மேளதாளம் முழங்க தவளைகளுக்கு திருமணம் - மழை வேண்டி நூதன வழிபாடு செய்த கோவை மக்கள்

கோவையில் மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்
கோவையில் மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்

கோவையில் தொடர்ந்து மழை பெய்ய வேண்டியும், பொதுமக்கள் நலமாக இருக்க வேண்டியும் தொண்டாமுத்தூர் அருகே உள்ள வேடப்பட்டி ஊர் பொதுமக்கள், தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தமிழ்நாட்டில் மழை வேண்டியும், மக்கள் நலனுக்காகவும் கழுதை திருமணம், வேம்பு மரத்திற்கும் அரச மரத்திற்கும் திருமணம், கன்னிமணம் போன்ற நூதனத் திருமணங்கள் நடத்தி வைத்தால் மழை பொழியும் என்பது ஐதீகம். அந்த வகையில் கோவையில் உள்ள வேடப்பட்டியில் தவளைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த திருமணத்தில் ஆண் தவளைக்கு மாப்பிள்ளை போல் வேடம் அணிந்து குரும்பபாளையம் வீதிகள் வழியாக மாப்பிள்ளை ஊர்வலம் மேளதாளம் முழங்க நடைபெற்றது. அதைத் தொடர்ந்து குரும்பபாளையத்தில், பெண் தவளைக்கு சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டு பெண் அழைப்பு ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட ஆண் தவளை
ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட ஆண் தவளை

பின்னர் குரும்பபாளையத்தில் உள்ள விநாயகர் கோயிலில் ஊர் பொதுமக்கள் தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். அப்போது கூடியிருந்த பொதுமக்கள் மங்கள அரிசியை தூவி தவளைகளை வாழ்த்தினர். தொடர்ந்து மஞ்சள் நீர் தொட்டியில் தவளைகள் விடப்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் ஊரை சுற்றி வந்த தவளைகள், குடும்பம் நடத்துவதற்காக கிணற்றில் விடப்பட்டது.

சீர்வரிசையுடன் பெண் தவளை
சீர்வரிசையுடன் பெண் தவளை

இந்த நிகழ்ச்சி 18 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்த திருமண நிகழ்வை காண ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர். இதற்காக அந்த ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, உணவு சேகரித்து அதை முனியப்பன் கோயிலில் படைத்து மூன்று கன்னி பெண்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்த திருமண நிகழ்ச்சி முடிந்தவுடன், மழை வேண்டி குரும்பபாளையத்தில் உள்ள துரை வீரசாமி கோயிலில் கிடா வெட்டி படையல் வைத்து பூஜை நடைபெறும். இரவு சாலையில் பொதுமக்கள் அமர்ந்து படையல் சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், இவை முடிந்த பின்பு மழை பெய்யும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

தவளைகள் குடும்பம் நடத்த கிணற்றில் விடப்பட்டன
தவளைகள் குடும்பம் நடத்த கிணற்றில் விடப்பட்டன

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in