வேணுவனத்தில் அருளும் கருணைமிகு காந்திமதி அம்பாள்

ஆடியில் தேவி தரிசனம்  - 8
திருநெல்வேலி அருள்மிகு காந்திமதி அம்மன்
திருநெல்வேலி அருள்மிகு காந்திமதி அம்மன்

தாமிரபரணிக் கரையில் வேணுவனமாக (மூங்கில் காடாக) இருந்த இடத்தில் சுயம்புவாக எழுந்தருளினார் சுவாமி நெல்லையப்பர். இக்கோயிலுக்கு அருகிலேயே தனிக்கோயில், தனி ராஜகோபுரம், தனி கொடிமரம், தனி தெப்பக்குளத்துடன் அன்னை காந்திமதி அம்பாள் கோயில் கொண்டிருக்கிறார். இவ்விரு கோயில்களையும் உட்புறமாகவே இணைக்கும் வகையில் சங்கிலி மண்டபம் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. இக்கோயில்களின் ரதவீதிகளைச் சுற்றியே திருநெல்வேலி மாநகரம் அமைந்திருக்கிறது. தேவார பாடல் பெற்ற திருநெல்வேலி காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் கோயில், சிவபெருமானின் பஞ்ச சபைகளில் தாமிரசபையாக விளங்குகிறது.

திருநெல்வேலி அருள்மிகு காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர்
திருநெல்வேலி அருள்மிகு காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர்

திருநெல்வேலியைப் போலவே திருச்சி அருகேயுள்ள திருஉழக்கீஸ்வரர் கோயிலிலும், கும்பகோணம் அருகே திருமுக்கீச்சுரம் பஞ்சவர்ணேஸ்வரர் சுவாமி கோயிலிலும் அம்பாளுக்கு காந்திமதி அம்பாள் என்றே திருப்பெயர். ஆனாலும், பாரத நாடு முழுவதும் இருக்கும் 51 சக்தி பீடங்களில் ஒன்றான காந்திமதி அம்மன் கோயில் அமைந்திருப்பது திருநெல்வேலியிலேயே என்பது குறிப்பிடத்தக்கது.

காந்திமதி அம்பாளை குழந்தையாக பாவித்து, காந்திமதியம்மன் பிள்ளைத் தமிழ் என்ற காப்பியத்தை அழகிய சொக்கநாதர் என்ற புலவர் இயற்றினார். செந்தமிழ் இனிக்கும் அந்தக் காப்பியத்தின் முதல் பாடலை மட்டும் பார்ப்போம்.

"நீயும் ஒரு சுடர் ஆவை எனினும் இவள்

எங்கெங்கும் நிலவருட் சுடராயினாள்

நிறைகலைகள் பதினாறு உனக்கு, அறிஞர்

தொன்னூல் நிகழ்த்து கலை எட்டெட்டும்

மிக்கேயும் இவளுக்கு, நீ மாதத்தில்

ஒரோர் கால் இடபத்தில் ஏறி வருவாய்

எந்தை வேய்முத்தரோடும் எப்போதும்

இடபத்தில் ஏறி இவள் பவனி வருவாள்.

தேயும் வெண்மேனி கொடு தானவர்க்கு அஞ்சுறுவை

செவ்வி இவள் தன் கரத்துச் சிறுவனும்

அவர்க்கு எமன் எனக்குலாவுவான்

உயிர்த்திரள் முதல் பகர் அனைத்தும்

ஆயும் அவைஅல்லாது நிற்கும் இவள்

உளமகிழ அம்புலீ ஆட வாவே

ஆய்ந்த தமிழ் நெல்லை வளர் காந்திமதி

வல்லியுடன் அம்புலீ ஆட வாவே!"

