கொலுவுக்குக் காத்திருக்கும் மானாமதுரை பொம்மைகள்

கொலுவுக்குக் காத்திருக்கும் மானாமதுரை  பொம்மைகள்

மண்பாண்டப் பொருட்களுக்கு மகிமை பெற்றது மதுரைக்குப் பக்கத்தில் இருக்கும் மானாமதுரை. இங்கு தயாராகும் மண்பாண்டப் பொருட்களுக்கும், கலைநயமிக்க அலங்காரப் பொருட்களுக்கும் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

மானாமதுரையில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்ட தொழிலை நம்பி இருக்கின்றன. நவராத்திரி சீசன் வரப் போகிறது என்பதால், இந்தத் தொழிலாளர்கள் இப்போது கொலு பொம்மைகள் செய்வதில் ஏக பிஸியாக இருக்கிறார்கள்.

மானாமதுரையில் தயாராகும் கொலு பொம்மைகளும் உலக பிரசித்தம் தான். வழக்கம்போல இந்த ஆண்டும் சரஸ்வதி, மகாலெட்சுமி, ஐஸ்வர்ய லெட்சுமி, முருகன், விநாயகர், பள்ளிகொண்ட பெருமாள், திருப்பதி பிரம்மோற்சவ செட், பிரதோஷ மூர்த்திகள், அரசியல் தலைவர்கள், ஐயப்பன், குருவாயூரப்பன், சாய்பாபா, விஷ்ணு, சிவன், பார்வதி உள்ளிட்ட விதவிதமான கொலு பொம்மைகள் இங்கே வண்ணம் பூசி விற்பனைக்காக வரிசைகட்டி நிற்கின்றன.

செய்துமுடித்த பொம்மைகளை விற்பனைக்காக, மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். சிவகங்கை , மதுரை மாவட்டங்கள் மட்டுமல்லாது தொலைதூர மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து கொலு பொம்மைகளை வாங்கிச் செல்கிறார்கள். இதில் முன்கூட்டியே ஆர்டர் கொடுத்து வாங்கிச் செல்பவர்களும் உண்டு.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மானாமதுரை மண்பாண்டத் தொழிலாளர் ரமேஷ், “வழக்கமான மண்பாண்டப் பொருட்களைத் தயாரிக்கும்போதே கிடைக்கும் ஓய்வு நேரங்களில் கொலு பொம்மைகளையும் தயாரித்து விடுவோம். நவராத்திரி விழா தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக பொம்மைகளை விற்பனைக்கு காட்சிப்படுத்துவோம். அப்படித்தான் இந்த ஆண்டும் வைத்திருக்கிறோம். அடுத்த மாதம் நவராத்திரி கொலு சீசன் தொடங்குகிறது. கரோனா குறைந்துவிட்டதால் இந்த வருசம் கொலு பொம்மைகளுக்கான சீசன் களைகட்டும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in