மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 16

மகா பெரியவா
மகா பெரியவா ஓவியம்: A.P.ஸ்ரீதர்

 வயதாகிவிட்டால் தங்களால் இனி எதையும் செய்ய முடியாது என்று பெரும்பாலோர் தீர்மானித்து, ஒதுங்கி விடுகிறார்கள். இன்னும் சிலரோ,‘மேலும் பணத்தைப் பெருக்குவோம்’ என்று ஓய்வுக்குப் பின்னும் ஒரு கவுரவமான உத்தியோகத்தைத் தேடுகிறார்கள்.

‘உத்தியோகத்தில் இருந்தது போதும்... ரிடையர்டு ஆகிவிட்டோம். இனி உட்கார்ந்து ஓய்வுதான்’ என்கிற நிலையில் இருக்கின்றவர்களைப் பற்றிப் பார்ப்போம்.

ஒரு ஈஸிசேரோ, கட்டிலோ, அருகில் இருக்கிற பார்க் பெஞ்ச்சோ, வாசல் திண்ணையோ.. இப்படி ஏதேனும் ஒன்றுதான் பெரும்பான்மையான நேரங்களில் இவர்களின் இருப்பிடம் ஆகிவிடுகிறது. அதைத் தாண்டி அவர்களின் யோசனை செயல்பட மறுக்கிறது.

ஆனால், உண்மை அப்படி இல்லை.

வயதானவர்கள் தங்களைத் தாங்களே இப்படிக் குறைவாக  மதிப்பிட்டுக் கொண்டு ஒதுங்கி விடுவது, அவர்களை மேலும் பலவீனப்படுத்திவிடும்.

ஓய்வு பெற்ற பின்தான் நமக்கான வாழ்க்கை துவங்குகிறது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அலுவலகம் சம்பந்தப்பட்ட பிற தொடர்புகளில் இருந்து முற்றிலும் விடுவித்துக்கொண்டு, உங்கள் குடும்பத்துக்காக வாழுங்கள்... அது நற்பெயரை ஏற்படுத்தித் தரும்.

அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்... அது அவர்களது வாழ்த்துகளைப் பெற்றுத் தரும்.

நல்ல எண்ணங்களை, சிந்தனைகளை மற்றவர்களின் மனதில் விதையுங்கள். அது புண்ணியத்தைப் பெற்றுத் தரும்.

முதியவர்கள் மீது மகா பெரியவாளுக்கு எப்போதுமே ஓர் அன்பு உண்டு. அதிலும், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மீது கேட்கவே வேண்டாம். அவர்கள் எப்போதும் தங்களை ‘பிஸி’யாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று பெரியவா வலியுறுத்துவார்.

மகா பெரியவா காலத்திலேயே ‘ஓல்டு ஏஜ் ஹோம்’ ஆங்காங்கே மெள்ள மெள்ள முளைக்கத் துவங்கி விட்டது. தள்ளாத வயதில் தடுமாறும் முதியோர்களைத் தவிக்கவிடும் வாரிசுகளைச் சாடி இருக்கிறார் மகான்.

ஓய்வு பெற்றவர்கள் , தங்கள் கடைசிக் காலத்தில் உற்சாகமாக வாழ்வதற்கு மகா பெரியவா சொல்கிற உபதேச வார்த்தைகளைக் கேட்போமா...

‘‘நீங்கள் உங்களைப் பட்டுப்போன மரம் என்று நினைக்க வேண்டாம்.‘நாங்கள் ‘ரிடையர்டு’ ஆன கிழங்களாச்சே... தொழிலை விட்டு வெளியே வந்தவர்கள் ஆச்சே... எங்களால் மற்றவர்களுக்கு என்ன உதவி பண்ண முடியும்?’ என்று அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்கத் தோன்றுகிறதா?

ஆனால், உங்களால்தான் இந்தச் சமூகத்துக்கு அதிகம் செய்ய முடியும். உங்களிடம்தான் நான் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த தேசத்தையே தேவலோகமாக்கக் கூடிய கல்பக விருட்சங்கள் நீங்கள்தான் என்று  நான் நினைக்கிறேன். ஆனால், நீங்கள் அதற்கு மனம் வைக்க வேண்டும்.

