மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 18

மகா பெரியவா
மகா பெரியவாஓவியம்: A.P.ஸ்ரீதர்

அன்றைய தினம் காஞ்சி மடத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமில்லை.

நித்தமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் மகா பெரியவா தரிசனத்துக்கு வந்து செல்லும் அந்த மூதாட்டி அன்றைய தினமும் வந்திருந்தார்.

மடத்தின் ஒரு மூலையில் நின்றுகொண்டு மகா பெரியவாளைத் தரிசித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் மூதாட்டியைத் தன் அருகே வருமாறு சைகை செய்தார் காஞ்சி மகான்.

பெரியவா தன்னைத்தான் அழைக்கிறார் என்பது தெரிந்ததும்,விறுவிறுவென்று நடையை எட்டப் போட்டு திருச்சந்நிதியை நெருங்கினார். மகானுக்கு நமஸ்காரம் செய்தார்.

‘‘கோலம் போடறது, விளக்கு ஏத்தி வைக்கறது எல்லாம் தொடர்ந்து பண்ணிண்டு இருக்கியா?’’ மூதாட்டியைப் பார்த்துக் கைகளை அசைத்தவாறு அன்புடனும் உரிமையுடனும் கேட்டார் காஞ்சி ஸ்வாமிகள்.

‘‘பெரியவா அனுக்ரஹத்தோட பண்ணிண்டு இருக்கேன்...’’

‘‘உனக்கு ஒரு வேலை தரப் போறேன்... செய்யறியா?’’

மூதாட்டிக்கு ஒரு புது ‘அசைன் மென்ட்’ கொடுப்பதற்காகத்தான் இங்கே அருகே அழைத்துள்ளார் மகான்.

‘‘பெரியவா சொன்னா, எந்த வேலைன்னாலும் செய்யத் தயாரா இருக்கேன். சொல்லுங்கோ’’ என்ற மூதாட்டி கண்களில் ஆர்வத்துடன் பரப்பிரம்ம சொரூபத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

‘‘அதோ.. அந்த மூலைல பாத்தியா, ஒரு சின்ன மூட்டை... அது அரிசிக் குருணை... அதுக்குப் பக்கத்துல பாத்தியா, இன்னொரு ஒரு பெரிய பை... அதுல வெல்லம் இருக்கு. என்னை தரிசனம் பண்ண வந்த பக்தன் ஒருத்தன், இதையெல்லாம் குடுத்துட்டுப் போனான்... இது ரெண்டையும் கலந்து உபயோகமா விநியோகம் பண்ணணும்... அதுக்கு சரியான ஆள் நீதான்’’என்று சொன்னார் மகான்.

‘குருணை அரிசி’ என்பது உடைக்கப்பட்ட அரிசி. ‘நொய்’ என்றும் சொல்வார்கள். பெரும்பாலும் இது ‘கழிவு’ எனக் கருதப்பட்டு கால்நடைகளுக்குத் தீவனமாகக் கொடுப்பது வழக்கம்.

தவிர, பொது இடங்களில் கஞ்சி காய்ச்சுவதற்கும், உப்புமா தயார் செய்தவதற்கும் சிலர் குருணையைப் பயன்படுத்துவார்கள்.

இத்தகைய குருணை அரிசியைத்தான் ஒரு சிறு மூட்டையில் கட்டிக்கொண்டு வந்து பெரியவாளிடம் சேர்த்திருக்கிறார் ஒரு பக்தர். கூடவே, வெல்லமும்!

கொண்டுவந்து கொடுத்த பக்தர் என்ன நினைத்துத் தந்தாரோ தெரியவில்லை... ஆனால், இதை எப்படிப் பயன்படுத்துவது என்று பெரியவா தீர்மானித்து விட்டார்.

இந்தக் குருணையையும் வெல்லத்தையும் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று மகா பெரியவா தனக்கு என்ன உத்தரவிடப் போகிறார் என்று அவரது திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் மூதாட்டி.

‘‘இதோ, இந்த மூட்டைலேர்ந்து தினமும் அரை ஆழாக்கு குருணையை எடுத்துக்கோ. அதுக்கு ஏத்தாப்ல கொஞ்சம் வெல்லத்தையும் எடுத்துக்கோ. காஞ்சிபுரம் தெருக்கள்ல நடந்தேன்னா, அங்கங்க எறும்புப் புத்துகள் இருப்பதைப் பாத்திருப்பே. உன் கண்ல படற எறும்புப் புத்துகள் எல்லாத்துலயும் கொஞ்சமா அப்படியே தூவிட்டு வா. அதுகளுக்கு ஆகாரமா இருக்கும்.’’ இதுதான் பெரியவாளின் உத்தரவு.

மூதாட்டி இரு கைகளையும் குவித்து நன்றி சொன்னார். ‘‘அப்படியே பண்றேன் பெரியவா...’’

