மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 25

மகா பெரியவா
மகா பெரியவாஓவியம்: A.P.ஸ்ரீதர்

இந்து மத வழிபாட்டில் ஆலயங்கள் பிரதான இடம் வகிக்கின்றன.

வீட்டில் விசேஷமா? அதாவது பிறந்த நாள், திருமண நாள் போன்றவையா? முன்னதாக முன்னோர்களின் ஆசிகளைப் பெற்றுக் கொண்டு கோயில்களுக்குச் செல்கிறோம்.

கோயிலில் திருவிழாவா? அனைவரும் உற்சாகமாகப் புறப்பட்டுச் சென்று ஆலயத்தில் கூடுகிறோம்.
ஆலயங்கள் இந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுவதற்குக் காரணம், அங்கே இருக்கின்ற ‘பாஸிட்டிவ் வைப்ரேஷன்’ (நேர்மறை சக்தி). இதைத்தான் சாந்நித்தியம் என்று சொல்கிறோம். அதாவது அங்கே குடி கொண்டிருக்கிற இறைவனின் பரிபூர்ண அருளாற்றல் அனைவரும் உணரும்படி, அனுபவிக்கும்படி இருந்து வருகிறது.
உளப்பூர்வமாக தெய்வங்களை வணங்குகிறபோது, நம்மையும் அறியாமல் அந்த இறைத் திருமேனிகளிடம் நம்மைப் பறி கொடுக்கிறோம்.

கேட்பதற்குத் தயாராக இறைவன் கருவறையில் காத்துக் 
கொண்டிருக்கிறார் என்று அவரிடம் மனம் விட்டுப் பேசுகிறோம். 
குறைகளையோ பிரார்த்தனைகளையோ சொன்ன பிறகு, இறைவனின் திருமுகத்தைப் பார்த்து உருகுகிறோம். நம்மையும் அறியாமல் கண்ணீர் சொரிகிறோம்.
‘கல்லைப் பார்த்துப் பேசுகிறீர்களே? கண்ணீர் விடுகிறீர்களே?’ என்று சிலர் பரிகாசம் செய்யவும் செய்வார்கள்.
ஆனால், அது கல் அல்ல.
சிற்பி வடிப்பதற்கு முன் கல்லாக இருந்திருக்கலாம்.
விக்கிரகம் வடிக்கப்பட்ட பிறகு வேத பண்டிதர்களால் சக்தி ஏற்றப்பட்ட திருமேனி. மந்திரங்களாலும், ஜப, தபங்களாலும் நிறைக்கப்பட்ட திருமேனி.
நடமாடும் தெய்வமான மகா பெரியவா ஆலய வழிபாடுகள் பற்றியும், அங்கே குடி கொண்டிருக்கிற தெய்வத் திருமேனிகளின் சக்தி பற்றியும் நிறைய சொல்லி இருக்கிறார்.
மகான் சொன்னதில் ஒரு சில விஷயங்களை இங்கே 
பார்ப்போம்.
‘‘ரிஷிகள் தாங்கள் செய்த ஜப, தபங்களின் 
புண்ணியத்தை டெபாசிட் மாதிரி கோயில்களில் போட்டு வைத்திருக்கிறார்கள்.
எப்போதெல்லாம் நமக்குத் தேவை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் வங்கிக்குப் போய் டெபாசிட் பணத்தை எடுத்து அனுபவிக்கிறோம் அல்லவா? அதுபோல் அவ்வப்போது ஆலயங்களுக்கும் போய் இந்த ரிஷிகளின் தவத்தினால் ஏற்பட்ட புண்ணியத்தை நாமும் கொஞ்சம் எடுத்துக் கொள்கிறோம்.
அதிர்வலைகள் நிரம்பிய மந்திரங்கள் சொல்லி தெய்வத் திருமேனிகளை ஆராதிக்கின்ற காரணத்தால், ஆலயத்தில் இருந்து ஆத்மார்த்தமான நன்மை வழிபட வருகிறவர்களுக்கு ஏற்படுகிறது.
புனிதம் பெறுவதற்கு எத்தனையோ உபாயங்கள் இருந்தாலும், தனிப்பட்ட மனிதன் ஆலயம் சென்று வணங்கி இவற்றை எல்லாம் சுலபமாகப் பெற வேண்டும்.
தான் உருப்பட வேண்டும் என்று நினைக்கிற மனிதனுக்கு ஆலய வழிபாடு என்பது ஓர் அங்கம்.
ஒரு கோயில் இருந்தால், அந்த ஊரில் வசிக்கின்ற சமூகம் மொத்தமும் மோட்சம் பெறும் என்று கருதக் கூடாது. தனி நபர் ஆலயம் சென்று வழிபட்டால்தான், அவனுக்குப் பலன் கிடைக்கும். இவனைப் போல் ஒவ்வொருவரும் ஆலயம் சென்று வழிபட வேண்டும்.
கோயிலில் பலரும் சேர்ந்து பூஜைகள், உத்ஸவங்கள், கும்பாபிஷேகங்கள் போன்றவற்றைச் செய்கிறோம். நற்காரியங்களில் நமது திரவியம் (பொருள்) சேர வேண்டும் என்பதற்காக பொன்னையும் பொருளையும் அர்ப்பணிக்கிறோம். தவிர சந்தனத்தையும் மலர்களையும் வாரி வாரி வழங்குகின்றோம். பொழுது தவறாமல் இறைவனுக்கு நிவேதனம் செய்கிறோம். பூஜை வேளையா? மேள தாளம் அடித்து ஆனந்தப்படுகிறோம். இப்படிச் செய்கிறோமே... இதன் நோக்கம் என்ன?
ஒன்றே ஒன்றுதான். அது... நன்றிக் கடன்.
அதாவது இறைவனுக்கு நாம் செலுத்துகிற நன்றிக் கடன்!
ஈஸ்வரனிடம் இருந்து இந்த ஜன சமூகம் எண்ணற்ற பலன்களைப் பெறுகிறது.
ஒருவர் நமக்கு ஏதாவது சகாயம் செய்தால், அவருக்கு நாம் நன்றிகளைத் தெரிவிப்பதில்லையா? அதுபோல் சமூகமாகிய நமக்கு ஈஸ்வரன் எண்ணற்ற அனுக்ரஹங்களை வாரி வழங்குகிறார். பதிலுக்கு நாமும் அவருக்கு வாரி வழங்குவதுதான் மேலே சொன்ன அத்தனையும்.