விளக்கம்: குழந்தை காந்திமதி (அம்மை) சந்திரனை விளையாட வா என்று அழைக்கிறாளாம். ஆனால் சந்திரன் வரவில்லை. இதைக் காணும் கவிஞர் கீழ்க்கண்டவாறு சந்திரனிடம் சொல்கிறார், “சந்திரா ரொம்பவும் கர்வப்பட்டுக் கொள்ளாதே.. நீயும் ஒரு சுடர் தான். ஆனால் எங்கள் காந்திமதியோ உலகெங்கும் நிலவும் அருட்சுடராக விளங்குகிறாள். நீயும் ஒளி தருகிறாய். வெறும் ஒளி மட்டும் தந்தால் போதுமா? இவள் கருணை, அன்பு எல்லாம் நிறைந்தவளாக “கருணாரஸ ஸாகரா” என்ற திருநாமத்திற்கேற்ப அருட்சுடராக விளங்குகிறாள்.

சந்திரா! உனக்கு பதினாறு கலைகள் வீதம் தினமும் ஒரு கலையாகக் கூடிக் கொண்டே வந்து பௌர்ணமியன்று முழுநிலவாகக் காட்சி தருகிறாய். ஆனால் ஆய கலைகள் அறுபத்துநான்குமே எங்கள் அன்னை காந்திமதியின் காலடியில் கிடக்கின்றன. இதனாலேயே இவளுக்கு “சதுஷ்ஷஷ்டி கலாமயீ” என்ற பெயரும் உண்டு. சந்திரா!

நீ மாதத்தில் ஓரோரு சமயம் ரிஷப ராசிக்குள் வருவாய். இவளோ எந்தை வேய் முத்தரான வேணுவன நாதராகிய நெல்லையப்பருடன் எப்போதும் ரிஷப வாகனத்தில் வருவாள். அம்மையைப் பிரியாவிடை என்று சொல்வார்கள். ஞானசம்பந்தக் குழந்தை தனது முதற்பதிகத்திலேயே “தோடுடைய செவியன் விடையேறி” என்று அம்மையும் அப்பனுமாக விடையேறி வருவதைப் பாடியது.

சந்திரா! நீ ராகு,கேது போன்ற அசுரர்களைக் கண்டாலே ஓடி ஒளிவாய். ஆனால் இவளுடைய செல்வக் குமரனான முருகனைக் கண்டாலே அந்த அசுரர்கள் அஞ்சி நடுங்குவார்கள். இவ்வளவு பெருமை பொருந்திய காந்திமதி உன்னை அழைக்கிறாள். எனவே அம்புலியே! இவளுடன் ஆட விரைந்தோடி வா!” என்கிறார் கவிஞர்.

திருநெல்வேலி அருள்மிகு காந்திமதி அம்பாள்
திருநெல்வேலி அருள்மிகு காந்திமதி அம்பாள்

சுமார் ஐந்தடி உயரத்தில் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கும் காந்திமதி அம்மன் பேரழகு வாய்ந்தவள். தமது காந்த சக்தி வாய்ந்த கண்களால் பக்தர்களை கடாட்சிக்கிறாள். திருநெல்வேலி மாநகருக்குள் முற்காலத்தில் கம்பா நதி என்ற ஆறு ஓடியிருக்கிறது. குறுக்குத்துறை என்ற இடத்தில் தாமிரபரணியில் கம்பாநதி சங்கமித்திருக்கிறது. கம்பா நதியின் கரையில்தான் காந்திமதி அம்மன் தவமிருந்தாள். அவளது தவத்தை மெச்சி ஐப்பசி மாதத்தில் நெல்லையப்பர் காந்திமதி அம்மனை கரம்பிடித்தார். 14 நாட்கள் நடக்கும் இவ்விழா திருநெல்வேலியில் பிரபலமானது.

தினமும் உச்சிக்காலத்தில் காந்திமதி அம்மன் சன்னதியில் இருந்துதான் பிரசாதங்கள் தயார் செய்யப்பட்டு, நெல்லையப்பர் சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு நைவேத்தியம் செய்யப்படுகிறது. மீண்டும் அந்தப் பிரசாதங்கள் காந்திமதி அம்மனுக்கு நைவேத்தியமாகின்றன. ஆடி மாதம் முளைக்கட்டு திருவிழாவும், புரட்டாசியில் நவராத்திரியும், காந்திமதி அம்மனுக்குரிய திருவிழாக்கள் ஆகும்.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயில் கோபுரம்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயில் கோபுரம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in