சிவகங்கை குளக்கரையில் சிவகாம சுந்தரி அம்பாள்

ஆடியில் தேவி தரிசனம் - 4
சிவகாம சுந்தரி அம்மை, சிதம்பரம் நடராஜர் ஆலய சிவகங்கைத் தீர்த்தம்
சிவகாம சுந்தரி அம்மை, சிதம்பரம் நடராஜர் ஆலய சிவகங்கைத் தீர்த்தம்

பஞ்சபூத சிவத்தலங்களில் ஆகாயத் தலமாக விளங்குகிறது சிதம்பரம். சிவத்தலங்களில்  கோயில் என்றால் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தையே குறிக்கிறது. இறைவன் இத்தலத்தில், நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருவமாகவும் அருள்பாலிக்கிறார். அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.

சிதம்பரம் நடராஜர் ஆலய இராஜகோபுரம்
சிதம்பரம் நடராஜர் ஆலய இராஜகோபுரம்

இத்தலத்தில் அம்பாளுக்கு சிவகாம சுந்தரி என்பது திருப்பெயர். கல்வெட்டுக்களில் திருக்காமக்கோட்டமுடைய பெரிய நாச்சியார் என குறிக்கப்பட்டுள்ளது. சிதம்பரேஸ்வர் கோயில் வளாகத்துக்குள் சிவகங்கைத் தீர்த்தம் எனப்படும் தெப்பக்குளம் அமைந்திருக்கிறது. இக்குளத்தின் மேற்குக்கரையில் சிவகாமசுந்தரி அம்பாள் தனிக்கோயில் கொண்டுள்ளார். ஜொலிக்கும் கிரீடமும், பளிச்சிடும் மூக்குத்திப் புல்லாக்கும், தங்கவளையும், தண்டையும், கொலுசும், மெட்டியும் அணிந்து, வலக்கையில் அட்சர மாலையும், இடக்கையில் கிளியும் தாங்கி, மங்களமே வடிவாக, ஞானமே உருவாக, ஆறு அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் சிவகாமி அன்னை அருள்பாலிக்கிறாள்.

அன்னை சிவகாமியின் அருட்கண்கள் காந்தசக்தி கொண்டவை. அம்பிகையின் அருட்கண்களின் அழகில் பெரிதும் ஈடுபட்ட சுவாமி குமரகுருபரர் பின்வருமாறு புகழ்ந்து பாடுகிறார்:

“கறையரவுக் கஞ்சுறா தஞ்சுறூஉந் திங்கள்

இறைவி நறுநுதலைக் கண்டு - பிறைமுடியோன்

கைம்மா னடமுவந்த காற்புலிக்கஞ் சாதஞ்சும்

அம்மான் விழிமானைக் கண்டு”.

விளக்கம்: சிவபெருமான் தனது சடைமுடியில் சந்திரனையும், பாம்பையும் அணிந்துள்ளார். சந்திரன் தனக்கு அருகில் உள்ள பாம்பைக் கண்டு அஞ்சுவதை விட, அன்னை சிவகாமியின் அழகிய, குறுகிய, மெல்லியதாய் வளைந்த திருநெற்றியைக் கண்டு, இந்த அழகும், சிறப்பும் தனக்கில்லையே என்று நாணி அஞ்சுகிறானாம்.

அதுபோல் சிவபெருமானின் கையிலுள்ள மான், அருகில் புலி வடிவில் உள்ள வியாக்கிரபாதருக்கு அஞ்சுவதில்லையாம். சிவகாமி அன்னையின் திருக்கண்களுக்கு உள்ள அழகு தனக்கில்லையே என்று நாணமடைந்து அஞ்சுகிறதாம். தேனை உண்டு திளைத்த கருவண்டுகளை மிஞ்சுபவை சிவகாமி அம்மையின் திருக்கண்கள் என்று குமரகுருபரர் சுவாமி விவரிக்கிறார்.

சிதம்பரம் நடராஜர் ஆலய சிவகங்கைத் தீர்த்தம்
சிதம்பரம் நடராஜர் ஆலய சிவகங்கைத் தீர்த்தம்
தில்லை நடராஜர் - சிவகாமி அம்மை
தில்லை நடராஜர் - சிவகாமி அம்மை

சிவகாமி அம்மை தோத்திரம் என்ற செய்யுள், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் என்ற ஐந்து தொழில்களையும் சிவகாமி அம்மையே புரிகின்றாள் என்று புகழ்கிறது.

சிவகாமி அம்மன் அகவல், சிவகாமி அம்மன் ஊசல், தில்லைச் சிவகாமி அம்மன் கலிவெண்பா, சிவகாமி அம்மன் பேரில் தோத்திரம், சிவகாமவல்லி விருத்தம் என பல் நூல்கள் அன்னையைப் புகழ்கின்றன.

மன்னர்கள் காலம்தொட்டே இசைக்கலையையும், ஆடற்கலையையும் போற்றி வளர்த்த நகரம் சிதம்பரம். இங்கு அன்னை சிவகாமசுந்தரியின் சன்னதி 11-ம் நூற்றாண்டில் மன்னன் விக்கிரம சோழனாலும், அதன்பின் அவரது மகன் இரண்டாம் குலோத்துங்க சோழனாலும், தனிக் கொடிமரம், இரண்டு பிரகாரங்கள் கொண்டதாக, சிற்பக்கலைக்கும், ஓவியக்கலைக்கும் மெருகூட்டும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அன்னை சிவகாமசுந்தரி சன்னதியில் பிரகாரங்களில் இசைக்கலை மற்றும் ஆடற்கலை பற்றிய எண்ணிலடங்கா சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பரத நாட்டிய முத்திரைகளை விளக்கும் தத்ரூபமான சிற்பங்கள் சோழர் கால கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

அம்பாள் சன்னதி வளாகத்தில் சித்திரகுப்தருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. தொடர்ந்து தீர்த்த விநாயகர், ஆதிசங்கரர், ஸ்ரீசக்கரம், உள்சுற்று பிரகாரத்தில் சப்த கன்னியர், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரி ஆகிய சன்னதிகள் அமைந்துள்ளன.

அன்னை சிவகாமசுந்தரிக்கு ஆண்டுதோறும் ஐப்பசி பூரத்தை முன்னிட்டு 10 நாள் திருவிழா நடைபெறுகிறது. தேரோட்டம், பட்டு வாங்குதல், பூரச்சலங்கை உற்சவம், தபசு உற்சவம், சிவானந்த நாயகி சமேத சோமாஸ்கந்தருக்கு திருக்கல்யாணம் ஆகியவை பூரத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாகும்.

சிதம்பரம் நடராஜர் ஆலய சிவகங்கைத் தீர்த்தம்
சிதம்பரம் நடராஜர் ஆலய சிவகங்கைத் தீர்த்தம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in