கடவுள்தான் நமக்கு ஆடைகளைக் கொடுக்கின்றார் (இன்றைக்கும் புத்தாடை அணிகின்ற சிலர், அணிந்து கொள்வதற்கு முன் பூஜை அறைக்குச் சென்று புத்தாடையின் ஒரு மூலையில் சந்தனம் மற்றும் குங்குமப் பொட்டுகளை வைப்பார்கள். பிறகு, இறைவனுக்கு மானசீகமாக அர்ப்பணித்துவிட்டு அணிந்து கொள்வது வழக்கம்). அந்த இறைவனுக்கு நாமும் வஸ்திரங்கள் வாங்கித் தர வேண்டாமா?
நித்தமும் சாப்பிடுவதற்கு உணவு தருகின்றான் (ஒவ்வொருவர் சாப்பிடுகின்ற அரிசியிலும் அவரவரது பெயரை கடவுள் எழுதி வைத்திருப்பான் என்று சொல்வார்கள்). கடவுள் பசியாற நாம் அவனுக்கு நிவேதனம் தர வேண்டாமா?
வசதிக்கேற்றவாறு ஆளுக்கு ஒரு வாகனத்தை வைத்துக் கொண்டிருக்கிறோம். இவற்றை நமக்குக் கொடுத்த கடவுளுக்கு நாம் வாகனம் வாங்கித் தர வேண்டாமா? (கோயில்களில் பார்க்கிறோமே... மயில் வாகனம், ரிஷப வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம்... இப்படிப் பலதரப்பட்ட வாகனங்களும் பக்தர்கள் நன்றி உணர்வோடு அர்ப்பணிப்பவை).
இப்படிப் பலவற்றையும் பகவானுக்கு அர்ப்பணிப்பதுதான் நாம் ஆலயம் செல்வதன் நோக்கம். எல்லோரும் கூட்டாகச் சென்று அர்ப்பணித்து ஆனந்தப்பட வேண்டும்.
மனிதன் முக்தி பெறுவதற்கு இதோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது. ஆலயத்தை பக்தி உணர்வுடன் வலம் வர வேண்டும். உள்ளம் கசிந்து இறைவனிடம் பக்தி பண்ண வேண்டும் (இதுபோல் ஈசனிடம் பக்தி செலுத்தி, அவன் திருவடிகளை அடைந்தவர்கள்தான் நாயன்மார்கள்).
மனிதன் தனக்கு உண்டான ஆன்மிகக் கடமைகளை (அனுஷ்டானங்கள்) நித்தமும் இல்லத்தில் இருந்தவாறு மேற்கொள்ள வேண்டும். தவிர, ஆலயத்தில் இருந்து பெறுகிற சக்தியும் ஒரு பக்கம்.
ஆக, அவனவன் மேற்கொள்கிற அனுஷ்டானத்தோடு கோயிலுக்குப் போயும் வேண்டியனவற்றைப் பெற முடியும்’’
 இப்படியெல்லாம் சொல்கிற மகா பெரியவா, நமது பக்தி முறையில் ஏன் ஆர்ப்பாட்டம், மேள தாளம் இவை எல்லாம் இருந்து வருகின்றன என்பதற்கு ஒரு சம்பவத்தை நினைவு கூர்கிறார்.
‘‘ஒரு முறை வெள்ளைக்கார அன்பர் (வெளிநாட்டுக்காரர்) ஒருவர் என்னிடம் வந்தார். புஸ்தகமெல்லாம் எழுதியவர். என்னிடம் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு கேள்வி கேட்டார் . ‘ஏன் உங்கள் மதம் தொடர்பான ஆலயங்களில் இப்படி ஒரே சத்தமும் கூச்சலுமா இருக்கே?’ என்று.
நான் சொன்னேன் .‘சர்ச்சுல, மசூதியில, புத்தவிஹாரத்துல அமைதியான முறையில் ‘பிரேயர்’ பண்றதுபோல் கோயில்களில் செய்யணும் என்பது முக்கிய உத்தேசமில்லை.
எங்களுக்கு ஏகாந்தத்தில் (அமைதியான சூழ்நிலை) தியானம்தான் முக்கியம். கோயில்களில் தியானமும் செய்வோம். எல்லோரும் கூடியும் வழிபாடு பண்ணுவோம். ஆனால், இதற்கு மட்டுமே கோயில்கள் இல்லை.
