அந்தணர் குலத்தில் பிறந்த பூசலார் நாயனார், உள்ளத்தில் எழும் உணர்வு அனைத்தையும் ஈசனடி மீது செலுத்தி, வேதநீதி தவறாது வாழ்ந்தவர். அடியார்த் தொண்டு புரிந்தவர். சிவனுக்கு ஆலயம் எழுப்ப எண்ணி, அதற்கான பொருள் கிடைக்காததால் மனதுக்குள்ளேயே ஓர் ஆலயம் எழுப்பியவர்.
தொண்டை மண்டலத்தில் திருநின்றவூர் என்ற தலத்தில் வேதியர் மரபில் தோன்றியவர்கள் பலர் வசித்து வந்தனர். ஆகம, சாஸ்திர நெறிகளைக் கற்றுத் தேர்ந்தவர்களுள் ஒருவராக பூசலார் என்ற சிவனடியார் வாழ்ந்து வந்தார். இவர்கள் அனைவரது உள்ளமும் கங்கையணிந்த சங்கரன் சேவடியில் மட்டுமே இருந்தது.
சிந்தையிலே சிவனை வைத்த பூசலார் நாயனார், பிறை அணிந்த பெருமானுக்கு தனது ஊரில் எப்படியாவது கோயில் எழுப்ப வேண்டும் என்று எண்ணினார். அதற்காக பொருட்கள் சேகரிக்கும் பணிகளைத் தொடங்கினார். ஒவ்வொருவரிடமும் கல், மணல், பணம் என்று கேட்டுப் பார்த்தார். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. இதனால் மனம் புண்பட்டு நின்றார் பூசலார். செய்வதறியாது சித்தம் கலங்கி ஏங்கினார்.
‘புறத்தேதான் புற்றிடங்கொண்ட பெருமானுக்கு கோயில் எழுப்ப இயலவில்லை. அகத்திலே அண்ணலாருக்கு என் மனதுக்கு ஏற்ப, எவ்வளவு பெரிய கோயிலை வேண்டுமானாலும் கட்டலாம் அல்லவா?’ என்று பூசலார் மனதுக்குள் ஓர் எண்ணம் உதித்தது.
உடனே மனதுக்குள் பொருட்களை சேகரிக்கும் பணிகள் தொடங்கின. நிதி, கருங்கல், மரம், சுண்ணாம்பு முதலிய பொருட்களையும், நிறைய ஆள் பலத்தையும் மனதுக்குள் சேர்த்துக் கொண்டார். ஒரு நல்ல நாள் பார்த்து தனி இடத்தில் அமர்ந்து, ஆகம முறைப்படி மனத்திலே கோயில் எழுப்பத் தொடங்கினார் பூசலார்.
இரவு பகலாக பணிகள் நடைபெற்றன. கருவறை, ஸ்தூபி, அலங்கார மண்டபம், திருமதில்கள், திருக்குளம், திருக்கிணறு, கோபுரம் முதலிய அனைத்தும் புத்தம் புது பொலிவுடன் அமைக்கப்பட்டன. புறத்தே ஓர் ஆலயம் எழுப்புவதற்கு எவ்வளவு நாட்கள் ஆகுமோ, அவ்வளவு நாட்கள், அகத்தே ஆலயம் எழுப்புவதற்கும் அவருக்கு ஆயிற்று.
இதே சமயத்தில் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்த பல்லவ தேசத்து அரசர் காடவர் கோமான் (ராஜ சிம்மன்), காஞ்சிபுரத்தில் சிவபெருமானுக்கு கற்கோயில் ஒன்றை கட்டி முடித்திருந்தார்.
பூசலார் நாயனார், மானசீகமாகக் கோயில் எழுப்பி, அதற்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டிருந்த அதே நாளில், அரசரும் தான் எழுப்பிய கற்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டிருந்தார். அதற்கான அனைத்து முயற்சிகளும் தீவிரமாக நடைபெற்று வந்தன. கும்பாபிஷேக நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது.
கும்பாபிஷேகம் நடைபெற வேண்டிய நாளுக்கு முதல்நாள் இரவு எம்பெருமான் அரசரின் கனவில் எழுந்தருளினார்.