தெய்வ பலத்தைத் தனக்காக இல்லாமல், உலகத்துக்காக முன்னிலைப்படுத்திச் செய்தீர்கள் என்றால், இந்த வயோதிக காலத்திலும் உங்களிடம் இருக்கிற பலஹீனம் அகன்றுவிடும். சற்றும் அசராமல், இளைஞர்களை விட உத்ஸாகமாகச் செயலாற்ற முடியும். இதைக் கிழவனான நானே சொல்கிறேன் (மகா பெரியவா தன்னையே ‘கிழவன்’ என்று சொல்கிறார். தான் சொன்னபடி அவர் வாழ்ந்த காரணத்தினால்தான், கடைசிக் காலத்திலும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க முடிந்தது. தான் சொன்ன உபதேசங்களுக்குத் தானே இலக்கணமாக வாழ்ந்தவர் காஞ்சி மகான்).

மற்றவர்கள் ‘ஆபீஸ்’ காரியம் போக மிஞ்சிய கொஞ்சம் பொழுதில்தான் பொதுத்தொண்டு பண்ண முடியும். ஆனால்,  ‘ரிடையர்டு’ ஆன நீங்களோ முழு நேரமும் ‘ஸோஷியல் சர்வீஸ்’ பண்ணுகிற பாக்கியம் பெற்றிருக்கிறீர்கள்.’’

குடும்பத்தில் இருக்கிற பற்றையே மெள்ள மெள்ளக் குறைத்துக்கொள்ளுங்கள் என்கிறார் மாமுனிவர்.

அவர் சொல்வதைத் தொடர்ந்து பார்ப்போம்...

‘‘ஆபீஸ் போய் வந்த காலத்தில் உங்களுக்குக் குடும்பப் பொறுப்பும் அதிகம் இருந்தது. இப்போது அவற்றைக் கூடிய வரையில் குறைத்துக்கொள்ள வேண்டும். ‘ரிடையர்டு’ ஆகிற வயசில் ஒருத்தனுக்கு மிகப்பெரிய பொறுப்பு என்று கருதப்படுகிற பிள்ளைகளின் படிப்பு, பெண்ணின் திருமணம் போன்ற காரியங்கள் எல்லாம் அநேகமாக முடிந்திருக்கும். ஆனால், அதற்கப்புறமும் பேரன் படிப்பு, பேத்தி கல்யாணம் என்றெல்லாம் ஒவ்வொன்றாக இழுத்துப் போட்டுக்கொண்டே இருந்தால் இத்தகைய காரியங்களுக்கு ஒரு முடிவே இருக்காது.

‘ரிடையர்டு’ ஆனவர்களும் குடும்பத்தைப் பற்றியே நினைத்துக் கவலைப்பட்டு அழுதுகொண்டிருந்தால், மற்றவர்களும் இதையே நினைத்துக்கொண்டு ஏனோதானோ என்று இருந்து விடுவார்கள். எனவே, ஓரளவு வயசான பிற்பாடாவது இதில் இருந்து விடுபட வேண்டும்.

விவேக வைராக்யாதிகளைப் பழக வேண்டாமா? கொஞ்சமாவது சாஸ்திரமும் தர்மமும் சொல்கிறபடி வாழ முற்பட வேண்டாமா?

எனவே, வீட்டுப் பொறுப்புகளை அடுத்த தலைமுறைக்கு விட்டுவிட்டுத் தங்கள் தங்கள் ஆத்மாவைக் கவனித்துக் கொள்ள வேண்டிய காலம் இது.

உத்தியோக காலம் முடிந்தபின் சொந்த ‘பிசினஸ்’ பண்ணலாமா, ‘ஃபாக்டரி’வைக்கலாமா, ‘ஃபார்ம்’ வைக்க லாமா, ‘எக்ஸ்டென்ஷன்’ கிடைக்க ‘டிரை’பண்ணலாமா என்று தவித்துக்கொண்டிருக்காமல் தன்னைக் கடைத் தேற்றிக் கொள்வதற்கான வழிகளைத் தேட வேண்டும்.’’

