மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 33

மகா பெரியவா
மகா பெரியவா ஓவியம்: A.P.ஸ்ரீதர்

பி. சுவாமிநாதன்

 வீ ட்டிலும் அலுவலகத்திலும் இருக்கின்ற மனிதர்களுக்கு தாகத்துக்கு நீர் வேண்டும் என்றால், அது இருக்கிற இடம் தேடிப் போய் எடுத்துக் குடிக்க முடியும்.

வெளியில் இருக்கிறோமா? பயணத்தில் இருக்கிறோமா? அக்கம்பக்கத்துக் கடைகளில் பணம் கொடுத்துத் தண்ணீர் பாட்டில் வாங்கிக் குடிக்க முடியும்.

தங்களுக்கு ஏற்படுகிற தாகத்தை மனிதர்களால் எப்படியேனும் தணித்துக் கொண்டுவிட முடியும்.

ஆனால், வாயில்லாப் பிராணிகளின் நிலையைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்...

அவற்றுக்குத் தாகம் ஏற்பட்டால் என்ன செய்யும்?

நீர்வரத்து இருக்கக்கூடிய குளம், ஏரி, ஓடை, வாய்க்கால் என்றால் தேடிச் சென்று தானே தண்ணீரைக் குடித்து விடும். எவருடைய உதவியும் அவற்றுக்குத் தேவையில்லை.

ஆனால், குளங்களையும், ஏரிகளையும் இன்ன பிற நீர்நிலைகளையும் நம் வசதிக்காக நாமே கபளீகரம் செய்து வரும் இந்தக் காலத்தில் தண்ணீரை அவை எங்கேதான் தேடிச் செல்லும்?

ஜலக் கஷ்டம் பரவலாக இருக்கிற இதுபோன்ற காலத்தில் அந்த வாயில்லாப் பிராணிகளின் நிலையை நினைத்துப் பாருங்கள்... அவற்றின் தாகத்தைப் போக்கு வதும் மனிதாபிமானம் கொண்ட நம் கடமை அல்லவா?

அந்தக் காலத்தில் கிராமங்களில் அவர வர்கள் வீட்டு வாசலில் ஒரு சிமென்ட் தொட்டியைக் கட்டி வைத்திருப்பார்கள். அதில் நித்தமும் நீர் நிரப்பி விடுவார்கள். அந்த வழியே செல்கிற கால்நடைகள் நீர் அருந்தி, தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்ளும்.
‘உன் வீட்டு மாட்டுக்கு என் வீட்டுத் தண்ணீர்த் தொட்டிதான் கிடைச்சுதா?’ என்கிற வம்புச் சண்டை கிடையாது. எவர் வீட்டு மாடும் எந்த வீட்டுத் தொட்டியிலும் நீர் அருந்தலாம். தொட்டியில் தண்ணீர் காலியா னதும், மீண்டும் அதிலே நிரப்பி வைப்பார்கள் (இன்றைக்கும் சிலர் அப்படிப் பராமரித்து வருகிறார்கள் என்பது பாராட்டுக்குரியது).

தண்ணீர் அருந்துவதற்காக தாகத்துடன் ஏங்கி வருகிற ஆடு மாடுகளை நம்மால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. தாகம் அதிகமாகி, தண்ணீரைத் தேடி அவை முரட்டுத்தனமாகச் செல்கிறபோது எதற்காக அவை இப்படிச் செல்கின்றன என்கிற காரணமும் புரியாது. விவரம் புரியாத வண்டி  ஓட்டிகள், சண்டித்தனம் செய்கிற மாட்டை அந்த வேளையில் அடித்துத் துன்புறுத்தவும் நேரிடலாம்.  
நமது அடிப்படை தேவை மறுக்கப்படுகிற போது மூக்குக்கு மேல் கோபம் வருகிற தல்லவா? எதிர்ப்பட்டவர்கள் எல்லோரையும் கண்மண் தெரியாமல் எதிர்த்துப் பேசுகி றோம் அல்லவா? அதுபோல்தானே அந்த ஜீவராசிகளும்.

தண்ணீருக்காக அலைகிற ஒரு மாட்டுக் குத் தண்ணீர் கொடுக்காமல், தண்ணீர் கிடைக்காமல் போனால், மாடு என்ன செய்யும்? இயலாமையும் ஏமாற்றமும் சேர்ந்து கோபத்தைக் குறைவில்லாமல் கொடுத்து விடும்.

