மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 23

மகா பெரியவா
மகா பெரியவாஓவியம்: A.P.ஸ்ரீதர்

எமதர்மன் வந்து இறுதி யாத்திரைக்குத் தன்னை அழைத்துச் செல்வதற்கு முன், காஞ்சிபுரம் சென்று மகா பெரியவாளைத் தரிசித்து விட வேண்டும் என்பது அந்த முதியவரின் ஆசை.
அந்த மகானை ஒரே ஒரு முறை கண்ணார தரிசித்த பின் எமனையே ‘வா.. வா..’ என்று வரவேற்கக்கூட முதியவர் தயாராக இருந்தார்.
ஆனால், ஆசையை நிறைவேற்றும் விதமாக ஆட்டோவிலோ காரிலோ காஞ்சிக்குச் செல்லலாம் என்றால் அதற்கு செலவழிப்பதற்குக் கையில் பணம் இல்லை. அட, அவ்வளவு ஏன்... ஒரு பேருந்தில் பயணித்துக் காஞ்சிபுரம் செல்வதற்குக்கூட வசதி இல்லை. அந்த அளவுக்கு ஏழ்மையும் வறுமையும் முதியவரிடம் ‘உன்னை விட்டு நகர மாட்டேன் பார்’ என்பதுபோல் விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அன்றாடப் பிழைப்பை ஓட்டுவதே அவருக்குப் பெரும்பாடாக இருந்தது.
என்றாலும், ‘தரிசித்தே ஆக வேண்டும்’ என்கிற தீர்மானத்துடன் மனம் தளராமல் மகானிடமே நித்தமும் பிரார்த்தனை செய்த வண்ணம் இருந்தார் முதியவர். தன் மன உறுதியை அவர் தளர விடவில்லை.
முதியவரின் மனக் குரலும் மனக் குமுறலும், மகா பெரியவாளுக்குக் கேட்டிருக்க வேண்டும்!
ஆம்! அவரது பிரார்த்தனை பலித்தே விட்டது.
ஒரு நாள் காலை வேளையில் காஞ்சி மடத்தில் இருந்து ஒரு கார் வந்தது. முதியவரின் வீட்டு வாசலில் நின்றது.
வண்டியில் இருந்து இறங்கிய மடத்து சிஷ்யர் ஒருவர், முதியவரிடம், ‘‘உங்களை மகா பெரியவா அழைச்சிண்டு வரச் சொன்னார்’’ என்றார்.

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் காஞ்சி மகான் மீதான நன்றி உணர்வில் விழிகளின் ஓரம் எட்டிப் பார்க்கும் நீர்த்துளிகளை முதியவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
‘‘இங்கே இருந்துண்டு நான் புலம்பின குரல் காஞ்சில இருக்கிற அந்த மகானுக்குக் கேட்டுடுத்தா? என்னைக் கூட்டிண்டு வரச் சொன்னாரா? அவரை தரிசிக்காம எப்படி நான் மேலுலகம் போகப் போறேன்னு கவலையோட இருந்தேன். என்னோட பிரார்த்தனைக்கும் அவர் செவி சாய்ச்சுட்டார்... அவர் கண்கண்ட தெய்வம்... எல்லோருக்கும் மோட்சம் தரக் கூடிய தெய்வம்’’ என்று ஒரு குழந்தை போல் சொல்லிக் குதூகலித்தார். இரு கைகளையும் அவ்வப்போது குவித்து ஆகாசத்தைப் பார்த்து வணங்கிக் கண்ணீர் சிந்தினார்.
‘‘போகலாமா...? நேரமாகிறது...’’ மகா பெரியவாளி டம் இருந்து வந்த சிஷ்யர், மகானின் உத்தரவை நிறைவேற்றுவதில் கால தாமதம் ஏற்படக்கூடாது என்பதிலேயே குறியாக இருந்தார்.
‘‘உடனே வந்துடறேன்...’’ என்று சிஷ்யரிடம் சொன்ன முதியவர், வீட்டுக்குள் சென்று மகா பெரியவா திருவுருவப் படத்துக்குக் கஷ்டப்பட்டு நமஸ்காரம் செய்தார்.
நமஸ்கரித்து எழுகின்றபோது அந்தத் திருவுருவத் தைப் பார்த்து, ‘‘தோ, வந்துடறேன்... உங்களை தரிசனம் பண்ணத்தான் பொறப்பட்டுண்டிருக்கேன்’’ என்று குரல் தேம்ப தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.
வீட்டை விட்டு வெளியே வந்தார். சிஷ்யரின் கையைப் பிடித்துக்கொண்டு வண்டி ஏறினார். என்ன வோ காரில் ஏறுகிறபோது வீட்டையே ஏக்கத்துடனும் பாசத்துடனும் திரும்பத் திரும்பப் பார்த்தார்.
பின்சீட்டில் முதியவரை சவுகரியமாக அமர வைத்த சிஷ்யர், முன்சீட்டில் டிரைவருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டார்.

