மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 20

மகா பெரியவா
மகா பெரியவாஓவியம்: A.P.ஸ்ரீதர்
Updated on
3 min read

பே ரும் புகழும் தேடி வர வேண்டும். நாமாக அதைத் தேடிச் செல்லக் கூடாது.

நம்மைத் தேடி வருகிற பேரும் புகழும்தான் பலராலும் போற்றப்படும். என்றென்றும் நிலைத்து நிற்கும்.

‘நான் நல்ல காரியம் செய்து கொண்டிருக்கிறேன்... என்னை மாதிரி ஒரு சமூக சேவகர் உண்டா?’ என்று ஒருவர் தம்பட்டம் அடித்துக் கொள்வதை விட,அவரைச் சுற்றி இருக்கின்றவர்கள் ‘அவர் எப்பேர்ப்பட்ட நல்ல நல்ல காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?’ என்று பலரிடமும் புருவம் உயர்த்திப் பெருமை பொங்கச் சொல்ல வேண்டும்.

‘தற்பெருமை’ - இதுதான் மனிதர்களைப் பெருமளவில் பிடித்து ஆட்டி வைக்கக்கூடிய வியாதியாக இன்றைக்கு இருந்து வருகிறது.

மகா பெரியவா திருச்சந்நிதிக்குத் தற்போது வந்திருக்கிற தனவந்தருக்கும் இதே வியாதி.

குரு தரிசனம் என்பது, நம்மிடம் இருக்கின்ற குறைகளையும் தோஷங்களையும் போக்கக் கூடியது.

தன்னை நாடி வந்திருக்கிற இந்தத் தனவந்தருக்கு இருக்கிற ‘தற்பெருமை’என்கிற குறையை அகற்றத் தீர்மானித்தார் மகான்.

குழந்தை எத்தனை தவறு செய்தாலும் தண்டிக்காமல், அதைத் திருத்த நினைக்கும் குணம் தாயாருக்கு உண்டு. இங்கே நாமெல்லாம் குழந்தைகள்.

கலியுக தெய்வமான மகா பெரியவா, தாய் ஸ்தானத்தில் இருக்கிறவர்.

தீர்க்கமான பார்வையுடன் தனவந்தரைப் பார்த்தார் மாமுனிவர்.

தனவந்தர் பவ்யமான குரலில், அதே நேரம் பெருமை பொங்க, ‘நான் என்னோட ஊர்ல சகஸ்ரபோஜனம் செய்து வைத்தேன். லட்ச தீபம் ஏற்றி வைத்தேன்...’ என்றார்.

ஒருவர் தான் செய்த தர்ம காரியங்கள் பற்றிப் பிறரிடம் தம்பட்டம் அடித்துக் கொண்டால், அதனால் கிடைக்க வேண்டிய ஓரளவு புண்ணிய பலனும் கிடைக்காமல் போய்விடும். இது சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

‘அதற்காக தான தர்மம் செய்த இது போன்ற விஷயத்தை வேறு எவரிடமும் சொல்லவே கூடாதா? பிறரிடம் சொன்னாலே அது தற்பெருமை ஆகிவிடுமா?’என்று தோன்றுகிறது அல்லவா?

தாராளமாகச் சொல்லலாம். எத்தனை பேரிடம் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், சொல்கிற முறை என்று ஒன்று இருக்கிறது.

இதே விஷயத்தை பெரியவா திருச்சந்நிதியில் சொல்ல வேண்டிய முறையில் தன்மையாக, அகந்தையோ, தற்பெருமையோ இல்லாமல் பவ்யமாகத் தெரிவித்தால், மகானே மனமுவந்து பாராட்டி அவரது தொண்டு பற்றி சிலாகித்துப் பேசுவார்.

ஆனால், இங்கே வேறுவிதமாக இருக்கிறதே! தான் செய்த சகஸ்ரபோஜனத் தினாலும், லட்ச தீபத்தினாலும் தனவந்தருக்கு அகந்தை அல்லவா அளவுக்கு அதிகமாகக் கூடிவிட்டது.