மகா பெரியவா
மகா பெரியவா ஓவியம்: A.P.ஸ்ரீதர்

மாட்டுக்கோ, யானைக்கோ கோபம் வந்தால் அவ்வளவுதான். எதிரில் இருப்பவர் கள் யாராக இருந்தாலும் நாசம்.
ஒரு மாட்டுக்கு தாகம் வந்து, அது கோபத்துடன் அலைந்த நிகழ்வையும், மகா பெரியவா அருளால் இது எப்படி சுபமாகத் தீர்க்கப்பட்டது என்பதையும் பார்ப்போம்.

இன்றைக்குத்தான் கார், இன்ன பிற வாகனங்கள் என்று வசதியாக வாழ்ந்து வருகிறோம்.

அந்தக் காலத்தில் மகா பெரியவாளை ஒரு பக்தர் குடும்பம் தரிசிக்க வேண்டும் என்றால், அவர் தங்கி இருக்கிற முகாமுக்கு வண்டி கட்டிக் கொண்டு செல்ல வேண்டும். வசதி இருக்கின்ற பக்தர்கள் குடும்பத்தினர் வண்டிகளில் வந்து செல்வார்கள். வசதியே இல்லாதவர்கள் நடைராஜாதான். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை!

தன்னைத் தரிசிக்க வந்திருக்கிற பக்தர்களின் குடும்ப ஷேம லாபங்களை ரொம்பவும் கரிசனத்துடன் விசாரிப்பார் பெரியவா. ‘ஆகாரம் ஆகி விட்டதா?’ என்று ஒரு தாயின் பரிவோடு கேட்பார். ஆகவில்லை என்றால், முதலில் அவர்களுக்கு ஏதேனும் உணவு தயாரித்துக் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட சிப்பந்திகளுக்கு உத்தரவிடுவார்.

அதுவும் வெளியூர்களில் இருந்து நேராக மடத்தின் முகாமுக்கு வருகின்ற அன்பர்களுக்கு இந்த உபசரிப்பும் வரவேற்பும் நிச்சயம் உண்டு. முதலில் அவர்களின் வயிறு நிறைய வேண்டும். பிறகுதான் தரிசனம்; ஆசிர்வாதம்.

மனிதர்களை மட்டும்தான் மகா பெரியவா இப்படி அனுசரணை யோடு விசாரிக்கிறார் என்று நினைத்துவிடக்  கூடாது.
தன்னை தரிசிக்க வந்திருப்பவர் கள் எப்படிப் பயணித்து வந்திருக் கிறார்கள் என்று விசாரிப்பார். பஸ்ஸிலோ அல்லது ரயிலிலோ என்றால், விட்டுவிடுவார்.

ஒருவேளை மாட்டு வண்டிகளில் பயணித்து வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், உடனே அடுத்து என்ன சொல்வார் தெரியுமா?.. ‘‘அந்த வண்டிக்காரரை சாப்பிடச் சொல்லுங் கோ... அந்த வண்டியை ஓட்டிண்டு வந்த மாடுகளையும் நன்னா கவனிக்கச் சொல்லுங்கோ, பாவம் ரொம்ப தூரத்துலேர்ந்து வந்திருக்கு’’ எனக் குரலில் அன்பொழுகக் கூறுவார்.

மாடுகளின் மீது மகா பெரியவா ளுக்கு எந்த அளவுக்குக் கரிசனம், பாருங்கள்!

அந்தக் கருணை தெய்வம் சொல் கிற வார்த்தைகளைக் கேளுங்கள்... ‘‘வண்டி ஓட்டிண்டு வந்த அந்த மாட்டுக்கு மொதல்ல தண்ணி காட்டச் சொல்லுங்கோ. வண்டிலேர்ந்து சுதந்திரமா அவுத்து விடுங்கோ... நல்ல நிழல் இருக்கற மரத்தடியா பார்த்துக் கட்டிப் போடுங்கோ... அதுக்கு புல்லு, வைக்கோல் மாதிரி ஏதாவது தீனி போடுங்கோ...’’

வண்டியை ஓட்டிக் கொண்டு வந்த வண்டிக்காரரே இப்படி எல்லாம் அந்த மாட்டை உபசரிக்க வேண்டும் என்று ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் நினைத்திருப்பாரா, தெரியவில்லை.

காஞ்சி மடம் முகாமிட்டிருக்கிற இடத்துக்கு எந்த ஒரு மாட்டு வண்டி வந்தாலும் தனிப்பட்ட முறையில் வண்டிகளில் வந்தவர்களையும், வண்டி ஓட்டிகளையும் அழைத்து இப்படி அனுசரணையாகச் சொல் வது மகானின் வழக்கம்.
தனது எண்பதாவது வயதின் தொடக்கத்தில் மகா பெரியவா அக்கம்பக்கத்து மாநிலங்களின் வழியே ஒரு யாத்திரை போய்க் கொண்டிருந்தார்.

