பக்தர்கள் அதிர்ச்சி...திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்!

கேமராவில் சிக்கிய சிறுத்தை
கேமராவில் சிக்கிய சிறுத்தை

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை, கரடி நடமாட்டத்தால் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயில்
திருப்பதி ஏழுமலையான் கோயில்

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீ வாரி மெட்டு நடைபாதைகளில் நடந்து சென்று தரிசனம் செய்து வருகின்றனர். ஜூன் 24-ம் தேதி கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த கெளசிக் என்ற 4 வயது சிறுவன் பெற்றோருடன் திருப்பதி நடைபாதையில் சென்று கொண்டிருந்த போது சிறுத்தை ஒன்று கவ்விச் சென்றது.

பக்தர்களும், காவல் துறையினரும் துரத்தியதால் அது சிறுவனை வனப்பகுதியில் விட்டுச் சென்றது. அந்த சிறுவன் மருத்துவமனையில் ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான். கௌசிக்கை தாக்கிய சிறுத்தையை பிடிப்பதற்காக வைக்கப்பட்ட கூண்டில் இரண்டு வயது கொண்ட சிறுத்தை ஒன்று பிடிபட்டது. அதை பாக்கராபேட்டை வனப்பகுதியில் விட்டனர்.

இதே போல திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக சென்ற சிறுமி லக்ஷிதாவை கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி சிறுத்தை தூக்கிச் சென்று கடித்துக் குதறியது. இந்த சம்பவத்தில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். பெற்றோர்களுடன் அலிபிரி நடைபாதையில் நடந்த சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்து கொன்றதையடுத்து சிறுத்தையை கூண்டு வைத்து அதிகாரிகள் பிடிக்க முடிவு செய்தனர்.

அதன்படி இரண்டு நடைபாதைகளில் உள்ள வனப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் கூண்டு அமைக்கப்பட்டது. இந்த கூண்டுகளில் 4 சிறுத்தைகள் பிடிபட்டன. இந்த சிறுத்தைகள் திருப்பதி வன உயிரின பூங்காவில் விடப்பட்டன. இந்நிலையில், திருப்பதி நடைபாதையில் சுற்றி வந்த மேலும் ஒரு சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.

இந்த நிலையில் மீண்டும் சிறுத்தை, கரடி நடமாட்டம் உள்ளதாக தேவஸ்தானம் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், "திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வேண்டுதலின்படி, சுவாமி தரிசனத்திற்காக நடைபாதை வழியாக செல்லும் அலிபிரி மலைப்பாதையில் இம்மாதம் 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அருகே சிறுத்தை மற்றும் கரடி நடந்து செல்வது வனத்துறை கேமராவில் பதிவானது. எனவே, நடைபாதையில் பக்தர்கள் விழிப்புடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், பக்தர்கள் குழுவாகச் சேர்ந்து செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. திருப்பதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in