கொடியேற்றத்துடன் தொடங்கியது மதுரை சித்திரைத் திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்ற காட்சி.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்ற காட்சி.படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பக்தர்களின் வாழ்த்தொலி, பக்தி கோஷம் முழங்க இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாக்களின் நகரான மதுரையில் ஆண்டுக்கு 270 நாட்கள் ஏதாவது விழா நடந்துகொண்டேயிருந்தாலும், அவற்றுக்கெல்லாம் சிகரமாகத் திகழ்வது மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா. இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா இன்று (ஏப்ரல் 4) காலை 11 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் கொடிக்கம்பம் அருகே எழுந்தருளினர். சிறப்பு பூஜை, தீபாராதனைகளைத் தொடர்ந்து, பக்தர்களின் வாழ்த்தொலி, பக்தி கோஷம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. கரோனா தடைக்குப் பிறகு நடைபெறும் நிகழ்ச்சி என்பதால், கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இன்று இரவு 7 மணிக்கு சுவாமியும், அம்மனும் கற்பக விருட்சம், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளிலும் வலம்வருகின்றனர். இவ்வாறு தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்மனும் காலையும் மாலையும் வீதி உலா வருவார்கள்.

கொடிக்கம்பம் அருகே பிரியாவிடையுடன் எழுந்தருளிய சுந்தரேஸ்வரர்.
கொடிக்கம்பம் அருகே பிரியாவிடையுடன் எழுந்தருளிய சுந்தரேஸ்வரர்.படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
கொடிக்கம்பம் அருகே எழுந்தருளிய மீனாட்சி அம்மன்
கொடிக்கம்பம் அருகே எழுந்தருளிய மீனாட்சி அம்மன்படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

திருக்கல்யாணம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத் திருவிழா வருகிற 14-ம் தேதியும், அன்று இரவு பூப்பல்லக்கில் மாசி வீதிகளில் ஊர்வலமும், 15-ம் தேதி கோயில் தேரோட்டமும் நடைபெறுகிறது. இதற்கிடையே கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவும் தொடங்கிவிடும் என்பதால், வருகிற 16-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் நடைபெறுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in