கண்ணன் பிறந்தான் - 6

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அவதரித்தல்
கண்ணன் பிறந்தான் - 6

ஸ்ரீகிருஷ்ண பகவான் அவதரிக்கும் நேரம் நெருங்கியது. எல்லா நற்குணங்களும் நிறைந்து காலம் மங்களமாய் விளங்கியது. பிரம்மாவின் ஜன்ம நட்சத்திரமான ரோகிணி உதித்தது. மற்ற நட்சத்திரங்களும், கிரகங்களும் மிகவும் அமைதியுடன் திகழ்ந்தன.

எங்கும் மங்கலம்

வானம் தெளிவாயிருந்தது. நட்சத்திரங்களும் ஒளிவிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தன. பட்டணங்களிலும், கிராமங்களிலும், குக்கிராமங்களிலும் மங்கள வாத்தியங்கள் ஒலித்தன. ஆறுகளில் தண்ணீர் மிகவும் தெளிவாய் ஓடியது. இரவிலும் தடாகங்களில் தாமரை மலர்ந்து மணம் வீசியது. சோலைகளில் பூக்களும், கனிகளும் நிறைந்து காணப்பட்டன. பூக்களில் தேன் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. வண்டுகளும், பறவைகளும் மங்களமாக இனிய ஓசைகளை எழுப்பிக் கொண்டிருந்தன.

காற்று மணமாகவும், சுத்தமாகவும், சுகமாகவும் வீசியது. வேத வல்லுநர்கள் ஹோமம் செய்து முடித்த பிறகும் ஓமகுண்டங்கள் ஒளியுடன் பிரகாசித்தன. ஸ்ரீமந் நாராயணன் அவதரிக்கப் போகும் வேளையில் பக்தர்களின் உள்ளமெல்லாம் மகிழ்ச்சியால் பொங்கின. வானுலகில் தும்துபி என்னும் இசைக்கருவி ஒலித்தது.

கின்னரர்களும், கந்தர்வர்களும் மங்களமான பாடல்களைப் பாடினார்கள். சித்தர்களும், சாரணர்களும் ஸ்ரீமந் நாராயணனைப் பலவாறு போற்றித் துதித்தார்கள். வித்யாதரப் பெண்களும், தேவலோகப் பெண்களும் மகிழ்ச்சியில் நடனமாடினார்கள். தேவர்களும், முனிவர்களும் மலர் மழை பொழிந்தனர். கடலருகில் இடியோசையுடன் கூடிய மேகங்கள் மக்கள் மனத்தில் மகிழ்ச்சியை ஊட்டின.

கண்ணன் பிறந்தான்

எல்லா உயிரினங்களிலும் இருக்கும் ஸ்ரீமந் நாராயணன் இருள் நிறைந்த நள்ளிரவில் பூர்ணச் சந்திரன் கீழ்த்திசையில் உதயமாவது போல், தெய்வத்தன்மை பொருந்திய தேவகியிடம் அவதரித்தார்.

குழந்தையாகிய ஸ்ரீமந் நாராயணனின் திருமேனியை வசுதேவர் பார்த்தார். ஸ்ரீமந் நாராயணன் செந்தாமரை போன்ற கண்களுடனும், சங்கு, சக்கரம், கதை, தாமரை ஏந்திய நான்கு திருக்கரங்களுடனும், மார்பில் ஸ்ரீவத்ஸம் என்னும் மருவும், கழுத்தில் கௌஸ்துப மணி மாலையுடனும், மழைக்கால மேகம் போன்ற திருமேனியில் மஞ்சள் பட்டாடையும், தலையில் ரத்தினங்கள் பதித்த கிரீடமும், காதுகளில் மரகதக் குண்டலமும், தோள்வளைகள், கை வளைகள், அரைஞாண்கொடி முதலிய ஆபரணங்கள் அணிந்து அழகாகவும், அற்புதமாகவும் காட்சி அளித்தார்.

வசுதேவர், ஸ்ரீமந் நாராயணன் தனக்குக் குழந்தையாக அவதரித்தைப் பார்த்து ஆச்சரியமும், ஆனந்தமும் அடைந்தார். மகிழ்ச்சிப் பெருக்கினால் ஆயிரம் பசுக்களை வேத வல்லுநர்களுக்குத் தனது மனத்தினால் தானம் செய்தார். தனது திருமேனியின் ஒளியால் அந்த அறையையே பிரகாசப்படுத்திக் கொண்டிருந்த முழு முதற்கடவுளான ஸ்ரீமந் நாராயணனை வசுதேவர் வணங்கிப் பின்வருமாறு துதித்தார்.

வசுதேவர் துதித்தல்

“நாராயணா! நீரே சாட்சாத் முழு முதற்கடவுள்! நீர் இயற்கை செயற்கைகளுக்கு அப்பாற்பட்டவர்! நீர் ஆனந்தமே வடிவானவர்! நீரே அனைத்தையும் அறிந்தவர்! நீரே அனைத்து உலகங்களையும் படைத்தவர். பிறப்பற்ற நீர் பிறந்தவர்போல் காணப்படுகிறீர்.

