சூரிய சாபம் போக்கிய மேகநாதர்: சிவபார்வதியின் பேரருளை அடைய திருமீயச்சூர் போகலாம்!

சூரிய சாபம் போக்கிய மேகநாதர்: சிவபார்வதியின் பேரருளை அடைய திருமீயச்சூர் போகலாம்!

திருமீயச்சூர் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து வேண்டிக்கொண்டால், ஜாதகத்தில் சூரிய பலம் பெறலாம். சகல தோஷங்களும், பாவங்களும் விலகும். சிவபார்வதியின் பேரருளை அடையலாம்.

மயிலாடுதுறை மாவட்டம், பேரளத்துக்கு அருகில் உள்ளது திருமீயச்சூர். அனைத்து சிவாலயங்களிலும் அம்பாளுக்கு சந்நிதி இருக்கும். அம்பாளுக்கு ஒவ்வொரு திருநாமங்கள் இருக்கும். நாம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து பூஜிப்பது வழக்கம்தானே? அந்த அம்பாள், லலிதாம்பிகை எனும் திருநாமத்துடன் தரிசனம் தரும் திருத்தலம்தான் திருமீயச்சூர். அதுமட்டுமா? ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் அரங்கேறிய தலமும் இதுவே.

தமிழகத்தில் ஸ்ரீலலிதாம்பாள் எனும் திருநாமத்துடன் அம்பிகை அருள்பாலிக்கும் ஆலயங்கள் மிக அரிது. இந்தத் திருநாமத்தில் அருள்பாலிக்கும் தலம் திருமீயச்சூர் திருத்தலம் மட்டுமே என்கிறார்கள் பக்தர்கள்.

திருமீயச்சூரின் ஸ்தல புராணம் ரொம்பவே சாந்நித்தியம் கொண்டது. சூரிய பகவானின் சாபத்தைப் போக்கியருளிய திருத்தலம் எனப் போற்றுகிறது புராணம்.

சூரியனின் ரதத்தினைச் செலுத்துகிற அருணன் அங்க ஹீனம் கொண்டவன். அவனுக்கு திருக்கயிலாயத்துக்குச் சென்று சிவனாரைத் தரிசிக்கவேண்டும் என்று நெடுங்காலமாக விருப்பம். சூரியனிடம் அனுமதி கேட்டான். ஆனால் சூரியனோ, மறுத்துவிட்டார். அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை. அருணனின் உடற்குறையையும் சொல்லி ஏளனம் செய்தான்.

வேதனையுடனும் அவமானத்துடன் குறுகிப் போன அருணன், மோகினிப் பெண்ணாக உருவெடுத்தான். திருக்கயிலாயம் புறப்பட்டான். அங்கே மோகினியின் அழகில் மயங்கினான் இந்திரன். இதில் உருவானவனே வாலி.

கயிலாயத்தில் அருணனுக்கு சிவதரிசனம் கிடைத்த மகிழ்ச்சி. திரும்பி வந்த அருணன், சூரியனாரிடம் விஷயத்தைச் சொன்னான். “மோகினிப் பெண்ணாக உருவம் மாறிச் சென்றாயா? எங்கே மாறிக்காட்டு பார்க்கலாம்” என்றார். மோகினியாக மாறினான் அருணன். அழகில் சூரியனும் மயங்கினான். அதன் விளைவு, சுக்ரீவன் பிறந்தான்.

இறைவனைத் தரிசிப்பதற்கு ஆசைப்படும் ஒருவருக்கு, முட்டுக்கட்டை போடுவதும் ஒருவரது அங்கக் குறைபாட்டை சுட்டிக்காட்டி ஏளனம் செய்வதும் மகாபாவம். சூரிய பகவான் இந்த இரண்டு பாவங்களையுமே செய்தார் அல்லவா? தனது பக்தனைத் தடுத்து, அவனது ஊனத்தைக் கிண்டல் செய்ததைச் சும்மா விடுவாரா ஈசன்? சூரியனைச் சபித்தார். உலகுக்கே வெளிச்சம் தந்த சூரிய பகவான் இருளடைந்து போனார். “ஏழு மாதங்கள், மேகமண்டலத்தில் எங்களை யானை மீது வைத்து பூஜித்து வா. அப்போதுதான் உனது சாபம் தீரும்” என சாபவிமோசனமும் சொல்லி அருளினார்.

இதையடுத்து சூரியனார், மேகமண்டலத்தில் யானை மீது, சிவ-பார்வதியை வைத்து பூஜை செய்யத் துவங்கினார். ஆனால், ஏழு மாதங்கள் நிறைவுறுவதற்கு முன்பே, சிவனாரிடம் சென்று, “என்ன இது... இன்னும் சாப விமோசனம் தரவில்லையே?” என்று கேட்டார். அவசரப்பட்டு அவர் கேட்டதும் வெகுண்டெழுந்தாள் உமையவள்.

“உரிய காலம் வரும்வரை பொறுக்க மாட்டாயா?” என்று உக்கிரமானாள். சூரியனாருக்கு மற்றுமொரு சாபம் கொடுக்க எழுந்தாள். பதறிப்போனார் சிவனார். “ஏற்கெனவே கொடுத்த சாபத்தால் இருளில் மூழ்கினான் சூரியன். இன்னொரு சாபம் கொடுத்தால், இந்த உலகம் இருளில் விழிபிதுங்கித் தவிக்கும். வேண்டாம் சாந்தமாக இரு” என்று அமைதிப்படுத்தினார். பிறகு உரிய காலம் வந்ததும், சூரியனாருக்குச் சாப விமோசனம் அளித்தார். அவரின் திருமுகமும் இந்த உலகமும் இருளில் இருந்து பழையபடி வெளிச்சத்துக்கு வந்தது. சாப விமோசனம் பெற்றார் சூரியனார்.

சூரியனாருக்கு அருளிய சிவனாருக்கு மேகநாதன் எனும் திருநாமம் அமைந்தது. அந்தத் திருத்தலம் தான் திருமீயச்சூர். இங்கு கஜபிருஷ்ட விமானத்தின் கருவறையில் இருந்தபடி அகிலத்துக்கும் அருள்மழை பொழிகிறார் சிவனார்.

இங்கே, ரதசப்தமி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமா? சித்திரை மாதம் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை, ஸ்வாமியை தனது கதிர்களால், பூஜிக்கிறார் சூரிய பகவான்.

திருமீயச்சூர் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து வேண்டிக்கொண்டால், ஜாதகத்தில் சூரிய பலம் பெறலாம். சகல தோஷங்களும் பாவங்களும் விலகும். சிவ பார்வதியின் பேரருளை அடையலாம் என்பது ஐதீகம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in