சிவனருள் பெற்ற அடியார்கள் – 19

அடியாருக்குத் தொண்டு புரிந்தவர்கள் -2.கணநாத நாயனார்
சிவனருள் பெற்ற அடியார்கள் – 19
Updated on
3 min read

சீர்காழியில் அந்தணர் குலத்தில் அவதரித்த, கணநாத நாயனார், சைவ சமய பணிகளுக்காக நபர்களை தயார் செய்தவர். திருஞானசம்பந்தரை தனது குருநாதராக ஏற்று, அவர்வழியில் அடியார்களுக்கு தொண்டு புரிந்து, அவர்கள் வேண்டுவதை செய்து வந்தார்.

திருஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழி தலத்தில் எண்ணற்ற வேதியர்கள் வசித்து வந்தனர். வேதியர்கள் குலத் தலைவராக இருந்த கணநாதர் என்ற சிவனடியார், நாள்தோறும் சிவாகம விதிப்படி சீர்காழி தோணியப்பரை வழிபட்டு வந்தார். மேலும், சிவனடியார்களுக்குத் தொண்டு புரியும் உயர்ந்த அறத்தை உணர்ந்து, சிறந்த வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

தொண்டு புரிபவர்கள் மூவுலகமும் போற்றும் பெருமை பெற்றவர்கள். தாங்கள் புரியும் தொண்டுக்கு இடையூறு ஏதேனும் ஏற்பட்டால், அவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளவும் தயங்க மாட்டார்கள். இந்த நெறிமுறையை உலகுக்கு உணர்த்திய கணநாதர், தாமும் அவ்வழி நடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோயிலில் அமைந்துள்ள சோலைகளை சீர்படுத்துவது, பொற்றாமரைக் குளத்தை செப்பனிடுவது, கோயில் பிரகாரத்தை தூய்மைப்படுத்துவது என்று கணநாதர், ஆலயத் தொண்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இறை வழிபாட்டுக்குத் தேவையான மலர்களைப் பெறுவதற்காக, புதிதாக நந்தவனம் ஒன்றை அமைத்தார்.

கணநாத நாயனார்
கணநாத நாயனார்

மலர்களை முறைப்படித் தொடுத்தல், சுவாமி அபிஷேகத்துக்கு உண்டான பொருட்களை சேகரித்தல், கோயிலில் திருவிளக்கிடுதல், திருமுறைகளை எழுதுதல், படித்தல் முதலிய தொண்டுகளை கணநாதர் தவறாது செய்து வந்தார். தொண்டர்களுக்கு பூஜை முறைகளைப் பயிற்றுவித்து, யாருக்கு எதில் விருப்பமோ, அப்பணியில் அவர்களை ஈடுபடுத்தி ஆலயப் பணிகளை நிறைவாகச் செய்து வந்தார். அடியார்களுத் தேவையான உதவிகளையும் இடையிடையே செய்து வந்தார். திருஞானசம்பந்தருடைய திருவடிகளைப் போற்றி வணங்கி வந்தார்.

சீர்காழி பிரம்மபுரீஸ்வரர்
சீர்காழி பிரம்மபுரீஸ்வரர்

இறைவன் அருளால் பேரின்ப வீடு பெற்று சிவகணங்களுக்கு தலைமைப் பதவியில் அமர்ந்து, திருத்தொண்டில் நிலையான இன்பத்தைப் பெற்றார் கணநாதர்.

‘கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்’

3.புகழ்த்துணை நாயனார்

செருவில்லிபுத்தூரில் ஆதிசைவர் குலத்தில் பிறந்த புகழ்த்துணை நாயனார், தினமும் ஐந்தெழுத்து ஓதி, சிவாகம முறைப்படி சிவபெருமானை பூஜித்து வந்தார். சிவனடியார்களுக்குத் தேவையான உதவிகளை செய்து மகிழ்ந்தவர்.

கும்பகோணத்தில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ள அரிசில் கரைப்புத்தூர் (செருவில்லிபுத்தூர்) என்ற ஊரில் சிவனடியார்கள் பலர் வசித்து வந்தனர். அவர்களுள் ஒருவர் புகழ்த்துணை நாயனார். இறைவனுக்கு மலரிட்டு, அபிஷேகம் செய்து வழிபடுவதை பெரும் தவமாகக் கருதி நாள்தோறும் ஈசனை வழிபடுட்டு வந்தார்.