‘‘சரி... பொறப்படு’’ என்று பிரசாதம் தந்து அனுப்பினார் மகான்.

அடுத்த நாள் காலை வேளையில் மூதாட்டி மடத்தில் உற்சாகமாக ஆஜராகி விட்டார். நித்தமும் மடத்தில் தான் செய்கிற கைங்கர்யங்களைப் பரபரவென்று முடித்தார். குருணையையும் வெல்லத்தையும் எடுத்துக் கொண்டார்.

மூதாட்டிக்குக் காஞ்சிபுரம் புதிதல்லவே! பல ஆண்டுகளாக இங்குதானே வசித்து வருகிறார். எனவே, முதல் நாளான இன்றைக்கு எந்தெந்தத் தெருக்களுக்குப் போகலாம் என்று யோசித்துத் தீர்மானித்தார்.

மடத்தை விட்டு வெளியே வந்து, தரையைப் பார்த்தபடி தேடலுடன் நடந்தார். எங்கெங்கெல்லாம் எறும்புகள் சாரை சாரையாக ஓடுகின்றனவோ, அதன் வழியிலேயே போய் புற்றையும் கண்டுபிடித்தார். அந்தப் புற்றின் முகப்பில் பெரியவா சொன்னது போல் குருணையையும், வெல்லத்தையும் கலந்து மென்மையாகத் தூவினார்.

அங்கிருந்து நடக்க ஆரம்பித்தார். அடுத்த புற்று. அங்கும் இதுபோல் குருணையையும் வெல்லத்தையும் பதமாகத் தூவினார். இப்படி தினமும் காலை எழுந்ததும், மூதாட்டி மடத்துக்குச் செல்வதும், அன்றைய பொழுதுக்குத் தேவையான குருணையையும் வெல்லத்தையும் எடுத்துக் கொள்வதும் தொடர்ந்தது. புற்றுகளைத் தேடித் தேடித் பயணப்பட்டுத் தூவுவது ஒருவிதத்தில் மூதாட்டிக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது என்றே சொல்ல வேண்டும்.

மாலை வேளைகளில் மடத்துக்கு மூதாட்டி வரும் போதெல்லாம், ‘‘என்ன... வேலை நடந்துண்டிருக்கா... குருணை குறைஞ்சாப்ல இருக்கே...’’ என்று மூட்டை வைக்கப்பட்டிருந்த மூலையைப் பார்த்து மகா பெரியவா உற்சாகமாகக் கேட்பார். ‘‘ஆமா பெரியவா...’’ என்று மூதாட்டியும் மனம் நெகிழ்வார்.

நாட்கள் ஓடின. குருணையும் வெல்லமும் மொத்தமுமாகத் தீர்ந்து போயிற்று.

மகா பெரியவா தனக்குக் கொடுத்த பணியை நல்ல விதத்தில் பூர்த்தி செய்து விட்டோம் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி மூதாட்டிக்கு.

அன்றைய தினம் மாலை வழக்கம்போல் மகானைத் தரிசிக்க வந்திருந்தார்.

ஒரு மூலையில் நின்று தரிசித்துக் கொண்டிருந்த மூதாட்டியை ஒரு சொடக்குப் போட்டு அழைத்தார் காஞ்சி ஸ்வாமிகள்.

மகா பெரியவா அழைத்தவுடன், எப்படித்தான் அப்படி ஒரு வேகம் வருமோ, தெரியவில்லை... கடகடவென்று ஓடி வந்தார் மூதாட்டி.

‘‘இப்ப இன்னொரு காரியம் இருக்கு. இதையும் நீயே பண்ணிடறியா?’’ என்று கேட்டார்.

மூதாட்டியின் முகத்தில் பிரகாசம். ‘இந்தக் கருணைக் கடலின் தரிசனம் கிடைக்காதா... கடைக்கண் பார்வை நம்மேல் திரும்பாதா என்று பலரும் காத்துக் கொண்டிருக்கிற நிலையில் நம்மை உரிமையுடன் அழைத்து உத்தரவிடுகிறாரே’ என்று நெகிழ்ந்து மீண்டும் நமஸ்காரம் செய்த மூதாட்டி சொன்னார்: ‘‘உங்க உத்தரவு பெரியவா... நான் காத்துண்டிருக்கேன்.’’

‘‘அதோ பாத்தியா... அங்கே ஒரு டின் நிறைய எண்ணெய் ஒருத்தர் கொண்டு வந்து குடுத்தார். பக்கத்துலயே பாரு, பெரிய மாலை போல் திரிநூல் இருக்கு. தெரியறதா?’’

‘‘ஆமா பெரியவா...’’

