மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 26

மகா பெரியவா
மகா பெரியவாஓவியம்: A.P.ஸ்ரீதர்

காஷ்மீரில் துவங்கி கன்னியாகுமரி வரை யாத்திரை வந்த சுவாமி விவேகானந்தர், குமரிக் கடற்கரையில் பெரும் எழுச்சி உரையாற்றினார்.

அந்த உரையில் அவர் சிலாகித்துச் சொன்ன ஒரு விஷயம் என்ன தெரியுமா?

‘‘பாரத தேசத்தின் ஒரு கோடியில் இருந்து இன்னொரு கோடி வரை யாத்திரை செய்திருக்கிறேன். எத்தனையோ கிராமங்களின் வழியே பயணப்பட்டேன். கல்விச்சாலை இல்லாத கிராமங்களைப் பார்த்தேன். மருத்துவ வசதி இல்லாத கிராமங்களையும் பார்த்தேன். ஆனால், கோயில்கள் இல்லாத கிராமத்தை நான் பார்க்கவே இல்லை.’’

விவேகானந்தர் சொன்னபடி பார்த்தால் ஆலயங்களுக்கும் ஆலய வழிபாட்டுக்கும் நம் முன்னோர்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பெருமைப்பட வேண்டும்.

இந்தக் கோயில்கள் இன்றோ நேற்றோ ஸ்தாபிக்கப்பட்டவை அல்ல. எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் மன்னர்களாலும் மகான்களாலும் உருவாக்கப்பட்டவை.

பாரத தேசம் என்பது ஆன்மிக பூமி. இந்த தேசத்தின் பல பகுதிகளில் கட்டுமானத்துக்காக அகழ்கிறபோது அங்கெல்லாம் நாட்பட்ட கடவுள் விக்கிரகங்களும் வழிபாடு தொடர்பான பொருட்களும் அவ்வப்போது கிடைத்து வருகின்றன என்பதே இதற்கு சாட்சி.
அந்நியர்களின் படையெடுப்பால் பாரத தேசம் பாழ்பட்டுப் போனதென்னவோ உண்மைதான். இதனால் நமது கலாசாரம், கல்வி, ஒற்றுமை, இயற்கை வளம், செல்வம் இப்படி ஏராளம் கொள்ளையடிக்கப்பட்டன; கொள்ளையடிக்க முடியாதவை குழிதோண்டிப் புதைக்கப்பட்டன. அவற்றுள், புராதனமான நம் ஆலயங்களும் அடங்கும். எத்தனை ஆலயங்கள் மண்ணோடு மண்ணாகப் போயிருக்கின்றன தெரியுமா?

ஆதி அத்தி வரதர் வரவால் அகிலமே கவனித்த ஆலயம், காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில்! நித்தமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்த இந்த அத்தி வரதர், அந்நியர்களின் படையெடுப்பு காலத்தின்போது அவர்களின் தாக்குதலுக்குப் பயந்து பல காலம் குளத்தில் மறைத்து வைக்கப்பட்டவர்.
ஸ்ரீரங்கம்  ஸ்ரீரங்கநாதர், மதுரை மீனாட்சி அம்மன், காசி விஸ்வநாதர் என்று அந்நியர்கள் படையெடுப்பின்போது பாதிக்கப்பட்ட ஆலயங்களின் பட்டியல் நீளமானது.

நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி மகா பெரியவா இப்படிக் காலத்தால் மறைக்கப்பட்ட  அழிந்து போன பல ஆலயங்களை நமக்குக் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறார் என்பது நாமெல்லாம் பெற்ற பேறு.
எத்தனையோ ஆண்டுகளாக பூமிக்குள் புதைந்து போன ஆலயங்களை எப்படி பெரியவாளால் கண்டுபிடிக்க முடிந்தது என்றால், அது முழுக்க முழுக்க ஞான திருஷ்டிதான்!

காஞ்சிபுரம் மாநகரில் மகா பெரியவாளால் வெளிக் கொணரப்பட்ட ஓர் ஆலயத்தின் கதையை இங்கே பார்க்கலாம்...
ஒருமுறை மகான், காஞ்சி ஸ்ரீமடத்தில் இருந்தார். அப்போது உள்ளூர் பக்தர்கள் சுமார் இருபது பேர் மகானுடன்  இருந்தனர். அவர்களைப் பார்த்து, ‘‘காஞ்சிபுரத்தை கோயில் நகரம்னு சொல்றோம். இங்கே எண்ணற்ற கோயில்கள் இருக்கு. பல கோயில்களுக்கு நீங்கல்லாம் போயிருப்பேள். ஆனால், இங்கே சிவா விஷ்ணு ஆலயம் ஒண்ணு இருந்தது. நீங்க யாராவது கேள்விப்பட்டிருக்கேளா? தரிசனம் பண்ணி இருக்கேளா?’’ என்று கேட்டார்.