புகழ்த்துணை நாயனார்
புகழ்த்துணை நாயனார்

ஒரு சமயம் அவர் வாழும் பகுதியில் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் பசியால் வாடி, உணவைத் தேடி அலைந்தனர். அப்போது தனது பசியைப் பொருட்படுத்தாது, இறைவனுக்கு தொண்டு புரிவதிலேயே தனது கவனத்தை செலுத்தி வந்தார் நாயனார். ஒருநாள் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யும்போது, பசிப்பிணியால், உடல் சோர்வுற்று, கையில் இருந்த தண்ணீர் குடத்துடன் தடுமாறி, கீழே விழுந்தார். அப்போது கையில் இருந்த குடம் சிவலிங்கத்தின் மீது விழுந்தது. இதைக் கண்டு, பெரும் துன்பமுற்று மயக்கமுற்றார்.

அங்கேயே நீண்ட நேரம் கண்ணயர்ந்து உறங்கிவிட்டார் நாயனார். அவரது கனவில் தோன்றிய ஈசன், “பஞ்சத்தால் மக்கள், நாடு, நகரம் துறந்து சென்றபோதும் நீவீர் மட்டும் எம்மையே அணைந்து, வழிபட்டதால், பஞ்சம் நீங்கும் வரை, நாள்தோறும் உமக்காக யாம், இங்கு ஒரு காசு வைப்போம்” என்று அருளினார். கண்விழித்துப் பார்த்த புகழ்த்துணை நாயனார், எம்பெருமானின் அருளை எண்ணி உருகினார். இறைவனின் பீடத்தில் ஒரு காசு இருப்பதைக் கண்டு, அதை எடுத்து வாழ்ந்தார்.

தினமும் அந்தக் காசைப் பயன்படுத்தி, பசி தீர்த்து, மலர்களால் ஈசனை அர்ச்சித்து, பூஜை செய்து வந்தார். பல நாட்கள் வாழ்ந்து ஈசன் திருவடி நிழலில் இளைப்பாறினார்.

‘பொன்னடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்’

**

4.இடங்கழி நாயனார்

கொடும்பாளூர் தலத்தில், சிற்றரரசாக இருந்த இடங்கழி நாயனார், ஆகமத்தில் உள்ள சைவ நெறிகளையும், வேதத்தில் உள்ள தரும நெறிகளையும் பாதுகாத்து வந்தார். கோயிலில் பூஜைகள் செய்து, அடியார்களுக்கு தொண்டு புரிந்து வந்தார்.

கோனாட்டின் தலைநகரான கொடும்பாளூர் என்ற ஊரை, இடங்கழியார் என்ற குறுநில மன்னர் ஆட்சி புரிந்து வந்தார். அவர் கோயில்களில் ஆறுகால பூஜைகள் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்து வந்தார். அடியார்களை இறைவனாகவே எண்ணி, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார்.

இடங்கழி நாயனார்
இடங்கழி நாயனார்

கொடும்பாளூரில் உள்ள ஒரு சிவனடியார், ஏனைய சிவனடியார்களுக்கு இன்னமுது அளித்து உபசரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் அவரது இல்லத்துக்கு நிறைய சிவனடியார்கள் வந்தனர். வந்தவர்களுக்கு உணவிடும் அளவுக்கு தன் இல்லத்தில் தானியங்கள் இல்லாததை உணர்ந்த சிவனடியார், இடங்கழியாரின் அரண்மனைக்குள் புகுந்து, களஞ்சியத்தில் இருந்த நெல்லை எடுத்தார். அப்போது அவரை, காவலர்கள் பிடித்து, இடங்கழியார் முன்னர் நிறுத்தினர்.

நெல்மணிகளை களவாடியதற்கு காரணம் கேட்டபோது, அடியார்களுக்கு உணவிடும் பொருட்டு திருடியதாக சிவனடியார் கூறியதும், உடனே அவரை விடுதலை செய்யும்படி இடங்கழியார் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், அரண்மனையில் உள்ள நெற்களஞ்சியங்கள் அனைத்தையும் திறந்து, அடியார்களுக்கு அமுது செய்ய நெல்லைத் தரவும் ஆணையிட்டார். நாட்டிலுள்ள சிவனடியார்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து தருவதாகவும் உறுதி அளித்தார்.

திருநீற்றின் பெருமைக்குத் தலைவணங்கிய குறுநில மன்னர் இடங்கழியார் நீண்ட நாள் அரசாட்சி புரிந்து, அடியார் தொண்டு புரிந்து, நிறைவாக ஈசன் திருவடி நிழலில் இளைப்பாறினார்.

‘தான் நம்பி இடங்கழிக்கு அடியேன்’

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க...

சிவனருள் பெற்ற அடியார்கள் – 19
சிவனருள் பெற்ற அடியார்கள் – 18

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in