கார் புறப்பட்டது. காஞ்சியை நோக்கி விரைந்தது.
‘இன்னும் சற்று நேரத்தில் தனது ஆசை நிறைவேறப் போகிறது. மகானைத் தரிசிக்கப் போகிறோம்’ என்று முதியவர் நினைக்க நினைக்க... அவருக்கு பிரமிப்பு இன்னும் விலகவில்லை. மனசுக்குள் உற்சாகம் தானா கவே கூடியது. ‘மகா பெரியவா... மகா பெரியவா’ என்று வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
திடீரென ஏதோ நினைத்தவர் போல், முன்பக்கம் அமர்ந்திருக்கிற சிஷ்யரைப் பார்த்தார். ‘‘நான் ஒன்றும் அத்தனை பெரிய ஆள் இல்லை. எப்பவோ.. எத்தனை வருஷங்களுக்கு முந்தின்னுகூட நினைவில் இல்லை. அப்ப வந்தப்ப ஒரு முறை மடத்துல அந்தப் பரப்பிரம்மத்தை நேருக்கு நேரா தரிசனம் பண்ணி இருக்கேன். அவ்ளோதான்... அந்த ஆசிர்வாதம்
தான் இத்தனை வருடமா என்னை ஓட வெச்சிருக்கு. என்னமோ, போற வேளை வந்தாச்சு. காலத்தோட போக்குக்குக் கட்டுப்பட்டவா நாம அத்தனை பேரும். என்ன நடக்கிறதோ, அதை அப்படியே ஏத்துக்கணும். இருந்தாலும், என் மனசுல சாகறதுக்கு முன்னாடி அந்த நடமாடும் தெய்வத்தைத் தரிசிக்கணும்ங்கிற ஆசை... அது இப்ப... இன்னும் கொஞ்ச நேரத்துல நிறைவேறப் போறது.
அவரே கூப்பிட்டு தரிசனம் கிடைக்கறதுன்னா, கூப்பிடப்படுகிறவர் பெரிய பண்டிதரா இருக்கணும். ஆனா, சாதாரண பாமரனான என்னையும் ஒரு வண்டி அனுப்பிச்சு ‘வா வா’னு கூப்பிடறாரே... நான் எவ்வளவு புண்ணியம் பண்ணி இருக்கேன்னு தெரியலை. பெரியவா... மகா பெரியவா...’’ என்று கைகளைக் கூப்பி வணங்கினார். ‘பெரியவா.... பெரியவா’ என்றபடி அரற்ற ஆரம்பித்தார்.
முதியவர் பேசுகிற எல்லாவற்றையும் காதுகளில் வாங்கிக்கொண்டு வெறுமனே ‘ம்ம்ம்...’ மட்டும் கொட்டிக் கொண்டு வந்தார் சிஷ்யர்.
மகா பெரியவாளுக்குப் பணிவிடை செய்பவர் என்றால், அவரிடம் வினயம், பணிவு, சாந்தம், பொறுமை போன்ற குணங்களும் அமையப் பெற்றிருக்க வேண்டும். இல்லை என்றால், மகானுக்குப் பணிவிடை செய்ய சந்தர்ப்பம் கிடைக்காது. கடவுளுக்கே கைங்கர்யம் செய்வது என்றால் சும்மாவா?