அன்றைய தினம் மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு கிராமம் வழியே சென்று கொண்டிருந்தார்.

யாத்திரையின்போது மாமுனிவர் மேனாவில் (பல்லக்கு) செல்வார்; அல்லது நடந்து செல்வார்; அல்லது தான் வழக்கமாக உபயோகிக்கும் ஒரு கூண்டு வண்டியின் பின்பு றத்தைப் பிடித்தவாறு நடந்து கொண்டிருப்பார். பெரும்பாலும் இவற்றில் ஒன்றுதான் வழக்கமாக இருக்கும். மோட்டார் வாகனத்தில் அவர் ஏறியதே இல்லை!

அந்த யாத்திரையின்போது கூண்டு வண்டியைப் பிடித்தவாறே  நடந்து கொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து கைங்கர்யம் செய்யும் சிப்பந்திகளும் ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர’ கோஷத்தைச் சொல்லிக் கொண்டே மகானுடன் நடந்து வந்தார்கள்.
உச்சி வெயில் ஏகத்துக்கும் கொளுத்திக் கொண்டிருந்தது. பொட்டல் கிராமப் பகுதி. வியர்வை யும் சோர்வும் ஒருசேர எல்லோரும் நடந்து கொண்டிருந் தார்கள்.

ஆனால், மகா பெரியவாளிடம் சோர்வு இல்லை.  நடமாடும் சங்கர சொரூபத்தைத் தரிசித்தவாறே உச்சி யில் பயணித்துக் கொண்டிருக்கும் தகிக்கிற சூரியன், அவருக்கு மட்டும் விதிவிலக்கு போலிருக்கிறது.

மற்றவர்கள் அனைவரும் ‘உஸ் ஸ்ஸ்..’ என்று வியர்வையுடன் பெருமூச்சு விடும்போது, மகான் மட்டும் ஏதோ ஜபித்துக் கொண்டே நடந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக எதிர் திசையில் ஒரு மாடு, வெறித் தனமாக ஓடி வந்தது.

வெறித்தனம் என்றால், அப்படி ஒரு வெறித்தனம். எதிரில் வருகிற வர் யார் என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் கண்மண் தெரியா மல் ஓடி வந்தது.

எங்கோ ஒரு தறியில் (கம்பு) கயிற்றால் கட்டப்பட்டிருக்க வேண் டும் போலிருக்கிறது. தறியையே பிய்த்துக் கொண்டு, கட்டப்பட் டிருந்த கயிற்றோடு சாலையில் புழுதியைக் கிளப்பியபடி ஓடி வந்தது.

ஆக்ரோஷத்தோடு மாடு ஓடி வரும் வேகத்தைப் பார்த்தவர்கள், ‘இதைக் கட்டுப்படுத்த நம்மால் ஆகாது’ என்று பாதுகாப்பாக ஒதுங்கிக் கொண்டார்கள். இந்த நிலையில் எவராலும் மாட்டை எதிர்கொள்ள முடியவில்லை.

மகா பெரியவா நடந்து சென்று கொண்டிருக்கும் சாலையின் எதிர்ப்பக்கத்தில் இருந்து இந்த மாடு தறிகெட்ட வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. விஷயத்தின் ஆபத்தை சிப்பந்திகள் உணர்ந்தார்கள். அவர்கள் அனைவரும் பதறிப் போனார்கள்.

எதிர் திசையில் பாய்ந்து வருகிற மாட்டுக்கு மகா பெரியவாளை அடையாளம் தெரியுமா? இவர் மகான் என்பது புரியுமா? இவருக்கு எந்த ஒரு ஹிம்சையையும் தரக் கூடாது என்று தெரியுமா?

கலவரப்பட்ட சிப்பந்திகள் என்ன செய்வது, ஏது செய்வது என்று குழம்பித் தவித்தார்கள்.

சினத்தோடு சீறிக் கொண்டு வரும் மாடு, மகா பெரியவாளுக்குப் பல அடிகள் தொலைவில் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. பக்தர்களும் சிப்பந்திகளும் பதறிய வண்ணம் காணப்பட்டார்கள்.

கருணையே வடிவான காஞ்சி முனிவரிடம் எந்தப் பதற்றமும் இல்லை!

(ஆனந்தம் தொடரும்)

சென்ற அத்தியாயத்தை வாசிக்க:

மகா பெரியவா
மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 32

Trending Stories...

No stories found.