சிவனருள் பெற்ற அடியார்கள் – 24

சமணரோடு போரிட்டு சைவநெறி பரப்பியவர்கள் - 3.திருஞானசம்பந்தர்
திருஞானசம்பந்தர் - திருக்கோலக்கா
திருஞானசம்பந்தர் - திருக்கோலக்கா

சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவராகப் போற்றப்படுபவர் திருஞானசம்பந்தர். இவர் பல தலங்களுக்குச் சென்று ஈசனைப் போற்றிப் பாடியுள்ளார். சமணர்களோடு வாதப் போர் புரிந்து சைவ சமயத்தைச் தழைக்கச் செய்தவர். ஈசனையே தந்தையாக நினைத்து பாடல்கள் புனைந்தது சத்புத்திர மார்க்கமாகக் கருதப்படுகிறது.

சோழநாட்டில் உள்ள சீர்காழியில் வேதியர் குலத்தைச் சேர்ந்த சிவபாதர் - பகவதி தம்பதி வசித்து வந்தனர். இருவரும் தினமும் தோணியப்பர் கோயிலில் அருள்பாலிக்கும் ஈசனுக்கு தொண்டுகள் புரிந்து, அவரை வழிபட்டு வந்தனர். ஈசன் அருளால் இத்தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. மகிழ்ச்சியில் திளைத்த இருவரும், ஊரில் உள்ள அனைவருக்கும் பொன், பொருள் உள்ளிட்டவற்றை அளித்து இன்புற்றனர். சிவனடியார்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அமுது படைத்தனர். ஊர் முழுவதும் திருவிழாக் கோலம் பூண்டது. பெருவிழா போல் சிவ வழிபாடுகள் நடைபெற்றன.

குழந்தைக்கு ‘சம்பந்தன்’ (ஆளுடைய பிள்ளை) என்று பெயர் சூட்டப்பட்டது. ஒருசமயம் பொற்றாமரைக் குளத்தில் நீராட சிவபாதர் கிளம்புகிறார். இதைக் கண்ட 3 வயது நிரம்பிய சம்பந்தர் தானும் அவருடன் கிளம்புவதற்கு தயாரானார். மகனின் பிடிவாதத்தை உணர்ந்த தந்தை, அவரை குளத்துக்கு அழைத்துச் செல்கிறார். குழந்தையை கரையோரம் அமரச் செய்து விட்டு, சிவபாதர் படிக்கட்டுகளில் இறங்கி நீராடச் செல்கிறார். சிறிதுநேரம் கழித்து, தந்தையைக் காணாது சம்பந்தர் அழுகிறார்.

சம்பந்தருக்கு முலைப்பால் கொடுக்கும் பார்வதி தேவி...
சம்பந்தருக்கு முலைப்பால் கொடுக்கும் பார்வதி தேவி...

குழந்தையில் அழுகுரல் கேட்ட சிவபெருமான், பார்வதி தேவியை அழைத்து, குழந்தைக்கு பால் அளிக்குமாறு பணிக்கிறார். அன்னையும் அவ்வாறே செய்தார். திரும்பி வந்து பார்த்த சிவபாதர், குழந்தையின் வாயில் பால் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரு பால் அளித்தது என்று சம்பந்தரை வினவினார் சிவபாதர். ‘தோடுடைய செவியன்’ என்று உடனே சம்பந்தர் பாடினார். நடப்பது அனைத்தும் ஈசனின் கருணை என்பதை உணர்ந்த சிவபாதர், மகிழ்ச்சிக் கடலில் திளைத்தார்.

திருஞானசம்பந்தர்
திருஞானசம்பந்தர்

சிவஞானப்பால் உண்ட சம்பந்தர் சிவஞான சம்பந்தர் என்று அழைக்கப்படலானார். ஞானப்பால் அருந்திய தினம் முதல், ஈசன் மீது பாடல்கள் புனையத் தொடங்கினார் சம்பந்தர். அவரின் பெருமை ஊர் முழுவதும் பரவத் தொடங்கியது. சிவத்தலங்களுக்குச் சென்று ஆலய தரிசனம் செய்ய எண்ணிய சம்பந்தர், ஒருநாள் தந்தையுடன் திருக்கோலக்கா தலத்துக்குச் சென்றார்.

தனது பிஞ்சுக் கரத்தால் தாளம் போட்டுப் பாடும் சம்பந்தரைக் கண்ட ஈசன், ஐந்தெழுத்து மந்திரம் எழுதப்பட்ட இரண்டு பொற்தாளங்களை சம்பந்தருக்கு அளித்தார். பக்தியுடன் திருக்கடைக்காப்பு பாடிய சம்பந்தர் மீண்டும் சீர்காழி வந்து ஈசன் மீது 8 பதிகங்கள் பாடினார். அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, திருநனிப்பள்ளி, திருவலம்பரம் உள்ளிட்ட தலங்களுக்குச் சென்று சிவதரிசனம் செய்தார். மீண்டும் சீர்காழி வந்தடைந்த சம்பந்தரை, திருநீலகண்ட யாழ்ப்பாணர் தனது மனைவியுடன் வந்து வணங்கினார்.