‘ஒரு மனுஷன் அகந்தையால் தன்னை இழந்துவிடக் கூடாது... எத்தனையோ நல்ல காரியம் செய்கிறவர் ஏன் அகந்தையினால் அழிய வேண்டும்?’ என்று தனவந்தர் மீதும் கரிசனம் கொண்டார் காஞ்சி முனிவர். அவரை ஏற இறங்கப் பார்த்தார்.

அகம்பாவத்தின் சொரூபமாக நின்றிருந்த தனவந்தரிடம் ரொம்பவும் சாந்தமான குரலில் மகா பெரியவா ஆரம்பித்தார்.

‘‘இங்கேயும் ஒரு பாட்டி இருக்கா. பெரிய பரோபகாரி. அவ என்னென்ன கார்யம் செஞ்சிருக்கா, தெரியுமோ? லட்சபோஜனம் செஞ்சிருக்கா (லட்சபோஜனம் என்பதை சற்றே அழுத்தமாகச் சொன்னார்)... பல லட்சம் தீபம் போட்டிருக்கா... ஒரு லட்சமெல்லாம் இல்லை’’ என்றார்.

பெரியவா சொன்ன வார்த்தைகளைக் கேட்டு இதயத்தில் சுருக்கென்று முள் தைத்தது போல் தடுமாறினார் தனவந்தர்.

‘நாம் செய்த ஒரு நல்ல கார்யத்தைப் பற்றி மகானிடம் தெரிவித்தால், அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் யாரோ ஒரு பாட்டியைப் பற்றிப் புகழ்ந்து பேசுகிறாரே... அப்படி என்றால் அந்தப் பாட்டி தன்னை விட பெரிய பணக்காரியோ... கோடீஸ்வரியோ... சொத்துபத்து தன்னை விட பல மடங்கு சேர்த்து வைத்திருப்பாளோ...’ என்றெல்லாம் தனவந்தருக்குள் பல கேள்விகள் அடுத்தடுத்து ஓடிக் கொண்டிருந்தன.

எதிரே நிற்பவரின் முகத்தை மட்டுமல்ல... மனதையும் படிக்கக் கூடியவர் அல்லவா காஞ்சி மகான்?!

‘‘என்ன, அந்தப் பாட்டி யாருன்னு ஒனக்குத் தெரியணுமா?’’ மகான் கேட்டார்.

‘ஆமாம் ஆமாம்’ என்பதுபோல் தலையை மேலும் கீழும் அசைத்தார் தனவந்தர்.

‘‘அந்தப் பாட்டியை இங்கே வரச் சொல்றேன். நேர்லயே பார்த்துடலாம்’’என்ற மகா பெரியவா, அருகில் இருந்த சிஷ்யரை அழைத்தார். ‘‘உடனே போய் பாட்டியை நான் கூப்டேன்னு கூட்டிண்டு வா’’ என்று அனுப்பினார்.

அடுத்த பத்து நிமிடத்துக்குள் பாட்டி, மடத்தில் ஆஜரானார். மகானே தன்னை அழைத்திருக்கிறாரே என்று நெகிழ்ந்துபோய் கண்கள் பனிக்க நமஸ்காரம் செய்தார்.

எதற்காக மகான் தன்னை அழைத்திருக் கிறார் என்பதைத் தெரிந்து கொள்வதில் பாட்டிக்கு ஆர்வம். ஒருவேளை அடுத்து ஏதேனும் ஒரு பணியைக் கொடுக்கப் போகிறாரோ என்று ஒரு உள்ளூர சந்தோஷம்!

தன் எதிரில் நிற்கக்கூடிய தனவந்தரைப் பார்த்தார் மகா பெரியவா.‘‘சகஸ்ரபோஜனம் பண்ணின பாட்டியை, பல லட்ச தீபம் ஏத்தின பாட்டியைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டியே... அந்தப் பாட்டி இவதான்... நன்னா பாத்துக்கோ’’ என்றார்.