ஸ்ரீமந் நாராயணா! நீர் அனைத்தையும் படைத்து, அவற்றினுள் நீக்கமற எழுந்தருளியுள்ளீர். எவ்வளவு தான் நாங்கள் புகழ்ந்தாலும் உம்முடைய புகழ் முழுவதையும் கூறமுடியாது. எங்களது மனத்தினால் எவ்வளவு காலம் உம்மை நினைத்தாலும், உம்முடைய பெருமை முழுவதையும் நினைக்க முடியாது. ஏனெனில் எங்களுடைய புலன்கள் வரையறைகளுக்கு உட்பட்டவை. அவைகளைக் கொண்டு வரம்பில்லாத ஆற்றலுடைய உம்மை உணர முடியாது.

நீர் தேவகியிடம் புதிதாக எழுந்தருளி இருக்கிறீர் என்பதில்லை. நீர் ஏற்கெனவே எல்லோருள்ளும் எழுந்தருளி இருக்கிறீர். அனைத்திற்கும் மூல காரணமானவரே! எங்கும் எப்பொழுதும் நிலைபெற்று இருக்கின்றவரே, உம்மைச் சரண் அடைகிறோம். உயிரில்லாமல் உடல் இயங்க முடியாது. அதுபோல நீர் இல்லாமல் எதுவும் இயங்காது.

நீரே முழு முதற் கடவுள்! நீர் முக்குணங்களையும் கடந்தவர். நீரே எல்லாம் பூர்ணமாக உடையவர்.

நீரே முக்காலத்திலும் ஒரே தன்மையுடன் இருப்பவர். உம்மிடத்திலிருந்தே அனைத்து உலகங்களும் தோன்றி, இருந்து, ஒடுங்குகின்றன. நீர் முக்குணங்களையும் கடந்தவர், ஆயினும் சத்துவ குணத்தை வரவழைத்துக் கொண்டு எல்லாவற்றையும் காக்கின்றீர், ரஜோ குணத்தை எடுத்துக் கொண்டு எல்லாவற்றையும் படைக்கின்றீர். தமோ குணத்துடன் கூடி அழிக்கின்றீர்.

அனைத்திற்கும் ஈஸ்வரரே! நீர் இவ்வுலகைத் துன்பத்தில் இருந்து விடுவிப்பதற்காக இங்கு அவதரித்துள்ளீர்கள். உலகைத் துன்புறுத்தும் அசுர இயல்புடைய அரசர்களைச் சீக்கிரத்தில் அகற்றப் போகிறீர்கள். தேவகியின் மகனாக நீர் அவதரிக்கப் போகிறீர்கள் என்பதை அசரீரி மூலம் அறிந்த கம்சன், உம்முடைய சகோதரர்களை எல்லாம் கொன்றான். இப்பொழுது நீர் பிறந்து இருப்பதைப் பணியாட்கள் மூலம் அறிந்ததும், உம்மைக் கொல்லுவதற்குக் கொடிய ஆயுதங்களுடன் ஓடிவருவான்.

இவ்வாறு வசுதேவர் ஸ்ரீமந் நாராயணனை வணங்கிப் போற்றினார்.

தேவகி துதித்தல்

பின்னர், மகா புருஷ லட்சணம் பொருந்திய தன் குழந்தையைப் பார்த்து ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்த தேவகி பின்வருமாறு துதித்தாள்.

வேதங்கள் யாரை மனம், வாக்கு, உடம்பு ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவர் என்று கூறுகின்றனவோ, யாரை அனைத்திற்கும் ஆதியானவர் என்றும், பரப்பிரம்மம் என்றும், ஜோதி வடிவானவர் என்றும், குணங்களைக் கடந்தவர் என்றும், என்றைக்கும் மாறாதவர் என்றும், அனைத்திற்கும் மூலம் என்றும் எங்கும் இருக்கிறவர் என்றும், ஆசைகளுக்கு முடிவானவர் என்றும், ஞானவடிவானவர் என்றும் கூறுகின்றனவோ, அந்த ஸ்ரீமந் நாராயணனாகிய உம்மை வணங்குகிறேன்.

பிரளய காலத்தில் அனைத்தும் உம்முள் ஒடுங்குகின்றன. அப்பொழுது நீர் ஒருவர் மட்டுமே எஞ்சி நிற்பதால் உம்மை சேஷன் என்று வேதங்கள் புகழ்கின்றன. நற்செயல்களுக்கு இருப்பிடமானவரே! அனைத்தையும் காலத்தினால் கட்டுப்படுத்தி வைத்திருப்பவரே! உம்மைச் சரண் அடைகிறேன்.

வேறு யாரைச் சரண் அடைந்தாலும் பிறப்பு இறப்பு ஆகிய பாம்பிடமிருந்து தப்ப முடியாது. ஆனால் யார் உம்முடைய திருவடிகளைச் சரண் அடைகிறார்களோ, அவர்கள் பயமற்றுச் சுகமாக மார்பின் மேல் கையை வைத்துக்கொண்டு தூங்கலாம். அவர்களைத் தொடர்ந்து வந்த பிறப்பு இறப்பு ஆகிய பாம்பு விலகி விடுகிறது. அவர்கள் பிறப்பு, இறப்பு, முதுமை, நோயற்ற தெய்வீக உடம்பைப் பெற்று உம்முடன் பரமபதத்தில் வாழ்வார்கள்.