காரில் பயணித்துக் கொண்டிருக்கிற சிஷ்யரும் அப்படிப்பட்டவர்தான். பொறுமை, பணிவு எல்லாமும் அவரிடம் அபரிமிதமாகக் குடி கொண்டிருந்தன.
முதியவர் சொல்கிற எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்குத் தன் உணர்வுகளை மட்டுமே பதிலாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். தப்பித் தவறிக்கூட தன் மேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்ளும் விதமாக எந்த ஒரு வார்த்தையும் பேச முற்படவில்லை.
சீரான ஒண்ணரை மணி நேரப் பயணத்துக்குப் பின் கார் காஞ்சி  மடத்தின் வாசலில் நின்றது.
மகா பெரியவா மடத்தினுள் இருந்தால், ஒரு பரபரப்பு இயல்பாக வாசலிலேயே காணப்படும்.
நிறைய வண்டிகள் நிற்கும். பக்தர்கள் உள்ளே போவார்கள்; வெளியே வருவார்கள்.
ஆனால், எந்தப் பரபரப்பும் இல்லை. அப்போதுதான் மடத்தினுள் இருந்து வெளியே வந்த பக்தர் ஒருவர், இந்த சிஷ்யரைப் பார்த்து விட்டு, ‘‘பெரியவா இப்பதான் காமாட்சி கோயிலுக்குப் புறப்பட்டுப் போனார். ஒன்னை அங்கயே வரச் சொல்லிட்டார்’’ என்றார்.
நல்லவேளை, முதியவர் வண்டியில் இருந்து கீழே இறங்கவில்லை. உள்ளேயே அமர்ந்திருக்கிறார்.
சிஷ்யர் வண்டியை நோக்கி நடந்தார். கார் கதவைத் திறந்து வழக்கம்போல் முன் சீட்டில் அமர்ந்தார். ‘காமாட்சி கோயிலுக்கு வண்டியை விடுப்பா’ என்று டிரைவருக்கு உத்தரவிட்டார்.

‘‘பெரியவா இங்க இல்லையா?’’ .. காட்சிகளின் வேகத்தைப் பார்த்துவிட்டு முதியவர் கேட்டார்.
‘‘ஆமா... ஒண்ணும் கவலைப்படாதீங் கோ... காமாட்சி அம்மன் கோயிலுக்குப் போயிருக்காராம். ஒங்களை அங்கே வரச் சொல்லி உத்தரவு போட்டுட்டுப் போனா ராம். அங்கதான் உங்களுக்கு தரிசனம்.’’
முதியவர் நிதானமாகக் கேள்வி கேட்டு, சிஷ்யர் அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கையில் காமாட்சி அம்மன் ஆலயத்தை அடைந்து விட்டது கார்.
கோயில் வாசலுக்கு அருகிலேயே கார் நின்றது.
காமாட்சி அம்மன் ஆலயம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
அம்பாள் தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே ஓரிடத்தில் விஸ்ராந்தியாக அமர்ந்திருந்தார் நடமாடும் தெய்வமான பெரியவா.
காமாட்சியைத் தரிசிக்க வந்த பக்தர்கள் கூட்டம், நடமாடும் தெய்வத்தையும் தரிசிக்க வேண்டும் என்கிற ஆவலில் அவரை பயபக்தியுடன் சூழ்ந்து கொண்டது.
முதியவரை ஏற்றி வந்த கார் நிற்பதோ, காமாட்சி கோயில் வாசலில். எனவே ஒரு சம்பிரதாயத்துக்கு சிஷ்யர் கேட்டார்: ‘‘பெரியவா, இங்கதான் கோயில் வாசல்ல தரிசனம் தந்துண்டிருக்கார். நாம இப்ப கோயில் வாசல்ல இருக்கோம். உள்ளே போய் காமாட்சியை தரிசனம் பண்ணிட்டு அப்புறம் பெரியவாகிட்ட போகலாமா?’’
முதியவர் நிர்தாட்சண்யமாக மறுத்தார். ‘‘முதல்ல பெரியவா தரிசனம்... அப்புறம்தான் எல்லாம்’’ தீர்மானமாகச் சொன்னார்.
(ஆனந்தம் தொடரும்)

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

மகா பெரியவா
மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 22

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in