கிழிந்த புடவை அணிந்து காணப்பட்ட பாட்டியின் முகத்திலும் தோற்றத்திலும் தென்படக் கூடிய வறுமையைப் பார்த்தார் தனவந்தர். ஒரு விநாடியில் அவருக்கு இருந்த அகந்தையும், செருக்கும் பொடிப்பொடியாய் நொறுங்கின.

‘‘பார்த்தியா இந்தப் பாட்டியை..! இவதான் நீ உங்க ஊர்ல பண்ண புண்ணிய காரியத்தை இங்கே பண்ணி இருக்கா...’’ என்ற மகா பெரியவா தொடர்ந்து சொன்னார்:

‘‘பகவான் எல்லா ஜீவன்களிடமும் வாசம் செய்கிறார். பிரம்மாவில் ஆரம்பித்து எறும்பு வரைக்கும் இருக்கிற ஜீவன்களிடம் பகவான் வாசம் பண்றார்.

நீ சகஸ்ரபோஜனம் பண்ணதா சொன்னே. அதாவது ஆயிரம் பேருக்கு. ஆனா,இந்தப் பாட்டி பல லட்சம் ஜீவன்களுக்கு.. அதாவது காஞ்சிபுரத்துல இருக்கிற எறும்புகளுக்கு ஆகாரம் போட்டிருக்கா.

லட்ச தீபம் போட்டேன்னு சொன்னே... ஏதோ ஒரே ஒரு கோயில்ல லட்ச தீபம் ஏத்தறதுக்கு நீ எண்ணெய், திரி வாங்கிக் கொடுத்திருப்பே... அந்த லட்ச தீபத்தையும் உன்னால ஏத்தி இருக்க முடியாது. ஆனா, இந்தப் பாட்டி காஞ்சிபுரத்துல இருக்கிற பல கோயில்களுக்குப் போய் தன் கைப்பட தீபம் போட்டிருக்கா. இப்படி ஒரு லட்சம் இல்லை... பல கோயில்களுக்கு தினமும் நடையாய் நடந்து பல லட்சம் தீபம் ஏத்தி இருக்கா... இப்ப தெரியறதா, இந்தப் பாட்டி எப்பேர்ப்பட்டவள்னு... பிறருக்கு போஜனம் போடறதுக்கும்,கோயில்ல தீபம் ஏத்தறதுக்கும் தனவந்தரா இருக்கணும்கிற அவசியம் இல்லை... பகவானோட கருணை வேண்டும்... மனசுல எளிமை குடி கொண்டிருக்கணும்.’’

மிக நீளமாக மகா பெரியவா சொல்லி முடித்தபோது, எல்லாம் அடங்கி,அனைத்தும் ஒடுங்கி கூனிக் குறுகி நின்றிருந்தார் தனவந்தர்.

தன் தவறை உணர்ந்து கொண்டவராக தலைகுனிந்து காணப்பட்டவரின் கண்களில் ஜலம் திரண்டது.

தனவந்தரை அருகே அழைத்து அமரச் சொன்னார் பெரியவா.

குற்றத்தை உணர்ந்த பின் தாய் மன்னித்து அருள்வாள் அல்லவா? அதுபோல் அவரிடம் பல விஷயங்களைப் பேசிவிட்டு, ‘‘க்ஷேமமா இரு’’ என்று ஆசிர்வதித்து பிரசாதங்கள் தந்து அனுப்பினார் தாயாக விளங்கும் தவசிரேஷ்டர்.

மடத்தினுள் நுழையும்போது இருந்த அகந்தையும் செருக்கும் முற்றிலும் அகலப் பெற்று, பண்பும் அடக்கமும் உள்ள புதிய மனிதராக தனவந்தர் தன் ஊருக்குத் திரும்பினார்.

(ஆனந்தம் தொடரும்)

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

மகா பெரியவா
மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 19

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in