தபடியே, பத்தராவிப்பெருமாளைப் பற்றி செந்தமிழில் பாசுரம் ஒன்றை இயற்றினார். அந்த பாசுரம் வருமாறு:

“நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை:

நின்றவூர் நித்திலத் தொத்தார் சோலை:

காண்டவத்தைக் கனலெரிவாய் பெய்வித்தானைக்:

கண்டது நான் கடல்மல்லை தலசயனத்தே”

அதாவது, “திருநின்றவூர் பெருமானை நான் கண்டது கடல்மல்லை எனப்படும் மாமல்லபுரத்தில்..” என்று இப்பாசுரத்தை நிறைவு செய்தார். இதனைப் பெற்றுக் கொண்ட பெருமாள் மீண்டும் திருநின்றவூர் சென்று தமது தேவியிடம் அந்த பாசுரத்தைக் கொடுத்தார்.

ஆனால் தேவிக்கு அது போதவில்லை.

“சுவாமி அனைத்து தலத்துப் பெருமாளுக்கும் 10-க்கும் குறைவில்லாத பாசுரங்களைத் தந்த திருமங்கையாழ்வார், நமக்கு ஒரு பாசுரம்தான் தந்தார்” என்று தேவி வருந்தினார்.

உடனே பெருமாள் மீண்டும் திருமங்கையாழ்வாரைத் தேடினார். அவரோ மாமல்லபுரத்தில் இருந்து திருக்கண்ணமங்கைத் தலத்துக்கு சென்றிருந்தார்.

அங்கு சென்று தமது விருப்பத்தை பெருமாள் தெரிவிக்க, ஆழ்வாரும் மிக மகிழ்ந்து திருக்கண்ணமங்கையில் இருந்தபடியே, திருநின்றவூர் பெருமாள் குறித்த இன்னொரு பாசுரத்தை இயற்றினார்.

திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் திருக்கோயில்
திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் திருக்கோயில்

திருநின்றவூர் நின்ற நித்திலத்தொத்தினை என்று பெருமாளையும், அவர் காற்றை விட வேகமாக வந்ததைக் குறிக்கும் வகையில் “காற்றினைப் புனலை” என்று அவரது வேகத்தையும் குறிப்பிட்டு, இப்போது அவரை கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன் என்று பாடினார்.

அந்தப் பாடல் வருமாறு:

”ஏற்றினை யிமயத்து ளெம் மீசனை

இம்மையை மறுமைக்கு மருந்தினை

ஆற்றலை அண்டத் தற்புறத் துய்த்திடும்

ஐயனைக் கையிலாழி யொன்றேந்திய

கூற்றினை, குருமாமணிக் குன்றினை

நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை

காற்றினைப் புனலைச் சென்று நாடிக்

கண்ணமங்கயுள் கண்டு கொண்டேன்”

- பெரியதிருமொழி 7-10-5.

சென்னையிலிருந்து பூந்தமல்லி வழியாக திருவள்ளூர் செல்லும் சாலையில் இத்தலம் அமைந்துள்ளது. திருநின்றவூர் என்று கேட்பதைவிட திண்ணனூர் என்று சொன்னாலே எவருக்கும் புரியும். அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து தெற்கே சுமார் 2 கி.மீ. தூரத்தில் இத்தலத்தை அடையலாம். ஏராளமான பேருந்துகள் இவ்வூர் வழியாகவே செல்கின்றன.

இத்திருத்தலத்தில் ஆனி மாதம் ஜேஷ்டாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் திருக்கோயில்
திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் திருக்கோயில்
திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் கோயில் தேரோட்டம்
திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் கோயில் தேரோட்டம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in