‘‘திரிநூலை விளக்குக்குப் போடறாப்ல சின்ன சின்னதா நறுக்கிக்கோ. கொஞ்சம் எண்ணெயும் எடுத்துக்கோ. தினமும் காஞ்சிபுரத்துல இருக்கிற ஒவ்வொரு கோயிலுக்கா போய் அங்கே இருக்கிற சந்நிதிகளுக்கு விளக்கு போடணும். ஒன்னால எத்தனை விளக்கு ஏத்தி வைக்க முடியுமோ, அத்தனை விளக்கு ஏத்தி வை. எண்ணெயும் ‘வேஸ்ட்’ ஆகக் கூடாது... திரிநூலும் வீணாகக் கூடாது. குருணையும் வெல்லமும் வீதியில போட்டே... இதைக் கோயிலுக்குள்ள கொண்டு போகப் போறே... ஒரு நாளைக்கு ரெண்டு மூணு கோயிலுக்குப் போய் விளக்கேத்தினாலே போதும். ஒன்னோட ஒடம்பும் இடம் கொடுக்கணும். ரொம்ப அலைஞ்சு உடம்பைக் கெடுத்துக்காத. பாத்துக்கோ’’ என்றார் பெரியவா.

கோயிலில் ஒரு தீபம் போட்டாலே அளவற்ற புண்ணியம். அதுவும் மகா பெரியவா சொல்லி, நித்தமும் கோயிலுக்குப் போய் அங்கே இருக்கிற சந்நிதிகளுக்குத் தீபம் ஏற்றுவதென்பது சாதாரணமாக கிடைக்கக்கூடிய பாக்கியமா? சாட்சாத் பரமேஸ்வரனே உத்தரவிட்டிருக்கிறாரே... மூதாட்டி மெய் சிலிர்த்துப் போனார்.

‘‘உத்தரவு பெரியவா... தினமும் விளக்கு ஏத்திடறேன்... உங்க கட்டளை’’என்று நமஸ்கரித்தார்.

மூதாட்டியைப் பார்த்துத் தன் வலக் கையை உயர்த்தி ஆசிர்வதித்தது அந்தக் கண்கண்ட தெய்வம்.

ஆயிற்று... அடுத்த நாள் துவங்கி, எண்ணெயும் திரியுமாக நித்தமும் வலம் வர ஆரம்பித்தார் மூதாட்டி.

காஞ்சிபுரத்தில் இருக்கிற சின்ன கோயிலில் ஆரம்பித்து மிகப் பெரிய கோயில் வரை எதையும் விடவில்லை.

எண்ணெயும் திரியும் அபரிமிதமாக இருக்கிறது. அன்றைய தினத்துக்கு எத்தனை கோயிலுக்குப் போகிறோம், அங்கே எத்தனை சந்நிதிகள் இருக்கின்றன என்பதற்கு ஏற்றாற்போல் எடுத்துச் செல்ல ஆரம்பித்தார் மூதாட்டி.

ஒவ்வொரு கோயிலில் இருக்கிற சந்நிதிகளில் தீபம் ஏற்றுகின்றபோது மூதாட்டியின் கண்கள் அவரையும் அறியாமல் பனிக்க ஆரம்பிக்கும். இது மகா பெரியவா நமக்கு அளித்த மிகப்பெரிய பேறு ஆயிற்றே என்று உளம் கசிந்தார்.

நாட்கள் ஓடின. எண்ணெய் டின் காலி ஆயிற்று. திரிநூல் மாலையும் கரைந்து போயிற்று.

கிட்டத்தட்ட காஞ்சிபுரத்தில் இருக்கிற பெரும்பாலான ஆலயங்களுக்குச் சென்று விளக்கேற்றி வைத்து விட்டார் மூதாட்டி. அப்படியே அங்குள்ள தெய்வத்தையும் தரிசித்து விட்டார்.

இத்தனை கோயில்களையும் ஒருவர் தேடிப் போய் சாதாரணமாகத் தரிசிக்க முடியாது. ஏதோ மகா பெரியவா கொடுத்த ஒரு உத்தரவால் மூதாட்டிக்குச் சாத்தியம் ஆயிற்று.

எறும்புகளுக்கு குருணையும் வெல்லமும் போட்டதும், கோயில்களுக்குப் போய் விளக்கேற்றியதும் மூதாட்டிக்கு ஒரு புதுத் தெம்பைக் கொடுத்திருந்தது. மனதளவில் மிகுந்த உற்சாகம் அடையப் பெற்றிருந்தார்.

‘எண்ணெயையும் திரியையும் பயன்படுத்தி காஞ்சிபுரத்தில் இருக்கிற பெரும்பாலான ஆலயங்களில் விளக்கேற்றி வைத்து விட்டேன்’ என்கிற தகவலைச் சொல்வதற்கு அன்றைய தினம் மாலை மடம் சென்றார் மூதாட்டி.

முக்காலமும் உணர்ந்த மகா பெரியவாளும் தன் ஆசனத்தில் வீற்றிருந்தார்.

(ஆனந்தம் தொடரும்)

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

மகா பெரியவா
மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 17

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in