நாச்சியார் கோயில்

நாச்சியார் கோயில்

கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையில் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது திருநறையூர். நிறைய சோலைகள் அமைந்த ஊர். ஸ்ரீநிவாசப் பெருமாள், நாச்சியாரை மணம் முடித்து இந்த ஊரிலேயே கோயில் கொண்டதால், நாச்சியார் கோயில் என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது.

ஸ்ரீநிவாசப் பெருமாள் வஞ்சுளவல்லித் தாயாருடன் இங்கு சேவை சாதிக்கிறார். தாயாரும் பெருமாளும் ஒரே சந்நிதியில் எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும். இங்கு முதலில் நாச்சியாருக்கு சகல மரியாதை செய்யப்படும்.. கருவறையில் பிரம்மதேவர், ப்ரத்யும்னன், பலராமர், அநிருத்தன், புருஷோத்தமன் உள்ளனர்.

மேதாவி என்ற முனிவர், திருமகள் தனக்கு மகளாக அவதரிக்க வேண்டும் என்றும், திருமால் தனக்கு மருமகனாக ஆக வேண்டும் என்றும் தவம் இருந்தார். அவரது தவத்துக்கு இணங்க, திருமகள் இத்தலத்தில் அவதரித்தார். முனிவரும் இக்குழந்தையை வளர்த்து வந்தார். திருமணப் பருவம் வந்ததும், பெண்ணுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று முனிவர் நினைத்திருந்த சமயத்தில், ஸ்ரீமன்நாராயணன் ஐந்துரு கொண்டு இத்தலம் வந்தடைந்தார். (ஐந்துரு – சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன், சாம்பன், வாசுதேவன் என பஞ்சவியூகத் தோற்றம்)

அப்போது கருடாழ்வார், ஸ்ரீமன்நாராயணனிடம், தாயார் இத்தலத்தில் வஞ்சுளவல்லியாக மேதாவி முனிவர் மகளாக வளர்வதைக் கூறினார். அதே கோலத்தில் முனிவரின் ஆசிரமம் சென்றார் திருமால். முனிவர் அளித்த விருந்தோம்பலுக்குப் பிறகு, கை கழுவும் இடத்துக்கு அருகில் தேவியை சந்தித்தார். திருமகளின் கரத்தை, திருமால் பிடித்ததும், அவர் அலறினார்.

மகள் அலறும் சத்தம் கேட்டு வந்த முனிவர், அங்கு திருமால் நிற்பதைக் காண்கிறார். முனிவரின் தவம் பலிப்பதற்காக, திருமகள் இத்தலத்தில் அவதரித்ததாகவும், தான் திருமகளை கரம் பிடிக்க வந்திருப்பதாகவும் தெரிவித்தார் ஸ்ரீமன்நாராயணன்.

இதைத் தொடர்ந்து, தனக்கு தரிசனம் கொடுத்ததுபோல், திருநறையூரில் உள்ள அனைவருக்கும் திருமால் தரிசனம் கொடுக்க வேண்டும் என்றும், தன் மகள் பெயராலேயே திருநறையூர் அழைக்கப்பட வேண்டும் என்றும், இத்தலத்தில் வந்து திருமாலையும் நாச்சியாரையும் சேவிப்பவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் என்றும் திருமாலிடம், முனிவர், வேண்டுகோள் விடுத்தார்.

திருமாலும் அப்படியே ஆகட்டும் என்று அருள்பாலித்தார். திருமாலுக்கும் திருமகளுக்கும் திருமணம் நடந்தேறியது. திருமால் இங்கேயே ஸ்ரீநிவாசப் பெருமாளாக கோயில் கொண்டார். திருநறையூர் நாச்சியார் கோவில் ஆனது. முக்தி அளிக்கும் தலமாகவும் இத்தலம் விளங்குகிறது.

மேலும் திருமாலின் திருமணத்துக்கு உதவிய கருடாழ்வாருக்கு சிறப்பு இடம் அளிக்கப்பட்டுள்ளது. அவரே கல் கருடன்.

ஓம் நமோ நாராயணாய..

Related Stories

No stories found.