சம்பந்தரின் பதிகங்களை, திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவரது மனைவியும் யாழில் இசைத்தனர். மூவரும் சேர்ந்து பல தலங்களுக்குச் சென்றனர் பதிகங்கள் பாடி, யாழில் இசைத்து மகிழ்ந்தனர். தில்லை சென்று சிவதரிசனம் செய்ய விருப்பம் கொண்ட சம்பந்தரை, சிவபாதர் தோளில் சுமந்தவாறு தில்லைக்கு அழைத்துச் சென்றார். தில்லைவாழ் அந்தணர்கள் சம்பந்தருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து, உற்காக வரவேற்பு அளித்தனர். பல நாட்கள் தில்லையில் தங்கியிருந்த சம்பந்தர், அம்பலவாணரை வழிபட்டு, திருப்பணிகள் மேற்கொண்டார்.

திருநீலகண்ட யாழ்ப்பாணரின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவரது சொந்த ஊரான திருஎருக்கத்தம்புலியூர் சென்று, ஈசனை வழிபட்டு, சம்பந்தர் திருப்பதிகங்கள் பாடினார். யாழ் முறிப்பண் உள்ளிட்ட இசையின் பல்வேறு நுணுக்கங்கள் குறித்து திருநீலகண்ட யாழ்பாணருக்கு, சம்பந்தர் எடுத்துரைத்தார். தந்தையார் தன்னை தோளில் சுமந்து செல்வதைக் கண்டு மனம் கலங்கிய சம்பந்தர், திருநெல்வாயில் தலத்தை நோக்கி நடந்து சென்றார்.

சம்பந்தரின் வரவை அறிந்த ஈசன், திருநெல்வாயில் அடியார்களின் கனவில் தோன்றி, திருஞானசம்பந்தரை ஏற்றி வருவதற்காக முத்துச் சிவிகை, முத்துக் குடை, முத்துச் சின்னங்கள் வைத்திருப்பதை தெரிவித்து, அவற்றைப் பயன்படுத்தி, சம்பந்தரை அழைத்து வருமாறு பணித்தார். சம்பந்தர் கனவிலும் தோன்றிய ஈசன், அவருக்கு அளிக்கவிருக்கும் வரவேற்பைப் பற்றி தெரிவித்தார். அனைத்தையும் ஏற்றுக் கொண்ட சம்பந்தர், ஈசன் மீது திருப்பதிகங்கள் பாடினார்.

திருஞானசம்பந்தர்
திருஞானசம்பந்தர்

ஏழாவது வயதில், சீர்காழியில் சம்பந்தருக்கு உபநயனம் செய்யும் சமயத்தில், மறையோருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை தீர்த்து வைத்தார் சம்பந்தர். சம்பந்தரைப் பற்றி கேள்வியுற்ற திருநாவுக்கரசர், அவரை சந்தித்து அளவலாவி மகிழ்ந்தார். சம்பந்தர் அவரைப் பார்த்து ‘அப்பரே’ என்று விளித்து அழைத்தார். இருவரும் சேர்ந்து தோணியப்பரை தரிசித்தனர். திருநாவுக்கரசருடன் இணைந்து பல தலங்களுக்குச் சென்றார் சம்பந்தர். சமணர்களை வெற்றி கொள்ள மதுரைக்கு யாத்திரை புறப்பட்டார் சம்பந்தர்.

பாண்டிய மன்னர் நெடுமாறன் சமண சமயம் சார்ந்து இருப்பதை அறிந்த சம்பந்தர், நெடுமாறன் மனைவி மங்கையர்கரசி, அமைச்சர் குலச்சிறையார் ஆகியோரின் துணையுடன் மன்னரை சைவ சமயம் தழுவச் செய்தார். வெக்கை நோயால் அவதிப்பட்ட மன்னரை, சம்பந்தர் திருநீற்றுப் பதிகம், பச்சைப் பதிகம் பாடி, காத்தருளினார். சமணர்களை வாதப் போரில் சம்பந்தர் வெற்றி கண்டார்.

பூம்பாவையை உயிர்ப்பிக்கும் நிகழ்வு...
பூம்பாவையை உயிர்ப்பிக்கும் நிகழ்வு...

மயிலாப்பூரில் சிவநேசர் என்பவரின் மகள் பூம்பாவை, அரவு தீண்டி இறந்தார். பதிகங்கள் பாடி அவரை உயிர்ப்பித்தார் சம்பந்தர். தனது 16-வது வயதில் திருநல்லூரில் உள்ள நம்பியாண்டார் நம்பியின் புதல்வியை மணந்தார். ஆனால், ஈசனைச் சேரும் காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்த திருஞானசம்பந்தர், மணக்கோலத்துடனேயே, மணப்பெண்ணுடன் ஆச்சாள்புரம் கோயில் சென்று, வைகாசி மூல நட்சத்திர தினத்தில் சிவஜோதியில் கலந்தார். அங்கிருந்த அனைவரும் ஈசனது திருவடி நிழலில் இளைப்பாறினர்.

முருகப் பெருமானே திருஞானசம்பந்தராக அவதரித்தார் என்று அருணகிரியார், வள்ளலார் முதலானோரின் நம்பிக்கையாக உள்ளது.

‘எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்’

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க...

திருஞானசம்பந்தர் - திருக்கோலக்கா
சிவனருள் பெற்ற அடியார்கள் – 23

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in