உள்ளூர்வாசிகள் அனைவருக்கும் ஆச்சரியம். ஏனென்றால், காஞ்சியில் உள்ள பெரும்பாலான கோயில்களைத் தரிசித்தவர்கள்; அறிந்தவர்கள் அவர்கள். ஆனால், இப்போது மகா பெரியவா சொன்ன சிவா விஷ்ணு கோயிலைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்டதே இல்லை.

உள்ளூர்வாசிகளில் வயது முதிர்ந்த ஒருவர், ‘‘பெரியவா... காஞ்சிபுரத்துல சிவன் கோயில் இருக்கு. விஷ்ணு கோயில் இருக்கு. ஆனால், சிவா விஷ்ணு கோயில் இருந்ததா என்னோட அனுபவத்துல கேள்விப்பட்டதில்லை’’ என்றார்.
புன்னகைத்த மகா பெரியவா, ‘‘காஞ்சிபுரத்துல சிவா விஷ்ணு கோயில் உண்டு. இந்தக் கோயில் எங்கேயும் கண்காணாத இடத்துல இல்லை. இதோ,  நம்ம மடத்துக்குப் பக்கத்துல ஏகாம்பரேஸ்வரர் கோயில்கிட்ட இருந்தது.’’
உள்ளூர்வாசிகள் அனைவர் முகத்திலும் பிரமிப்பு. அடுத்து பெரியவாளே பேசட்டும் என்பது போல் அமைதி காத்தனர்.
மகான் மீண்டும் கேட்டார்: ‘‘தெரியுமா யாருக்காவது..?’’ 
எல்லோரும் ‘இல்லை’ என்பதுபோல் தலையை இடதும் வலதுமாக அசைத்தனர்.  

மகா பெரியவா
மகா பெரியவாஓவியம்: A.P.ஸ்ரீதர்

ஒரு சிப்பந்தியை அழைத்து, குறிப்பிட்ட சில ஆவணங் களைக் கொண்டு வரச் சொன்னார். ஒரு காலத்தில் ஏகாம் பரேஸ்வரர் ஆலயத்துக்கு அருகே சிவா விஷ்ணு கோயில் இருந்ததை மெய்ப்பிக்கும் ஆவணம் அது!
அதை வாங்கி ஒரு சில நிமிடங்கள் பார்த்த மகா பெரியவா, ‘‘இங்கே கோயில் இருந்ததுனு சொல்றதுக்கான ஆவணம் இதுதான். பார்த்துக்கோங்கோ’’ என்று அந்தப் பழைய காகிதங்களை அனைவரும் பார்க்கும்படி காண்பித்தார்.
பக்தர்கள் அதை முகம் கொள்ளா பிரமிப்புடன் பார்த் தார்கள். மகா பெரியவா ஒரு விஷயத்தைச் சொன்னால், அது தேவ வாக்கு ஆயிற்றே என்று கன்னத்தில் போட்டுக் கொண்டனர்.

‘‘சரி... நாளைக்குக் கார்த்தால நீங்கல்லாம் இங்கே வந்துடுங்கோ... நாம எல்லாரும் சேர்ந்து போய் அந்தக் கோயிலைப் பாக்கலாம்’’ என்றார்.
உற்சாகமாக விடைபெற்றார்கள் பக்தர்கள்.
அடுத்த நாள் காலை மகான் சொன்ன நேரத்தில் அதே உற்சாகத்தோடு கூடினர்.
பெரியவா தண்டம் சுமந்து தயாராக இருந்தார். அடுத்த இரண்டு நிமிடங்களில் அனைவரும் மடத்தை விட்டுப் புறப்பட்டனர்.
சிவா விஷ்ணு கோயில் ஒரு காலத்தில் இருந்ததைச் சொல்லும் ஆவணங்களுடன் சிப்பந்தி ஒருவர், மகானுடன் நடக்க ஆரம்பித்தார். ஸ்ரீமடத்துக் குறிப்புகள் எந்த இடத்தை அடையாளம் காண்பித்துச் சொன்னதோ, அங்கே போய் நின்றார்கள். 
‘மகா பெரியவா நமக்குக் கோயிலைக் காண்பிப்பார்’ என்று சுற்றும் முற்றும் திரும்பித் திரும்பிப் பார்த்த உள் ளூர்க்காரர்களுக்குத் திகைப்பு. காரணம், அங்கே கோயில் ஏதும் இல்லை. முழுக்க முழுக்க மனிதர்கள் வசிக்கக் கூடிய குடியிருப்புகள்தான் நெருக்கமாகக் காணப்பட்டது.

