வஞ்சி மரக்காட்டில் சுயம்புவாகத் தோன்றிய பசுபதீஸ்வரர்!

கொங்கு நாட்டு ஏழு சிவத்தலங்கள் - 4. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில்
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில்
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில்

பாரத தேசத்தில் 276 தேவார பாடல் பெற்ற சிவ தலங்களில் கொங்கு நாட்டில் ஏழு தலங்கள் உள்ளன. அதில் ஒன்று கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில்.

திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையும், திண்டுக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது கரூர். மிகப்பெரிய தொழில் நகரம். பரம்பிக்குளம் - ஆழியாறு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் அமராவதி ஆற்றின் கரையில் கரூர் அமைந்திருக்கிறது. கரூரைத் தாண்டியதும் அமராவதி ஆறு, காவிரியுடன் சங்கமிக்கிறது.

மன்னர்கள் காலத்திலேயே புகழ்பெற்று விளங்கிய கரூர் நகரம் சோழர்களின் தலைநகர்களில் ஒன்றாகவும், கொங்கு நாட்டின் தலைநகராகவும், சேரர்களின் தலைநகரமாகவும் இருந்திருக்கிறது.

கரூரில் 120 அடி உயரத்தில், 7 அடுக்குகள் கொண்ட ராஜகோபுரத்துடன் பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது கல்யாண பசுபதீஸ்வர கோயில். இங்கு மூலவர் கல்யாண பசுபதீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி இருக்கிறார். ஆநிலையப்பர் என்றும், பசுபதிநாதர் என்றும் இவருக்கு பெயர்கள் உண்டு. அம்பாளுக்கு அலங்கார நாயகி என்றும், சௌந்தர்ய நாயகி என்றும் இரு சன்னதிகள் அமைந்துள்ளன.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் ராஜகோபுரம்
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் ராஜகோபுரம்

பிரம்மாவும், காமதேனுவும் வணங்கிய தலம் இது. வஞ்சி மரக்காட்டில் சுயம்புவாக இருந்த லிங்கத்தின் மீது தினமும் பால் சொரிந்து காமதேனு பசு வழிபட்டு வந்தது. அப்போது, லிங்கத்தின் தலை மீது காமதேனுவின் குளம்பு பட்ட காய வடு இப்போதும் உள்ளது. பசு வணங்கியதால் இவருக்கு பசுபதீஸ்வரர் என்று பெயர்.

இக்கோயிலின் தல விருட்சம் வஞ்சி என்று கூறப்பட்டாலும், தற்போது வில்வ மரங்கள் மட்டுமே காணப்படுகின்றன.

18 சித்தர்களில் ஒருவரான கருவூரார் சித்தர் (கருவூர் தேவர்) பிறந்த ஊர் இதுவே. கருவூரார் சித்தர் 9-ம் திருமுறையின் ஒரு பகுதியாகிய திருவிசைப்பாவில் இத்தலத்து பெருமானை பாடியுள்ளார். மன்னரிடம் இவருக்கு அவச்சொல் ஏற்படுத்த சிலர் முயன்றனர். இத்தொல்லை தாங்க முடியாமல் பசுபதீஸ்வரை கட்டித் தழுவியபடி கருவூரார் இறைவனடி சேர்ந்தார். அவரது ஜீவ சமாதி இங்கு உள்ளது. இக்கோயிலின் முருகப் பெருமானைப் புகழ்ந்து 7 பாடல்களை அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில்
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில்

புராண காலத்திலேயே முசுகுந்த சக்கரவர்த்தி இக்கோயிலைக் கட்டினார். ராஜேந்திர சோழன் (1012-54) ஆட்சிக் காலத்தில் இக்கோயில் விரிவுபடுத்தப்பட்டதாகவும், இக்கோயிலுக்கு அவர் நிலங்களைக் கொடையாக வழங்கியதாகவும் கல்வெட்டுகளின் மூலம் தெரியவருகிறது. 63 நாயன்மார்களில் ஒருவரான எரிபாத நாயனார் பிறந்த ஊரும் இதுவே. அரசராக இருந்து நாயனாராக விளங்கிய புகழச்சோழ நாயனார் வாழ்ந்த ஊரும் இதுவே. சன்னதிக்கு முன்னால் இருக்கும் 100 தூண்கள் கொண்ட மண்டபம் புகழ் சோழர் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.

பங்குனி மாதம் 14, 15, 16 ஆகிய நாட்களில் சூரியக் கதிர்கள் நேரடியாக மூலவர் மீது படும் வகையில் இக்கோயில் அமைந்திருக்கிறது.

மன நலம் பாதிக்கப்பட்டவர்களும், திருமணப்பேறு, புத்திரப் பேறு வேண்டுபவர்களும் இக்கோயிலில் வழிபாடுகள் செய்கின்றனர்.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில்
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in