மகா பெரியவா என்றோ சொன்ன வார்த்தைகளை இன்றைக்குப் பொருத்திப் பார்த்தாலும், அந்த மகான் சொன்னவை எப்பேர்பட்ட நிதர்சனம் என்பது புரியும்.

அலுவலகப் பணியில் இருந்து நிரந்தர ஓய்வு பெற்று இருப்பவர்கள் பலரும் அடுத்து ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்திக்கிறார்கள். ஏதேனும் ஒரு‘பார்ட் டைம் ஜாப்’, ‘கன்சல்டன்சி’ என்று இன்னும் பொருள் தேடலிலேயே இருக்கிறார்கள். இதற்குப் பெரும்பாலானவர்கள் சொல்லக்கூடிய ஒரு காரணம் என்ன தெரியுமா?

‘ரிடையர்டு ஆனபின், என்னால் வீட்டுல சும்மா உக்காந்திருக்கப் பிடிக்கலை. ரொம்ப ‘போர்’ அடிக்குது.’

இவர்களை மனதில் வைத்துத்தான் மகா பெரியவா அன்றைக்கே சொல்லியிருக்கிறார்.

எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும். குடும்பத்தில் பேரன், பேத்தி கல்யாணம், உத்தி யோகம் தொடர்பானவை என்பதில் ஆர்வம் இருக்க வேண்டுமே தவிர, அதுவே பிரதானம் என்று நினைத்து இருந்துவிடக் கூடாது.

‘செட்டில்மென்ட்’ ஆகக் கிடைத்த பணத் தைக் கொண்டு சிலர் ‘பிசினஸ்’ஆரம்பிப்பார் கள். அதுவும் ஆபத்து.

பணம் சம்பாதிப்பதற்கென்று உத்தியோகஸ்தர்களுக்கு பகவான் குறிப்பிட்ட காலத்தை மட்டுமே தந்திருக்கிறான். அந்தக் காலத்தைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எனவே, பெரியவா சொன்னது போல் ‘ரிடையர்டு’ ஆன பின் தொழில் துவங்கலாம், அடுத்து ஒரு வேலையைத் தேடலாம், போகலாம் என்கிற கணக்கில் இருக்கக் கூடாது.

இதுவரை செய்யாத பரோபகாரத்தை இந்த வயதுக்கு மேல் (ஓய்வு பெற்ற பின்) செய்ய வேண்டும்.

இதுவரை மற்றவர்களுக்கு உதவாத ஒரு குணத்தை இந்த வயதுக்கு மேல் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அவரவர்களுக்கு உண்டான தெய்வ வழிபாட்டில் அதிக நேரத்தைத் செலவிட வேண்டும்.

இதைத்தான் காஞ்சி மகான் தன் திருவாயால் மலர்கிறார்:

‘என்னென்ன வழிகளில் புண்ணியத்தைப் பெருக்க முடியுமோ அதற்குண்டான வழிகளைத் தேட வேண்டும். தனக்கு, தனக்கு என்று இதுவரை வாழ்ந்து வந்த வாழ்க்கையை, இனி மற்றவர்களுக்கு என்று மாற்றிக் கொள்ள வேண்டும்.

இதுவரை செய்திராத அனுஷ்டானங்களை, தெய்வ வழிபாடுகளை இப்போதாவது செய்ய ஆரம்பிக்க வேண்டும்.’

உத்தியோகத்தில் இருக்கின்ற காலத்தில் அடிக்கடி ஆலயம் செல்லக்கூடிய பேறு பெரும்பாலும் பலருக்கு அமைவதில்லை.

அமைவதில்லை என்றால், அமைத்துக்கொள்ள முற்படுவதில்லை. எனவே, ஓய்வுக்குப் பின்னாலாவது கோயில், குளம், சத் சங்கம் என்று எஞ்சிய காலத்தை இனிதாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

இதை இன்னும் எப்படியெல்லாம் செய்யலாம்?

லோக ஷேமத்தையே நோக்கமாகக் கொண்ட காஞ்சி முனிவர் மேலும் சொல்கிறார்...

(ஆனந்தம் தொடரும்)

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

மகா பெரியவா
மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 15

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in