இதற்குள் மகான் வந்திருக்கிற விஷயம் மெள்ளப் பரவ... அந்தக் குறிப்பிட்ட தெருவில் வசிக்கின்ற அனை வரும் கூடி விட்டனர். தங்கள் குடியிருப்பு தேடி வந்த மகானை தெய்வமாகப் பார்த்து, கைகளைக் கூப்பினர். புழுதி நிரம்பிய வீதி என்றும் பார்க்காமல், அங்கு வசிக்கக் கூடிய பலரும் சாஷ்டாங்கமாக விழுந்து மகானை வணங்கினர். 

மகா பெரியவாளின் பார்வை அந்தத் தெருவை ஆராய்வதிலேயே இருந்தது. தன் பக்கத்தில் இருந்த உள்ளூர்க்காரர் ஒருவரை அழைத்து, ‘‘அதோ, ஒரு வீடு தெரியறதில்லியா... அந்த வீட்டோட சொந்தக்காரர் யாருன்னு விசாரிங்கோ’’ என்று வீட்டின் அடையாளங் களோடு உத்தரவிட்டார் ஸ்வாமிகள்.

அந்த இடத்தில் நிலவிய சிறிது நேர மவுனத்துக்குப் பிறகு, நடுத்தர வயதுக்காரர் ஒருவர் மகா பெரியவாளிடம் வந்தார். கைகளைக் கூப்பி வணங்கினார். ‘‘பெரியவா... அந்த வீடு என்னுதுதான்’’ என்றார்.

நடுத்தர வயதுக்காரரை ஏற இறங்கப் பார்த்தார் பெரியவா. பிறகு, ‘‘இந்த வீட்டை காஞ்சி மடத்துக்குத் தருகிறாயா’’ என்று நேரடியாகக் கேட்டு விட்டார்.

அந்த அன்பருக்கு அதிர்ச்சி. அவருக்குப் பெரியவா மீது பக்தி உண்டு என்றாலும், இதில் உடன்பாடில்லை. ‘‘பெரியவா... எனக்கு இன்னிக்கு இருக்கிற ஒரே சொத்து இந்த வீடுதான். வழி வழியா இது வந்திண்டிருக்கு. இந்த வீடுதான் எங்க குடும்பத்துக்கு சோறு போட்டுண்டிருக்கு...’’ என்று நீட்டி முழக்கி, தயக்கத்துடன் பேசினார்.
ஒட்டுமொத்தக் கூட்டமும் அந்த நடுத்தர வயதுக்காரரை வித்தியாசமாகப் பார்த்தது. ‘முற்றும் துறந்த இந்த சந்நியாசி யார்கிட்டயும் எதுவும் கேட்டதில்லை. அப்படியே அவர் கேட்டாலும் அது எத்தனை பெரிய பாக்கியம். இந்த மகான் நம்மகிட்ட எதுவும் கேக்க மாட்டாரா என்று தனவந்தர்கள் பலரும் காத்துக் கிடக்கிற காலத்துல இந்த மனுஷர் இப்படி இழுத்து இழுத்துப் பேசிக் கொண்டிருக்கிறாரே’ என்று கூட்டம் அவரை விரோதமாகவும் விநோதமாகவும் பார்த்தது.
ஆனால், பரப்பிரம்மமான மகானின் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை. தொடர்ந்து அவர் பேசிக் கொண்டிருந்ததை செவிமடுத்துக் கேட்டார்.

அங்கிருந்து கிளம்புகிற விதமாக ரெண்டு தப்படி பின்னால் வைத்தார் மகான். சிப்பந்தியும், உடன் வந்த உள்ளூர் பக்தர்களும் புறப்படுவதற்குத் தயாரானார்கள்.

இன்னமும் கைகளைக் குவித்த வண்ணம் காணப்பட்ட அந்த நடுத்தர வயதுக்காரரைப் பார்த்து மகா பெரியவா சொன்னார்: ‘‘பரவால்லை... ஷேமமா இரு... ஒன்ணும் பாதகம் இல்லை. ஆனா, எப்பவாவது இந்த வீட்டை விக்கணும்னு உனக்குத் தோணித்துன்னா, அப்ப மடத் துக்கு வா. எங்கிட்ட சொல்லு. வாங்கிக்கிறேன்.’’

தண்டம் சுமந்த அந்த சந்நியாசி ஒரு வீட்டை பேரம் பேசி விட்டுச் செல்வதை ஒட்டுமொத்த தெருவே அசையாமல் நின்று வேடிக்கை பார்த்தது.

காஞ்சி மடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார் மகான்!

(ஆனந்தம் தொடரும்)

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

மகா பெரியவா
மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 25

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in