மத்திய ஜகந்நாதம் என்னும் திருமழிசை

திருமழிசையாழ்வார்
திருமழிசையாழ்வார்

பன்னிரு ஆழ்வார்களில் நான்காவதாக அவதரித்தவர் திருமழிசையாழ்வார். சென்னை அருகேயுள்ள திருமழிசை என்ற ஊரே இவரது அவதாரத் தலமாகும். திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி அருகே திருமழிசை அமைந்துள்ளது.

பிரம்மாண்ட புராணத்தில் இத்தலம் மஹிசார ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இதுதவிர மத்திய ஜெகந்நாதம் என்றும் திருமழிசைக்கு பெயர் உண்டு. வடக்கே ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதப் பெருமாள் கோயிலுக்கு உத்தர ஜகந்நாதம் என்றும், தெற்கே ராமேசுவரம் அருகில் உள்ள திருப்புல்லாணி கல்யாண ஜெகந்நாதப் பெருமாள் கோயிலுக்கு தட்சிண ஜகந்நாதம் என்றும் பெயர். அதுபோல், இவை இரண்டுக்கும் நடுவேயுள்ள திருமழிசை ஜெகந்நாதப் பெருமாள் கோயில் மத்திய ஜகந்நாதம் எனப்படுகிறது. இத்தலத்தில் பிறந்தவர்களுக்கு மறுபிறப்பு இல்லை என்ற நம்பிக்கை உள்ளது.

திருமழிசை ஜெகந்நாதப் பெருமாள் கோயில் (மத்திய ஜகந்நாதம்)
திருமழிசை ஜெகந்நாதப் பெருமாள் கோயில் (மத்திய ஜகந்நாதம்)

இத்தலத்து புராண வரலாற்றின்படி, அத்ரி, பிருகு, மார்க்கண்டேயர் உள்ளிட்ட மகரிஷிகள் தாங்கள் தவம் செய்ய சிறந்த தலம் எது? என்று பிரம்மதேவனை வேண்டினர்.

பிரம்மதேவன், தேவலோக சிற்பியான மயனைக் கொண்டு, பூலோகத்தில் சிறந்த தலம் எது என்பதைக் கூறுமாறு ஆணையிட்டார். பூலோகத்தின் அனைத்து பாகங்களையும் ஒரு துலா தட்டிலும், திருமழிசையை மற்றொரு துலா தட்டிலுமாக மயன் வைத்தார். அப்போது திருமழிசை இருக்கும் தராசுத்தட்டு தாழ்ந்து, பூலோகத்தின் மற்ற இடங்களைக் காட்டிலும் சிறந்தது இதுவே என்று காட்டியது.

அதன்படியே ரிஷிகள் இங்கு பெருமாளை நோக்கி தவமிருந்தனர். அப்போது, ஸ்ரீ தேவி, பூதேவி தாயாரோடு அமர்ந்த திருக்கோலத்தில் ஜெகந்நாதப் பெருமாள் இத்தலத்தில் ரிஷிகளுக்கு சேவை சாதித்தார். அப்படியே இன்றைக்கும் நம் அனைவருக்கும் சேவை சாதித்துக் கொண்டிருக்கிறார்.

திருமாலின் வலது கரத்தில் வீற்றிருக்கும் சக்கரத்தாழ்வாரின் அம்சமாக அவதரித்த திருமழிசையாழ்வாரால், போற்றி வணங்கப்பட்டவர் திருமழிசை ஜெகந்நாத பெருமாள் ஆவார்.

திருமழிசை ஆழ்வாருக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது.

திருமழிசையில் ஆனி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவம் சிறப்பு வாய்ந்தது. இவ்விழாவில் மூன்றாம் நாள் கருட சேவையும், ஏழாம் நாளில் திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது. 9-ம் நாளில் பெருமாள் தோளுக்கினியான் வாகனத்தில் ஏழூர் புறப்பாடு கண்டருள்கிறார். பெருமாள் திருவீதி உலாவின் போது திருமழிசை ஆழ்வாரும் உடன் எழுந்தருள்வது சிறப்பு வாய்ந்ததாகும்.

3.7.2023 - திருமழிசை தேரோட்டம்.

5.7.2023 - ஏழூர் புறப்பாடு.

பெருமாள் திருவீதி உலாவின் போது உடன் திருமழிசை ஆழ்வார்
பெருமாள் திருவீதி உலாவின் போது உடன் திருமழிசை ஆழ்வார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in