இவ்வாறு தேவகி ஸ்ரீமந் நாராயணனைப் போற்றினாள்.

பெற்றோர் இருவரின் துதி

பின்னர் வசுதேவரும், தேவகியும் சேர்ந்து பின்வருமாறு துதித்தார்கள்:

“ஸ்ரீமந் நாராயணரே! நீர் பக்தர்களின் பயத்தைப் போக்குகிறவர். கம்சனுக்குப் பயந்து கொண்டிருக்கும் எங்களைக் காத்தருள்வீராக. யோகிகள் தியானிக்கும் உமது திருவுருவத்தை ஊனக்கண் படைத்தவர்களுக்கு வெளிப்படையாகக் காட்ட வேண்டாம். மதுசூதனா! நீர் எம்மிடம் பிறந்து இருப்பதைப் பாவியாகிய கம்சன் அறியவேண்டாம். பேதையாகிய நாங்கள் மிகவும் கம்சனுக்குப் பயப்படுகிறோம்.

எங்கும் நிறைந்திருக்கின்றவரே! சங்கு, சக்கரம், கதை, தாமரை முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்ட திருக்கரங்களையுடைய உமது இத்தெய்வீகத் திருமேனியை மறைத்தருள்வீராக, சாதாரணக் குழந்தையாகக் காட்சி அளிப்பீராக. பிரளய காலத்தில் எல்லா உலகங்களையும் தன்னுள் அடக்கிய நீர் என்னிடம் அவதரித்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மக்களிடம் இதைச் சொன்னால் நம்பமாட்டார்கள், பரிகாசம் செய்வார்கள்”

இவ்வாறு இருவரும் துதித்தார்கள்.

ஸ்ரீமந் நாராயணன் திருவார்த்தை

முற்பிறப்பில் ஸ்வாயம்புவ மந்வந்தாரத்தில் பிரஜாபதிகளில் ஒருவரான சுதபஸ் என்பவராக வசுதேவரும், ப்ரூச்னி என்ற பெயரில் தேவகியும் பிறந்திருந்தீர்கள். நீங்கள் இருவரும் என்னையே குழந்தையாக மூன்று ஜென்மங்களில் பெற வேண்டும் என்று 12,000 வருடங்கள் கடுந்தவம் புரிந்தீர்கள். பாவமற்றவர்களே! உங்களுடைய நம்பிக்கை, பக்தி, பாவனை போன்றவைகளால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். உங்களுக்கு மகனாகப் பிறந்து பருச்னிகர்பன் என்ற பெயரும் பெற்றேன்.

பின் இரண்டாவது பிறவியில் நீங்கள் இருவரும் அதிதியாகவும், கசியபராகவும் பிறந்தீர்கள். அப்பொழுது நான் மீண்டும் உங்களுக்குக் குழந்தையாகப் பிறந்தேன். இந்திரனுக்குத் தம்பியாகப் பிறந்ததால் உபேந்திரன் என்றும், குட்டையாக இருந்ததால் வாமனன் என்றும் நான் பெயர் பெற்றேன்.

இப்பொழுது நீங்கள் மூன்றாவது பிறவியை அடைந்திருக்கின்றீர்கள். நான் அதே தெய்வத் திருமேனியுடன் உங்களிடம் அவதரித்து, என் வார்த்தையைச் சத்தியமாக்கிவிட்டேன். முன் ஜென்மங்களை ஞாபகப்படுத்தவே, இத்திருவுருவத்துடன் உங்களுக்குக் காட்சி அளித்தேன்.

என்னை நீங்கள் மகனாகவும், கடவுளாகவும் அன்புடன் சிந்தித்து, அதனால் என் இருப்பிடத்திற்கு வரப்போகிறீர்கள். நீங்கன் கம்சனுக்கு அஞ்சினால் என்னைக் கோகுலத்திற்கு எடுத்துச் செல்லுங்கள். அங்கு நந்தகோபனின் மனைவியான யசோதையிடம் யோகமாயை பெண் குழந்தையாகப் பிறந்திருக்கிறாள். என்னை அங்கு வைத்துவிட்டு, அப்பெண் குழந்தையை இங்கு கொண்டு வாருங்கள். நீங்கள் என்னை கோகுலத்திற்கு எடுத்துச் செல்லும்போது கதவுகள் தாமாகவே திறக்கும். யமுனா நதியும் உங்களுக்கு வழிவிடும்”

ஸ்ரீமந் நாராயணன் இவ்வாறு கூறிவிட்டுச் சிறிது நேரம் மௌனமாய் இருந்தார். பின் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நான்கு கைகளோடு கூடிய தன் விஷ்ணு ரூபத்தை மறைத்து, இரு கைகளுடன் கூடிய சாதாரண குழந்தையாகி விட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in