நாட்டை ஆள்கிற ராஜா நம்மைக் காக்கிறான் 
என்பதற்காக அவனுக்கு அரண்மனை தருகிறோம். அவனுடைய அலங்காரத்தை ஏற்றுக் கொள்கிறோம். பரிவாரம், படாடோபம் எல்லாவற்றையும் கொடுக்கிறோம். மதிக்கிறோம். இது போக ராஜாங்கம் நல்முறையில் நடப்பதற்கு வரியும் தருகிறோம் 
அல்லவா?
அது மாதிரி சர்வலோக ராஜாவாக, காலாகாலத்துக்கும் ரட்சகனாக இருந்து காத்து வருகிற பகவானுக்குப் பொன்னையும் இன்ன பிற பொருட்களையும் மனம் குளிர்ந்து வாரிக் கொடுக்கிறோம். பெரிது பெரிதாகக் கோயில் கட்டி வைக்கிறோம். மேள தாள விமரிசைகளோடு கூடி விழா நடத்துகிறோம். இப்படிப் பல தினுசுகளில் காணிக்கை செலுத்துகிறோம். இப்படித்தான் எங்கள் வழிபாட்டு முறை அமைந்திருக்கிறது.
எனவே, இங்கே அமைதியை எதிர்பார்க்க முடியாது. மேள தாளம், கண்டாமணி, அதிர்வேட்டு எல்லாம் அமர்க்களமும் ஆரவாரமுமாகத்தான் இருக்கும்.
அமைதியாக தியானம் செய்வதற்கு அவரவர் வீடுகளில் அதற்கென்று ஓரிடம் இருக்கும். தவிர ஆற்றங்கரை, குளத்தங்கரை இங்கெல்லாம்கூட உட்கார்ந்து தியானம் செய்வார்கள்’ என்று சொன்னேன்.
அந்த வெள்ளைக்காரரிடம் இப்படிச் சொன்னேன் என்பதற்காக நம்மவர்கள் கோயில்களில் கூட்டம் சேர்த்து இரைச்சல் போட்டு, அரட்டை அடித்துக் கொண்டிருக்கலாம் என்பதற்கு ‘லைசென்ஸ்’ தந்ததாக அர்த்தம் இல்லை.
நான் சொன்ன சத்தம் இத்யாதிகள் எல்லாம் சாஸ்திரப்படி அனுமதிக்கப்பட்டிருக்கும் ஓசைகளைத்தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, மணியடிப்பது, வேத கோஷம் முழங்குவது, பஜனை, மேள தாளம், புறப்பாட்டின்போது வெடி வெடிப்பது ... இவற்றைத்தான் சொன்னேன்.
இன்னொரு விஷயமும் இங்கே முக்கியம்... சாஸ்திரம் சொல்கிறபடி இது போன்ற சத்தங்களுக்கு இடையிலும் மவுனமாக தியானத்திலும் ஒருத்தனால் ஈடுபட முடியும். அதற்கான அபூர்வ சக்தியை இறைவன் கொடுத்திருக்கிறான்.
இதுபோன்ற சத்தம் கேட்கிற ஆலயத்தில் இறைவன் சந்நிதானத்திலோ அல்லது தட்சிணாமூர்த்தி சந்நிதிக்கு எதிரிலோ ஒருவன் ஜபம் பண்ண உட்கார்ந்து விட்டால், அதில் ஒரு லயிப்பு அவனுக்கு ஏற்பட்டு விடும். சுற்றி இருக்கிற எந்தச் சத்தமும் அவன் காதில் விழாது. பகவான் மட்டுமே அவன் மனம் முழுக்க நிறைந்து காணப்படுவார்.
நம் வழிபாட்டு முறையில் அமைதியும் உண்டு; ஆர்ப்பாட்டமும் உண்டு!’’

(ஆனந்தம் தொடரும்)

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

மகா பெரியவா
மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 24

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in