பர்வதவர்த்தினியின் ஆடித்தபசு

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் - பர்வதவர்த்தினி அம்பாள் - ராமநாத சுவாமி
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் - பர்வதவர்த்தினி அம்பாள் - ராமநாத சுவாமி

ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரத்தில் வைணவத் திருத்தலங்களில் ஆண்டாள் திருநட்சத்திரமும், அதே பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு சிவத்தலங்களில் முளைக்கட்டு திருவிழாவும் பிரசித்தமாக நடைபெறும். அதுபோல், சிவபெருமான் குறித்து அம்பாள் தவம் மேற்கொள்ளும் ஆடித்தபசு திருவிழாவும் பல்வேறு சிவத்தலங்களில் விமரிசையாக நடைபெறும்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் - அக்னி தீர்த்தத்தில்(கடல்) நீராடும் பக்தர்கள்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் - அக்னி தீர்த்தத்தில்(கடல்) நீராடும் பக்தர்கள்

தீர்த்தம், மூர்த்தி, தலம் ஆகிய முப்பெருமைகளைக் கொண்டது ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில். நாடு முழுக்க இருக்கும் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. பாண்டிய நாட்டில் பாடல்பெற்ற திருத்தலங்களில் இத்தலம் அப்பர், சுந்தரர் ஆகிய இருவரால் பாடல் பெற்றது.

ராமேசுவரமும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் ராமாயணத்துடன் நெருங்கிய தொடர்புடையன. இக்கோயில் மூலவர் ராமநாத சுவாமி மணலினால் சீதாப்பிராட்டியால் உருவாக்கப்பட்டு, ஸ்ரீ ராமபிரானால் வழிபடப்பட்டவர். பர்வதவர்த்தினி அம்பாள் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். வங்கக் கடற்கரையில் கிழக்கு நோக்கி சுவாமி வீற்றிருக்கிறார். இத்தலத்தில் உள்ள கடலுக்கு அக்னி தீர்த்தம் என்பது பெயர். இதுதவிர இக்கோயிலுக்குள் இருக்கும் 22 தீர்த்தங்கள் புகழ்பெற்றவை. இவற்றில் நீராடி சுவாமியை தரிசனம் செய்ய பாரதம் முழுவதுமிருந்து பக்தர்கள் குவிகின்றனர்.

பர்வதவர்த்தினி அம்மன் - ராமநாத சுவாமி (ராமேஸ்வரம்)
பர்வதவர்த்தினி அம்மன் - ராமநாத சுவாமி (ராமேஸ்வரம்)

ராமநாத சுவாமி குறித்து பர்வதவர்த்தினி அம்பாள் தவம் மேற்கொண்டு சுவாமியை அடைந்த நிகழ்வு இங்கு ஆடி திருக்கல்யாண விழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்விழா கொடியேற்றதுடன் தொடங்கி 17 நாட்கள் நடைபெறுவது வழக்கம். ஆடி அமாவாசைக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக கார்த்திகை நட்சத்திரத்தில் இவ்விழா கொடியேற்றம் நடைபெறும்.  விழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஆடி அமாவாசையை முன்னிட்டு சுவாமியும், அம்பாளும் அக்னி தீர்த்தக்கடலுக்கு எழுந்தருள்வர். அங்கு பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

விழாவின் 7-ம் நாளன்று இரவு கன்னி லக்னத்தில் பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று, பின்னர் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் அம்பாள் வலம் வருவார். 9-ம் நாள் நிகழ்ச்சியாக அம்பாள் தேரோட்டம் நடைபெறும். அன்று அதிகாலை 4 மணியளவில் ராமநாத சுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு, ஸ்படிக லிங்க பூஜையும், தொடர்ந்து காலபூஜையும் நடைபெறும்.

அம்பாள் - சுவாமி ரிஷப வாகனத்தில் வீதியுலா
அம்பாள் - சுவாமி ரிஷப வாகனத்தில் வீதியுலா

காலை 10 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் பர்வதவர்த்தினி அம்பாள் எழுந்தருளி, நான்கு ரத வீதிகளில் வலம் வருவார்.

விழாவின் 11-ம் நாளில் ஆடித்தபசு நடைபெறும். அன்று மதியம் ராமர்தீர்த்தம் தபசு மண்டகப்படிக்கு அம்பாள் எழுந்தருள்வார். அங்கு சுவாமியை நோக்கி அம்பாள் தவமிருக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று மாலை சுவாமி இந்த மண்டகப்படிக்கு எழுந்தருளி சுவாமி - அம்பாள் மாலை மாற்றும் வைபவம் நடைபெறும். இத்தவத்தைக் கண்டு உகந்து அம்பாளை சுவாமி ஏற்றுக்கொள்வதாக ஐதீகம். மறுநாள் இரவில் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

விழாவில் 17-ம் நாள் நிகழ்ச்சியாக சுவாமி-அம்பாள் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். கெந்தமாதன பர்வதம் என்பது ராமநாதசுவாமி கோயிலில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் ஒரு அழகிய குன்றின் மீது அமைந்துள்ளது. இங்கு ராமர் காலடித் தடங்கள் இருப்பதாக நம்பிக்கை. அந்த இடத்தைச் சுற்றி மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. விபீஷணனை ராமர் இந்த இடத்தில் சந்தித்ததாக கூறுவர். இந்நிகழ்வு நடைபெறும் நாளில் ராமநாத சுவாமி கோயிலுக்குள் செல்லவும், கோயிலுக்குள் இருக்கும் தீர்த்தக்கிணறுகளில் புனித நீராடவும் அனுமதிக்கப்பட மாட்டாது. ஆடித் திருக்கல்யாணம் நிறைவுற்றதும் சுவாமியும் - அம்பாளும் கெந்தமாதன பர்வதத்துக்கு எழுந்தருள்வது மறுவீடு நிகழ்ச்சியாக கருதப்படுகிறது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் தேரோட்டம்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் தேரோட்டம்

நிகழ்ச்சிகள்:

13.7.2023 -  கொடியேற்றம்.

21.7.2023 - தேரோட்டம்.

23.7.2023 - ஆடித்தபசு.

24.7.2023 - திருக்கல்யாணம்.

29.7.2023 -  கெந்தமாதன பர்வதத்துக்கு எழுந்தருளல்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in