வைகாசி விசாகம்: திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

வைகாசி விசாகம்: திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
திருச்செந்தூர் படம்: என்.ராஜேஷ்

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால் திருச்செந்தூரே விழாக்கோலம் பூண்டுள்ளது.

காவடியுடன் பக்தர்கள்
காவடியுடன் பக்தர்கள் படம் என்.ராஜேஷ்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், இங்கு வைகாசி விசாகம் வெகுவிமரிசையாக நடக்கும். வைகாசி விசாக நாளில் முருகப்பெருமானை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வணங்கியதற்கான பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு காலை 1 மணிக்கே திருச்செந்தூர் கோயில் நடை திறக்கப்பட்டது.

தொடர்ந்து காலை 9 மணியளவில் மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தன. கரோனா வைரஸ் தொற்றின் தீவிரத்தால் கடந்த இரு ஆண்டுகளாக திருச்செந்தூர் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறவில்லை. நிகழாண்டில் இரு ஆண்டுகளுக்குப் பின்னர் வைகாசி விசாகத் திருவிழா நடப்பதால் நேற்று முதலே திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவியத் தொடங்கினர். காவடிக்குள் பாம்பு வைத்துக் கொண்டுவரும் சர்ப்ப காவடிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததால் அதைத் தவிர்த்து பல்வேறு வகையான காவடிகளையும் பக்தர்கள் எடுத்துவந்தனர். அலகு குத்தியும் பலர் நேர்த்திக்கடன் செலுத்தினர். எங்கு திரும்பினும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்னும் கோஷம் ஒலித்தது.

இன்று மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாபவிமோச்சனம் நிகழ்வு நடக்கிறது. பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருப்பதால் ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in