திருவிழா கோலம் பூண்டது மதுரை... மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண கோலாகலம்!

மதுரையில் நடைபெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.
மதுரையில் நடைபெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்.12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

பட்டாபிஷேகம்
பட்டாபிஷேகம்

மீனாட்சியம்மன் மதுரை மாநகரின் ஆட்சிப் பொறுப்பேற்கும் விதமாக நேற்று முன்தினம் பட்டாபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, மீனாட்சி அம்மன், சிவபெருமானை போருக்கு அழைக்கும் நிகழ்வான திக் விஜயம் நேற்று நடைபெற்றது.

திக் விஜயம்
திக் விஜயம்

இதையடுத்து, சித்திரைத் திருவிழாவின் முத்திரைப் பதிக்கும் நிகழ்ச்சியான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்கள், தங்கள் கழுத்தில் உள்ள தாலியை மாற்றி புதுத்தாலியை அணிந்து கொண்டனர். இந்தத் திருக்கல்யாணத்தை தரிசிப்பவர்களுக்கு நிறைவான வாழ்க்கையும், திருமணம் தடைபடுபவர்களுக்கு நல்ல வரனும் அமையும் என்பது ஐதீகமாகும்.

மீனாட்சி திருக்கல்யாணத்தைக் காண மதுரை மாவட்டம் மட்டுமின்றி தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் குவிந்துள்ளதால் மதுரை நகரமே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு, 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மீனாட்சியம்மன்
மீனாட்சியம்மன்

திருக்கல்யாணம் முடிந்த பின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளிக்க உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து. மாலையில் சுந்தரேஸ்வரர் யானை வாகனத்திலும், மீனாட்சி பூப்பல்லக்கிலும் வீதி உலா வருவார்கள். இதனைத் தொடர்ந்து, நாளை (ஏப்.22) திருத்தேர் உற்சமுமும், செவ்வாய்க்கிழமை கள்ளழகர் வைகையில் எழுந்தருளலும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in