குங்குமத்தில் ஆரத்தி ஏன்?

குங்குமத்தில் ஆரத்தி ஏன்?

எந்த விதமான பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் போக்கும் எளிய பரிகாரங்கள் சடங்குகளாகவும் சம்பிரதாயங்களாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன.

பொதுவாக, புதுமணத் தம்பதியை ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள். அதேபோல, நல்லநாள் பெரியநாள் என முக்கிய தருணங்களில் ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைப்பார்கள். குங்குமம் கலந்த நீரைக் கொண்டு, அதில் வெற்றிலை வைத்து அதன் மேலே சூடமேற்றி ஆரத்தி எடுப்பது இன்றைக்கும் கிராமங்களில் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

ஆரத்தி எடுக்கும்போது பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலையின் மீது எரிகின்ற கற்பூரம் ஆகியவற்றுக்கு தீய சக்திகளை விரட்டும் சக்தி உண்டு என்கிறார்கள் சாஸ்திர வல்லுநர்கள். மேலும், மங்கலகரமான காரியங்கள் அனைத்துக்குமே குங்குமமும் வெற்றிலையும் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது.

வீட்டு வாசலில் இப்படி திருஷ்டி கழிக்கும்போது, துர்தேவதைகள் வாசலுடன் திரும்பிச் சென்றுவிடும் என்றும் அவர்களைத் துஷ்ட சக்திகள் இனி தொடராது என்பதும் இப்படி ஆரத்தியெடுத்து வாசலில் குங்குமம் கலந்த நீரையும் எரிகின்ற சூடத்தையும் வைப்பதால், கண் திருஷ்டி கழியும்; உடலின் அசதி கைகால் குடைச்சல் முதலானவை நீங்கும் என்பது ஐதீகம்.

வீட்டு விசேஷங்களின் போது, வாழைமரத்தை வாசலில் கட்டுவார்கள். இந்தக் குடும்பம் வாழையடிவாழையென செழிக்கவேண்டும் என்பதற்காக வாழைமரத்தைக் கட்டுவார்கள் என்றாலும் வாழைக்கு தோஷங்களையும் திருஷ்டியையும் போக்கும் வல்லமை உண்டு என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.

திருச்சிக்கு அருகே உள்ள திருப்பைஞ்ஞீலி திருத்தலத்தில் வாழைமரத்துக்குத் தாலி கட்டும் சடங்கு அனுஷ்டிக்கப்படுகிறது. வாழைக்குத் தாலி கட்டினால், தோஷம் நீங்கும்; திருமணம் விரைவில் நடந்தேறும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.

அமாவாசை, பெளர்ணமி, அஷ்டமி, நவமி, செவ்வாய், வெள்ளி முதலான நாட்களில் காலையும் மாலையும் வீட்டிலும் தொழில் செய்யும் இடத்திலும் சாம்பிராணியுடன் கருவேலம்பட்டைத் தூள், வெண் கடுகுத்தூள் ஆகியவற்றைக் கலந்து தூபம் காட்ட, திருஷ்டி நீங்கும்; தீய சக்தி விலகும் என்பது ஐதீகம்.

’ஒரு கண்ணு போல ஒரு கண்ணு இருக்காது’ என்று திருஷ்டியைச் சொல்லுவார்கள். அதனால்தான் குழந்தைகளுக்கு நெற்றியிலும் கன்னத்திலும் மையையே பொட்டாக வைக்கும் வழக்கமும் இருக்கிறது. கிராமங்களில், இன்றைக்கும் இவையெல்லாம் நடைமுறையில் இருக்கின்றன. நகர வாழ்க்கையில் சடங்கு சாங்கியங்களைப் பின்பற்றுவதை கொஞ்சம்கொஞ்சமாக நாம் விட்டுவிட்டோம்; அவற்றை ஒருபோதும் விடக்கூடாது என வலியுறுத்துகின்றனர் ஆச்சார்யர்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in