மகா கும்பாபிஷேகம் காணும் திருநாங்கூர் மணிமாடக்கோவில்

திருநாங்கூர் மணிமாடக்கோவில் - ஸ்ரீநாராயணப் பெருமாள்
திருநாங்கூர் மணிமாடக்கோவில் - ஸ்ரீநாராயணப் பெருமாள்

ஸ்ரீமந் நாராயணனின் எட்டு எழுத்துக்கள் கொண்ட திருமந்திரம் ‘ஓம் நமோ நாராயணாய’ என்பதாகும்.

இத்திருமந்திரத்தை முதன்முதலில் ஸ்ரீமந் நாராயணன் தானே பரம்பொருளாகவும், தானே சீடனாகவும் தோன்றி, இமயமலையில் உள்ள பதரிகாஸ்ரமத்தில் தானே தனக்கு உபதேசம் செய்தார்.

பத்ரி நாராயணப் பெருமாள் எனும் நந்தாவிளக்கு பெருமாள் - திருமணிமாடக் கோவில்
பத்ரி நாராயணப் பெருமாள் எனும் நந்தாவிளக்கு பெருமாள் - திருமணிமாடக் கோவில்

திருவதரி எனப்படும் பத்ரிகாஸ்ரமத்தில் வீற்றிருக்கும் பெருமாளுக்கு பத்ரி நாராயணன் என்பது திருப்பெயர்.

அதேபோன்று பத்ரி நாராயணப் பெருமாள் வீற்றிருக்கும் திருத்தலம் திருமணிமாடக் கோவில். இவர் நந்தாவிளக்கு பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். இங்கு தனி சன்னதியில் புண்டரீகவல்லித் தாயார் எழுந்தருளி இருக்கிறார். சீர்காழி அருகேயுள்ள திருநாங்கூரில் இத்தலம் அமைந்துள்ளது. இதனையும் சேர்த்து இதைச் சுற்றி அமைந்துள்ள 11 திருத்தலங்களுக்கு ‘திருநாங்கூர் திருத்தலங்கள்’ என்று பெயர்.

திருநாங்கூர் மணிமாடக்கோவில் - ஸ்ரீநாராயணப் பெருமாள் (உற்சவர்)
திருநாங்கூர் மணிமாடக்கோவில் - ஸ்ரீநாராயணப் பெருமாள் (உற்சவர்)

11 ருத்திரன், 11 பெருமாள்

சிவபெருமானின் ஊழிநடனத்தை நிறுத்த, எம்பெருமான் முயன்றபோது திருநாங்கூர் அருகே சிவன் நடனம் புரிந்துகொண்டு இருந்தார். ஸ்ரீமந் நாராயணனைப் பரமபத நாதனாகக் கண்ட பரமேஸ்வரன், தன்னைப்போல் 11 உருக்கொண்டு பெருமாள் காட்சி தர வேண்டுமென விண்ணப்பம் செய்தார். அவ்விதமே எம்பெருமான் 11 திருக்கோலங்களில் காட்சி தந்து, ஒரு சிவனை அழைத்து ஒரு சிவனுக்குள் செலுத்தி, பிறகு இன்னொரு சிவனை அழைத்துச் செலுத்தி, இந்த விதமாக 11 சிவன்களை ஒன்றாக்கி நிறுத்தினார் என்பது ஐதீகம். இந்த மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாளே பத்து திருமேனிகளை எடுத்துக் கொண்டு, தாம் ஒரு திருமேனியாக வந்ததாயும் கூறுவர். இதனாலேயே 11 திருத்தலங்கள் அமைந்துள்ளன.

திருநாங்கூர் மணிமாடக் கோவில் 11 கருடசேவைத் திருவிழா
திருநாங்கூர் மணிமாடக் கோவில் 11 கருடசேவைத் திருவிழா

11 கருடசேவை

தை மாதம் அமாவாசைக்கு மறுநாளன்று நடைபெறும் திருநாங்கூர் கருடசேவைத் திருவிழா மிகவும் புகழ் பெற்றது. திருநாங்கூர் திருத்தலங்களில் உள்ள மற்ற 10 எம்பெருமான்களும், மணிமாடக் கோவிலுக்கு எழுந்தருளி, ஒன்றுபோல் 11 கருட சேவை இங்கு நடைபெறும். அப்போது, சுவாமி திருமங்கையாழ்வார் ஒவ்வொரு பெருமானையும் வலம்வந்து, அந்தந்த பெருமாள் முன் நிற்பார். அப்போது, அந்தந்தப் பெருமாள் மீது திருமங்கையாழ்வார் பாடிய பாசுரங்களை, அனைவரும் படிப்பார்கள்.

திருநாங்கூர் மணிமாடக் கோவில் கருடசேவை
திருநாங்கூர் மணிமாடக் கோவில் கருடசேவை

மகா கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள திருமணி மாடக் கோவில் நந்தாவிளக்கு பெருமாள் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று, மகா கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் கடந்த 14-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. 17.9.2023 அன்று காலை 9 - 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in