திருப்பதியில் கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள்... லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

திருப்பதியில் கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள்... லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!
Updated on
2 min read

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருமலை பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட வாகன சேவையைக் காண 3 லட்சம் பக்தர்கள் திருமலையில் திரண்டு கோவிந்தா முழக்கத்தால் விண்ணை அதிர வைத்தனர்.

திருப்பதியில் குவிந்த பக்தர்கள்
திருப்பதியில் குவிந்த பக்தர்கள்

திருமலை திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவம் கருடக் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரியும் மலையப்பசுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வருகிறார்.

ஐந்தாம் நாளான நேற்றைய தினம் காலையில் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி அணிந்து உலா வந்தார்.

பக்தர்கள் வழிபாடு
பக்தர்கள் வழிபாடு

நேற்று மாலையில் மலையப்பசுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளினார். இந்த உற்சவத்தில் மலையப்ப சுவாமி தங்கம், வைரம், மரகத பச்சை கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு பெரிய திருவடி எனப்படும் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் எழுப்பிய கோவிந்தா முழக்கம் விண்ணை எட்டியது.

திரண்ட பக்தர்கள்
திரண்ட பக்தர்கள்

நேற்று காலை முதலே பக்தர்கள் திருமலைக்கு வர தொடங்கிவிட்டதால், திருப்பதி பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் பக்தர்களே நிரம்பி இருந்தனர்.

மலைப்பாதையில் விபத்துகளைத் தவிர்க்க ஏற்கெனவே கடந்த 21-ம் தேதி மாலை 6 மணி முதல் இன்று 23ம் தேதி அதிகாலை 6 மணி வரை பைக்குகள் திருமலைக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் ஆந்திர அரசு பஸ்களிலும், ஜீப், கார்களிலும் வரத் தொடங்கினர். இதனால் காலை முதலே திருமலையில் கூட்டம் கூடத் தொடங்கிவிட்டது.

மலையப்ப சுவாமி
மலையப்ப சுவாமி

6ம் நாளான இன்று காலை சிறிய திருவடி என்று அழைக்கப்படும் அனுமந்த வாகனத்தில் மலையப்பசுவாமி மாட வீதியில் வலம் வந்தார். அப்போது சுவாமி வேடமணிந்து ஏராளமான கலைஞர்கள் நடனமாடினர். இதைக் காண மாட வீதியில் திரண்டிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

'கோவிந்தா, கோவிந்தா' என்ற பக்தி முழக்கத்துடன் மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று மாலை தங்க ரத உற்சவம் நடைபெற உள்ளது. எட்டாம் நாள் காலை நாளை மறுநாள் திருத்தேர் உற்சவம் நடைபெறும். திருத்தேரில் மலையப்ப சுவாமி உபய நாச்சியர்களுடன் எழுந்தருளுவார்.

எட்டாம் நாள் இரவு மலையப்பசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத்தில் ஸ்ரீமன் நாராயணன் குதிரையின் மீது எழுந்தருள்வார் குதிரை வாகனம் மாடவீதிகளில் வருகிற போது ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி பாடப்படுவது சிறப்பாகும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in