“அன்பரே.., திருநின்றவூரில் வசிக்கும் நம் அன்பராகிய பூசலார் தமது உள்ளக் கோயிலுக்கு நாளை குபாபிஷேகம் நடத்தத் திட்டமிட்டுள்ளார். அந்த கோயிலுக்குள் நாளை நாம் எழுந்தருள சித்தம் கொண்டுள்ளோம். ஆதலால், நீர் மற்றொரு நாளில் கும்பாபிஷேகத்தை வைத்துக் கொள்வீராக!” என்று ஈசன் திருவாய் மலர்ந்தார். அரசர் கண்விழித்து நடந்தவற்றை யோசிப்பதற்குள் ஈசன் அவ்விடத்தில் இருந்து மறைந்தார்.
கனவை நினைத்து வியந்தார் அரசர். திருநின்றவூர் சென்று அந்த சிவனடியாரை சந்தித்து அவரது திருக்கோயிலை தரிசித்து வருவது என்று முடிவு செய்தார். அமைச்சர் மற்றும் பரிவாரங்களுடன் திருநின்றவூருக்குப் புறப்பட்டார் அரசர்.
திருநின்றவூரை அடைந்த அரசர், கோயிலைத் தேடினார். சிவனடியார் இருக்கும் இடத்தை அறிய விரும்பினார். பூசலார் அமைத்த கோயில் எங்குள்ளது என்று பலரைக் கேட்டார். ஊர் முழுவதும் தேடினார்; எவருக்கும் தெரியவில்லை.
நிறைவாக அவ்வூர் அந்தணர்களை அழைத்து பூசலார் குறித்து வினவினார். அவர்களும் பூசலார் இருக்கும் இடத்தை அரசருக்கு தெரிவித்தனர். உடனே, பூசலார் இல்லத்துக்குப் புறப்பட்டார் அரசர். பூசலாரை கண்டார். அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.
பூசலார் நிறுவிய கோயில் குறித்து வினவினார் அரசர். மேலும், ஈசன் தன்னிடம் கூறிய அனைத்தையும் பூசலாரிடம் கூறினார் அரசர். அதைக் கேட்டு பூசலார் வியப்பில் ஆழ்ந்தார். மன்னரைப் பார்த்து, “மன்னரே... அடியேனையும் ஒரு பொருட்டாக நினைத்து இறைவன் இங்கு எழுந்தருள திருவுள்ளம் கொண்டார் போலும். இவ்வூரில் எம்பெருமானுக்கு கோயில் எழுப்ப அரும்பாடுபட்டேன். பெருமளவு பொருள் இல்லாததால், புறத்தே எழுப்பும் கோயிலுக்கு பதிலாக, என் அகத்திலேயே ஈசனுக்கு கோயில் எழுப்பத் தொடங்கினேன். இன்று அவரை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகமும் புரிகிறேன்” என்றார் பூசலார்.
ஆச்சரியமடைந்த அரசர், இறைவழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்தார். உள்ளக் கோயிலில் குடியேறப்போகும் இறைவனின் அருள் நிலையை எண்ணிப் பார்த்தார். ‘சங்கரனை சிந்தையில் இருத்தி, அன்பால் எழுப்பிய உள்ளக் கோயிலுக்கு ஈடாக, பொன்னும் பொருளும் கொண்டு எழுப்பிய கோயில் ஒருபோதும் ஈடாகாது’ என்பதை உணர்ந்த அரசர், திருமுடிபட பூசலாரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். அவரைப் போற்றிப் புகழ்ந்து விடைபெற்றார்.
பூசலார் எண்ணியபடி அவரது உள்ளக் கோயிலில் ஈசன் எழுந்தருளினார். பூசலாரும் ஈசனை மனத்தில் இருத்தி பூஜைகள் செய்தார். அன்று முதல் தினந்தோறும் முக்காலமும் ஆகம நெறி வழுவாமல் நித்திய நைமித்தியங்களை செய்து முக்கண்ணனை வழிபட்டு வந்தார் பூசலார். நிறைவில் பிறவாப் பேரின்பமாகிய இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறினார்.
(காடவர் கோமான் (ராஜ சிம்மன்) என்ற அரசர், திருநின்றவூரில் மரகதாம்பாள் சமேத இருதயாலீஸ்வரர் கோயிலைக் கட்டியதாகக் கூறப்படுகிறது)
‘மறைநாவன் நின்றவூர்ப் பூசலார்க்கும் அடியேன்’
முந்தைய அத்தியாயத்தை வாசிக்க...